Enable Javscript for better performance
15. உங்க வீடு.. உள்ள வாங்க!- Dinamani

சுடச்சுட

  

  15. உங்க வீடு.. உள்ள வாங்க!

  By பத்மன்  |   Published on : 12th April 2017 12:00 AM  |   அ+அ அ-   |    |  


  மனிதரின் அடிப்படைத் தேவைகள் மூன்று. அவை - உணவு, உடை, உறைவிடம். இதில் முதலிரண்டு தேவைகளையும் எளிதில் நிறைவேற்றிக்கொண்டுவிட முடியும். ஆனால், மூன்றாவது அத்தியாவசியத் தேவையான உறைவிடத்தைப் பூர்த்திசெய்வதற்கு மனிதன் கூடுதலாகச் செயலாற்றவேண்டி உள்ளது. அதிலும், உறைவிடத்தை அதாவது வீட்டை தனக்கென சொந்தமாக அமைத்துக்கொள்வது மிகவும் கடினமான செயலாகவே உள்ளது.

  ‘வீட்டைக் கட்டிப் பார்’ என்ற பழமொழியை சும்மாவா சொன்னார்கள்? அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும், கட்டிய வீடு இப்போது சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதனை வாங்குவதற்குத்தான் எத்தனைப் பிரயத்தனம்? இப்போதுள்ள விலைவாசி நிலவரத்தால், எல்லோராலும் சொந்த வீடு எளிதில் வாங்கிவிட முடிவதில்லை. அதேநேரத்தில், எல்லோருக்கும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், ஏதாவது ஒரு வழியில் சொந்த வீடு அமைவதற்கான வாய்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோர் சொந்த வீட்டுக்கு அதிபதியாகிறார்கள். அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாதவர்கள், ‘இருப்பவருக்கு ஒரு வீடு, இல்லாதவர்க்குப் பல வீடு’ என்று தம்மைத் தேற்றிக்கொள்கிறார்கள்.

  தம்மால் கடினமாக உழைக்கக்கூடிய வயதில் வாளாவிருக்காமல் நன்கு உழைத்துப் பொருளீட்டி, கிடைத்த வாய்ப்புகளைக் கூர்மையாக நுணுகிப் பார்த்துப் பயன்படுத்திக்கொள்வோருக்கு சொந்த வீடு கடினமான காரியமல்ல. ஆகையால், காலத்தே பயிர் செய்ய வேண்டும். ஓடியாடி உழைக்கின்ற காலத்தில் சொந்த வீடு முயற்சியில் இறங்காமல், நாடி நரம்பு தளர்ந்த காலத்தில் அப்போதே வாங்கியிருக்கலாமோ என்று அலட்டுவதில் பயனில்லை.

  பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
  தீராமை ஆர்க்கும் கயிறு. (481)

  ‘காலம் அறிதல்’ என்னும் அதிகாரத்தின் கீழ் வரும் குறள் இவ்விதம் கூறுகிறது. உரிய காலத்தை உணர்ந்துகொண்டு அதற்குப் பொருந்துமாறு ஆராய்ந்து செயல்படுகின்ற நடவடிக்கையானது, திருவினை அதாவது செல்வத்தை நம்மிடமிருந்து நீங்கிவிடாமல் கட்டிவைத்திருக்கும் கயிறுபோலப் பயன்படுகிறது என்று இக் குறளுக்குப் பொருள். செல்வத்தைக் கட்டி வைப்பதற்கு மட்டுமல்ல, அச் செல்வத்தைக் கொண்டு நமக்குரிய வீட்டைக் கட்டிக்கொள்வதற்கும் காலத்தோடு பொருந்துமாறு செயல்படுதலே உறுதுணை புரிகிறது.

  பொதுவாக, நிரந்தர வேலையொன்றில் அமர்கின்ற இளமைப் பருவத்திலேயே சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டுவிட வேண்டும். முடியாவிட்டால், நடுத்தர வயதின் தொடக்கத்திலாவது சொந்த வீடு முயற்சியில் இறங்கிவிட வேண்டும். ஏனெனில், சொந்த வீடு என்பது பெரும்பாலும் சொந்தப் பணத்தில் சாத்தியமாவதில்லை, கடனுதவி மூலமே கைகூடுகின்றது. அத்தகைய நிலையில், இளவயதில் இம்முயற்சியில் இறங்கும்போது தவணைத் தொகைகளை முறையாகத் திருப்பிச் செலுத்தி, குறுகிய காலத்துக்குள் நாம் கடன் சுமையில் இருந்து விடுபட்டு, பிற்காலத்தை குறிப்பாக முதுமையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க முடிகிறது.

  முழுக்க முழுக்க சொந்தப் பணத்தில்தான் வீடு கட்ட வேண்டும் என்ற நிலைமை தற்போது இல்லை. ஓரளவு தொகை, அதாவது வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு அலகு ஒன்றை வாங்குவதற்குத் தேவையான பணத்தில் சுமார் 15 சதவீதத் தொகை நம்மிடம் இருந்தால் போதுமானது. மீதித் தொகையை கடனுதவியாகத் தருவதற்கென்றே ஹெச்.டி.எஃப்.சி. போன்ற வீட்டுவசதிக் கடனுதவி நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வீட்டுவசதிக் கடனுதவித் திட்டங்களோடு பல்வேறு வங்கிகளும் காத்திருக்கின்றன. 

  அதேநேரத்தில், அடிப்படை முதலீடாக நாம் இடவேண்டிய 15 சதவீதத் தொகை என்பதும் குறைவான பணம் அல்ல. அதையும் நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஃபிளாட் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பு அலகொன்றின் விலை ரூ.60 லட்சம் என்றால், குறைந்தபட்சம் நம்மிடம் ரூ.9 லட்சம் (பத்திரப் பதிவுச் செலவு சேர்க்காமல்) இருக்க வேண்டும். அத் தொகையை உரிய முறையில் நாம் சேமித்து வைத்திருக்க வேண்டும். அல்லது நம்மிடமுள்ள நகைகள் உள்ளிட்டவற்றை விற்று (அடைமானம் வைப்பதைவிட விற்பதே மேலானது) உரிய தொகையைத் திரட்டி வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், ‘அதெல்லாம் பார்த்துக்கலாம்’ என்று அங்கே இங்கே புரட்டிப் பணத்தைப் பெற்று, மேற்கொண்டு கடனும் வாங்கினால், கடனுக்கான மாதத் தவணைத் தொகையோடு வெளியில் புரட்டிய பணத்துக்கு வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிய தொகையும் சேர்ந்து நமது கழுத்தை இறுக்கிவிடும். இது நல்லதல்ல. முன்கூட்டியே தனது பண வலிமையை உயர்த்திக்கொண்டு பிறகுதான் சொந்த வீடு முயற்சியில் இறங்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் ‘வலி அறிதல்’ அதிகாரத்தின்கீழ் திருவள்ளுவர் நமக்கு அறிவுறுத்தியிருப்பதைக் காண்போம்.

  அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
  வியந்தான் விரைந்து கெடும். (474)

  அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் எனப் பிரித்துப் படிக்க வேண்டும். அமைந்துள்ள நிலைமைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளத் தெரியாதவன், தமது வலிமையின் (வளமையின்) அளவை அறிந்துகொள்ளாதவன், தன்னைப் பெரிதாக நினைத்துக்கொண்டு தன்னைத் தானே வியந்துகொள்பவன் விரைவில் கெட்டழிந்து போவான் என்று இக்குறள் எச்சரிக்கிறது.

  வீடு என்னும் சொத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமான குறள் இது. தமக்குள்ள சூழ்நிலைகள் - வசதி வாய்ப்புகள் என்ன, அவற்றை வீடு வாங்கும் முயற்சிகளில் பயன்படுத்திக் கொள்ள இயலுமா என்பதை முதலில் ஒரு முதலீட்டாளர் அதாவது வீடு வாங்குபவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்குப் பின்னர், தம்மிடமுள்ள பண வலிமை, பணத்தை மேலும் சேர்ப்பதற்கான உடல் வலிமை, மன வலிமை ஆகியவற்றையும் அளந்துபார்த்து அறிய வேண்டும். இவற்றையெல்லாம் சரிசெய்துகொண்டு, பிறகு வீடு வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும். அவ்வாறில்லாமல் அசட்டுத் துணிச்சலாக தனக்குத்தானே பெருமை பீற்றிக்கொண்டு செயலில் இறங்கினால், ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ என்ற கூற்றுக்கு இணங்க, கையில் உள்ள பணத்தையும் கரைத்துச் சென்றுவிடும்.

  ஆகையால், நமது தற்போதைய சேமிப்பையும் இடைவழியில் மேற்கொண்டு சேமிப்பாகவோ இதர வருமானமாகவோ சேர்க்க வாய்ப்புள்ள பணத்தின் அளவையும் முதலில் கணக்கிட வேண்டும். அவ்வகையில் உறுதி செய்துகொண்ட பின், எந்த அளவுக்கு நமக்குக் கடன் தொகை தேவைப்படும், அதில் எவ்வளவு கிடைக்கும், அத் தொகையை எத்தனை ஆண்டுக்காலத்தில் எவ்வளவு மாதத் தவணைத் தொகையாகத் திருப்பிச் செலுத்த இயலும் என்பதையெல்லாம் கணக்கிட வேண்டும். விரைவாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கருதி, கூடுதல் மாதத் தவணையைத் தேர்ந்தெடுத்தால், பிறகு நமது மாதாந்திரத் தேவைகளுக்குக்கூடப் பணம் போதாமல் அவதிப்பட நேரிடும். அதேபோல கடனைத் திருப்பிச் செலுத்த நீண்ட ஆண்டு காலத்தைத் தேர்ந்தெடுத்தால், நாம் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையும் அதற்கேற்ப கூடுதலாக இருக்கும். ஆகையால், நம்மால் திருப்பிச் செலுத்தத்தக்க தொகை, மாதத் தவணைகள் ஆகியவற்றை மிகவும் கடினமாகவும் இல்லாமல், மிகவும் தளர்வாகவும் இல்லாமல் சரியான அளவில் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இந்த பேலன்ஸ் இல்லாவிட்டால் பிறகு தடுமாற நேரிடும்.

  வீட்டுவசதிக் கடனுதவி வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை இதற்கான பல்வேறு கணக்கீட்டு முறையை நம்மிடம் காட்டும். அவற்றில் நமக்கு உரியதைத் தேர்ந்தெடுத்து அவ் வகையில் கடனுதவி பெற வேண்டும். மனையாக வாங்கி வீடு கட்டலாம் என்று கருதினால், மனையை நமது சொந்தச் செலவில்தான் பெரும்பாலும் வாங்க நேரிடும். மனை வாங்க வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதற்கான வட்டி, வீட்டுவசதிக் கடனுதவியைவிட அதிகமாகவே இருக்கும். ஆகையால், வீட்டுவசதிக் கடனுதவி பெற்று வீடாக வாங்குவதே சிறந்தது.

  இவ்வாறு வீடு வாங்கும்போது, அதற்குரிய நிலத்தில் வில்லங்கம் ஏதும் இல்லையா என்பதை முதலி்ல் உறுதி செய்துகொள்ள வேண்டும். கடனுதவி பெற்று வீடு வாங்கும்போது குறி்ப்பிட்ட வங்கி சார்ந்த நிபுணர்களே இதை நமக்காக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு கடன்தொகை முறையாகத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதால் சரியாக ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புதல் வழங்குவர். ஆகையால், கடனுதவி பெற்று வீடு வாங்கும்போது இவ்வகையில் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். அதேநேரத்தில், நாம் வாங்கவிருக்கும் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு நமக்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருக்கிறதா, அதன் அமைவிடம் நமக்குப் பயன்படும் வகையில் உள்ளதா - அதாவது மருத்துவமனை, கல்வி நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற வசதிகள் வீட்டுக்கு அருகிலேயே உள்ளனவா என்பதை நாம்தான் சோதித்துப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். தேவையான சாலை வசதி, தெரு மின்விளக்கு வசதி, இதர வசதிகளை நாம்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது மறைமுகச் செலவுகள் (ஹிட்டன் காஸ்ட்) எவ்வளவு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல், நமக்கு விற்கப்படும் குடியிருப்பு அலகின் மொத்தப் பரப்பளவு எவ்வளவு, அதில் நாம் குடியிருப்பதற்கான பகுதியின் (கார்ப்பெட் ஏரியா) பரப்பளவு எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கார்ப்பெட் ஏரியா போக பொதுவான இடத்துக்கு விடப்படுகின்ற பகுதியின் அளவு மிகுதியாக இல்லாமல், அதாவது 20-25 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடு கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளவற்றையும், இதர விவரங்களையும் நன்கு படித்துப் பார்த்து தெளிவு பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதுபோக, நாம் தேர்ந்தெடுக்கும் இதர வீட்டுத் தேவைகளை ஒப்பந்ததாரரே செய்து தரும் பட்சத்தில், உதாரணத்துக்கு அலமாரிகள், பரண்கள், அவற்றுக்கு மேற்கொள்ளப்படும் மரச்சாமான் (உட் ஒர்க்) வசதி, நவீன சமையலறை வசதி (மாடுலர் கிச்சன்) போன்ற வசதிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், பிறரிடம் அதே பணிகளை ஒப்படைப்பதைவிட கூடுதல் செலவு பிடிப்பதாக அவை இல்லையா என்பதையும் நாம் தெரிந்துகொண்டு, உறுதி செய்ய வேண்டும்.

  நாம் வாங்குகின்ற வீட்டின் தற்போதைய மதிப்பு, எதிர்காலத்தில் எந்த அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, நகருக்குள்ளேயே இருக்கும் வீட்டைவிட, புறநகர்களில், நகரை ஒட்டிய கிராமப் பகுதிகளில் இருக்கும் வீட்டின் மதிப்பு குறைவாக இருக்கும். அதேவேளையில் நகரம் வளர்ச்சி அடையும்போது நகருக்குள் இருக்கும் வீட்டின் மதிப்பு உயர்வதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மதிப்பு உயரும் வாய்ப்பு இதுபோன்ற வீடுகளுக்கு உண்டு. அவற்றையும் நாம் மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். தற்போது சாலை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் குறைவாக இருந்தாலும் கூடிய விரைவில் அவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கேற்ப வீட்டின் சொத்து மதிப்பு உயரும். 

  வருமான வரிச் சலுகை

  தற்காலத்தில் பலர் சொந்த வீடு வாங்குவதற்கு, எளிதில் கிடைக்கும் வீட்டுவசதிக் கடனுதவி ஓர் முக்கியக் காரணம். அதேநேரத்தில் இந்த வீட்டுவசதிக் கடனுதவி, வருமான வரிச் சேமிப்புக்கும் பயன்படும் கூடுதல் உபயோகத்தையும் தருகிறது. மாதத் தவணையாகத் திருப்பிச் செலுத்தப்படும் கடனின் பகுதி மற்றும் அதற்கான வட்டித் தொகைக்கு அதற்குரிய பிரிவுகளின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. ஆகையால், வீட்டுவசதிக் கடனுதவி பெற்று வீடு வாங்கியிருக்கும்பட்சத்தில், இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டு வருமான வரி செலுத்தப்பட வேண்டியதில்லை. 

  தற்போதுள்ள நிலவரப்படி வீட்டுவசதிக் கடனுதவிக்காகத் திருப்பிச் செலுத்தப்படும் அசல் தொகையில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் தொகை வரை வருமான வரி விலக்கு பெறலாம். இதேபோல் செலுத்தப்படும் வட்டித் தொகையில், நாமே வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் அல்லது வீடு காலியாக இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம். வீட்டை மற்றொருவருக்கு வாடகைக்கு விடுகின்றபட்சத்தில் வட்டித்தொகை வரி விலக்குத் தொகைக்கு வரம்பு இல்லை. அதேநேரத்தில், அந்த வீட்டின் மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்தை நமது வருமானக் கணக்கில் காண்பிக்க வேண்டும். இவ்வாறாக, வீட்டுவசதிக் கடனுதவியால் ஒருபுறம் நமக்கு வருமான வரி விலக்கு கிடைப்பதோடு, மறுபுறம் நமக்கு ஒரு சொத்தும் சேர்க்கப்படுகிறது.

  காப்பீடு அவசியம்

  சொந்த வீடு வாங்கும்போது, அதற்குரிய காப்பீடுகள் அவசியம். வீட்டுக்கு ஏற்படும் சேதத்தில் இருந்து காப்பீடு, தீவிபத்துக் காப்பீடு, திருட்டுக் காப்பீடு என பல்வேறு காப்பீடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையுமோ அல்லது தேவைக்கேற்பவோ உரிய காப்பீடுகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும். இவற்றைவிட முக்கியமானது வீட்டுவசதிக் கடனுதவி பெறுவோர், அவர்கள் வாங்கியிருக்கும் கடனுதவிக்கு ஈடான தொகையை தங்கள் பேரில் ஆயுள் காப்பீடாக மேற்கொண்டிருக்க வேண்டும். உதாரணத்துக்கு ரூ.20 லட்சம் வீட்டுவசதிக் கடனுதவி பெற்றிருந்தால், அதே அளவு தொகைக்கு தம்மீது ஆயுள் காப்பீடு வைத்திருக்க வேண்டும். 

  இதுபோன்ற ஆயுள் காப்பீட்டுக்கு முதிர்வுக் காலத்தின்போது பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்தால், மாதந்தோறும் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை மிக அதிகமாக இருக்கும். அதற்குப் பதில், பணம் திரும்பக் கிடைப்பதைக் கருதாமல், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் காப்பீட்டுத் தொகை முழுவதையும் தரும் வகையிலான ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ எனப்படும் காலமுறைக் காப்பீடு போதுமானது. இதில் குறைந்த அளவே பிரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். பெரிய தொகையைக் கடனாகப் பெற்று வீடு வாங்கும் குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால், அதன் காரணமாக அவருக்குப் பிரியமானவர்கள் வீட்டைக் காப்பாற்ற முடியாமல் நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலையில் இருந்து, இதுபோன்ற காப்பீடுகள் காப்பாற்றக் கூடியவை.

  இதனை வலியுறுத்தும் வகையில், ‘குற்றம் கடிதல்’ என்னும் அதிகாரத்தின்கீழ் அமைந்துள்ள குறளைப் பார்ப்போம்.

  செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
  உயற்பாலது அன்றிக் கெடும். (437)

  செயற்பால என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள். இவறியான் என்றால் செய்யாமல் தவறியவன் என்று அர்த்தம். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வம், உய்வதற்கு வழியின்றி அழிந்துபோகும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார். ஆகையால், கஷ்டப்பட்டு மிகப் பெரிய முதலீடான சொந்த வீடு வாங்கும் முயற்சியில் இறங்குவோர், அதற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். தமது பண வலிமை, வாங்கவிருக்கும் வீடு குறித்த முழு விவரங்கள், கடனுதவிக்கான தேவை, அவற்றைப் பெறுகின்ற முறை, திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறை ஆகியவற்றை சரியாகத் தெரிந்து வைத்திருப்பதோடு, உரிய காப்பீடுகளை எடுத்தல் என்ற செயலையும் செய்தாக வேண்டும். அதுவே வாங்கிய சொத்தை அழியாமல் காப்பதற்கான வழிமுறை.

  ***

  துணைத் தகவல்

  வாடகை வருமானத்துக்காக வீடு வாங்கலாமா?

  சொந்தத் தேவைக்காக வீடு வாங்குவது ஒருபுறம். வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்ற நோக்கத்தில், ஒரு முழுமையான முதலீடாகக் கருதி வீடு வாங்கலாமா? என்ற கேள்வி மறுபுறத்தில் எழுகிறது. அவ்வாறும் வீடு வாங்கலாம். அதற்கு முன் இதில் உள்ள சாதக - பாதக அம்சங்களை உற்று நோக்கிவிட்டு இதில் இறங்க வேண்டும்.

  வாடகை வருமானத்தைக் கருதி வீடு வாங்குவோர், தமது சேமிப்புப் பணத்தையே முதலீடாகக் கொண்டு இதனை வாங்கிவி்ட்டால் பெரிய பிரச்னை இல்லை. அதேநேரத்தில் கடனுதவி பெற்று வீடு வாங்கும்பட்சத்தி்ல், கடனுக்காகத் திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைக்கு ஈடாகவாவது அதில் கிடைக்கும் வாடகை வருமானம் இருக்க வேண்டும். இல்லையேல் கையைக் கடிக்கும். கடனுதவி பெறாமல் வீடு வாங்கியிருந்தால்கூட, வீட்டுக்கு முதலீடு செய்த பணத்துக்குக் கிடைக்க வாய்ப்புள்ள வட்டித் தொகையைவிட வாடகை வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையேல் வாடகை நோக்கத்துக்காக வீடு வாங்குவதில் அர்த்தமில்லை. 

  இதற்கு வீடு வாங்கப்படும் இடத்தைத் தகுந்த முறையில் தேர்வு செய்வது அவசியம். நல்ல வசதிகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள வீட்டுக்குத்தான் வாடகை வருமானம் அதிகம் கிடைக்கும். அதேநேரத்தில் இதுபோன்ற வீட்டின் விலையும் அதிகமாகவே இருக்கும். அதற்குப் பதில் மலிவாக கிடைக்கும் வீடு அமைந்துள்ள இடத்தின் மதிப்பு வருங்காலத்தில் உயர வாய்ப்புள்ளது என்றால் அதைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கே தொடக்கத்தில் வாடகை வருமானம் குறைவாகக் கிடைத்தாலும், இருப்பிட வசதி வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க, வாடகை வருமானம் உயர்வதற்கும், வீட்டின் மதிப்பு உயர்வதற்கும் வழியேற்படும்.

  வாடகைக்கு வீட்டை விடும்போது குடித்தனக்காரர் நல்லவரா, அவரால் ஏதேனும் நமக்கோ அக்கம்பக்கத்தில் உள்ளவருக்கோ பிரச்னை எழ வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து பிரச்னை இல்லை என்று திருப்தி ஏற்பட்டால் மட்டுமே வாடகைக்கு விட வேண்டும். இல்லையேல், தீராத் தலைவலியாக மாறிவிடும். இதேபோல் வாடகைக்கு வீட்டை விட்டாலும், அதற்கான பராமரிப்பை பெரும்பாலும் வீட்டு உரிமையாளரே மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பராமரிப்புச் செலவுக்கென தனித் தொகையை ஒதுக்கி, அவற்றை சரிவர மேற்கொள்ள வேண்டும். வாடகைக்கு வீடு விடுபவர்களுக்கு பேச்சு சாதுர்யம், நிலைமையைச் சமாளிக்கும் தைரியம், சோம்பலின்றி செயல்படுதல் ஆகிய குணங்கள் அவசியம்.

  வீட்டில் வாடகைக்கு வரும் நபர் வீட்டைக் காலி செய்யாமல் பிரச்னை ஏற்படுத்தலாம். இதுபோன்ற நிலைமையை சட்ட ரீதியாகவும், மனோபலத்துடனும், புத்தி சாதுர்யமாகவும் அணுக வேண்டும். இதுபோன்ற நிலையில் ஏற்படும் வழக்கு விவகாரங்களால் வாடகை வருமானம் பாதிக்கப்படுவதோடு, வழக்குச் செலவையும் சந்திக்க நேரிடும். இதுபோன்ற நிலைமையைச் சமாளிக்கவும், வீட்டுக்கு ஏற்படும் சேதங்களைச் சரிசெய்யவும் உதவும் வகையில் வீட்டு உரிமையாளர் காப்பீடு (லேண்டுலார்டு இன்சூரன்ஸ்) உள்ளது. வீட்டுக்குத் தேவையான மற்ற காப்பீடுகளுடன், இவ்வகை காப்பீட்டையும் எடுத்துக்கொள்வது நல்லது.

  பொதுவாக, இரண்டு சொந்த வீடுகள் வரை, வீட்டுவசதிக் கடனுதவிக்கு வருமான வரி விலக்கு சலுகை அளிக்கப்படுகிறது. ஆகையால், இந்தச் சலுகையை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏற்கெனவே வீட்டுக் கடனை அடைத்தவர்களில் சிலர் இரண்டாவதாக மீண்டும் வீடு வாங்குவதுண்டு. அவ்வாறு வீட்டுவசதிக் கடனுதவி பெற்று வாடகைக்கு வீடு விடும் பட்சத்தில், வீட்டுவசதிக் கடனுதவிக்கான தவணைகளைத் திரும்பச் செலுத்தும்போது வட்டித் தொகைக்கு முழு அளவு வருமான வரி விலக்கு உண்டு. அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில் நேர்மையான வரி செலுத்துவோராக இருந்து, வாடகைப் பணத்தை நமது வருமானத்தில் காட்டியாக வேண்டும். வீட்டுவசதிக் கடனுதவி பெறாவிட்டாலும்கூட, நமது வருமான வரிக் கணக்கில் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

  வாடகை வருமானத்துக்காக வீட்டை வாங்குவோர், முதலீடாகக் கருதித்தான் வீட்டை வாங்குகிறார். ஆகையால் வாடகை வருமானத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், வீட்டின் விலை மதிப்பு நன்கு உயர்ந்து செல்லும்பட்சத்தில், வீட்டை விற்று நமது முதலீட்டுக்கான லாபத்தை அறுவடை செய்யவும் தயங்கக் கூடாது. இவ்வாறு கிடைக்கும் லாபத் தொகைக்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

  kattana sevai