Enable Javscript for better performance
17. வருமுன் காத்திடு வசதியாய் ஓய்வெடு- Dinamani

சுடச்சுட

  

  17. வருமுன் காத்திடு வசதியாய் ஓய்வெடு

  By பத்மன்  |   Published on : 25th April 2017 12:59 PM  |   அ+அ அ-   |    |  

   

  ‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று மிகச் சிறந்த பெண்பாற் புலவர் ஔவைப் பிராட்டியார் பாடியுள்ளார். அவர் தற்காலத்தில் வாழ்ந்திருந்தால் அதனை சற்றே மாற்றி, ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது முதுமையில் வறுமை’ என்று பாடியிருப்பார். ஏனெனில், தற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியால் மனிதனின் ஆயுள் காலம் நீடித்துச் செல்கின்ற அதேவேகத்தில், வாரிசுகளால் கைவிடப்படும் வயோதிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஓடியாடி வேலை செய்கின்ற வயதிலாவது ஏதேனும் வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம், ஓடாய் தேய்ந்த காலத்தில் தாங்கிப்பிடிக்க வாரிசுகளின் தயவை அல்லவா நாடி நிற்கவேண்டி உள்ளது. வாரிசுகள் கைவிட்டால் பிறரிடம் கையேந்தும் நிலைக்கல்லவோ முதியவர்கள் தள்ளப்படுகின்றனர்!

  ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்ற அதிகாரத்தின் கீழ் செந்நாப் புலவர் திருவள்ளுவர் செப்பியுள்ள குறள், இந் நிலையைத் தெளிவாக விளக்குகிறது.

  முதலிலார்க் கூதிய மில்லை மதலையாம்

  சார்பிலார்க் கில்லை நிலை. (449)

  முதல் இலார்க்கு ஊதியம் இல்லை, மதலையாம் சார்பு இலார்க்கு இல்லை நிலை என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். மதலை என்பதற்கு தனது குழந்தை, அதாவது மகன் அல்லது மகள் என்று பொருள். ஒரு வணிகருக்கு அவரது தொழிலை அல்லது வியாபாரத்தைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் முதல் இல்லையேல், அதனால் அவருக்கு எவ்விதப் பணப்பயனும் இல்லை. அதேபோல எந்த ஒரு மனிதருக்கும் அவர்தம் மக்கட் செல்வமாகிய சார்பு இல்லையேல் நிலைப்பேறு இல்லை என்று இக் குறளுக்குப் பொருள் விளக்கம் கூறுவார்கள். அதாவது பிள்ளை இல்லாதவர்க்கு நிலைப்பேறு எனப்படுகின்ற மறுமைப் பயன் அதாவது முக்தியோ, சொர்க்க வாழ்வோ இல்லை என்று இதற்குச் சிலர் விளக்கம் தருவார்கள்.

  ஆனால் திருவள்ளுவர் இக் குறளில் பயன்படுத்தியுள்ள வார்த்தைப் பிரயோகம், அதனையும் தாண்டி எக்காலத்தவர்க்கும், எத்தகையோருக்கும் ஏற்ற யதார்த்தப் பொருளைத் தருகிறது. மதலையாம் சார்பு இலார்க்கு என்று திருவள்ளுவர் கூறியுள்ளாரே தவிர, மதலை இலார்க்கு என்று கூறவில்லை. இளைய வயதில் குழந்தைகள் பெற்றோரை சார்ந்திருக்கின்றனர், அதே பெற்றோருக்கு வயது முதிரும் காலகட்டத்தில் அவர்களைத் தாங்கிப்பிடிக்கும் சார்புகளாக பிள்ளைகள் இருக்க வேண்டும். அந்தவகையில், அவ்விதம் தாங்கிப்பிடிக்கக்கூடிய சார்புகளாக பிள்ளைகள் இல்லாவிடில், எந்த ஒரு மனிதருக்கும் வாழ்க்கை நிலையற்றதாகிவிடும், நிலைகுலைந்துவிடும் என்ற பொருளில்தான் வள்ளுவரின் வாய்மொழி அமைந்திருக்கிறது.

  இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், சுதந்திரத்துக்கு முன்பு சுமார் 45 வயதாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 77.5 வயதாக அதிகரித்துள்ளது. மரணத்தைத் தள்ளிப்போட முடியும்; ஆனால் நோய்களின் பாதிப்புகளில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துவிட முடியுமா என்ன? வயதான காலத்தில்தான் மாத்திரை, மருந்துகளுக்கான செலவுகளும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் ஒரு முதியவருக்கான மருத்துவச் செலவு சராசரியாக ஆண்டுக்கு 15 முதல் 17 சதவீதம் வரையாக அதிகரித்துச் செல்கிறது. பணிஓய்வு பெற்ற பிறகு வருமானம் இருக்காது, ஆனால் செலவுகளோ முன்னைவிட அதிகரிக்கும் என்ற நிலையில் எதிர்காலத்தைக் கருதி, இளம் வயதிலேயே அதற்காகச் சேமிப்பதும், முதலீடுகளை மேற்கொள்வதும் அவசியமல்லவா?

  பெற்ற குழந்தைகள் நம்மைக் காப்பாற்ற முன்வரலாம், நேசக் கரமும் நீட்டலாம். ஆனால் அவர்களுக்கும் குடும்பச் செலவு, வாரிசுகளை வளர்க்கும் செலவு என்று இருக்கவே செய்கின்றன. இந்நிலையில் வாரிசுகள் நம்மைத் தாங்கிப் பிடிக்க முன்வந்தாலும் அவர்களையே முற்றிலும் சார்ந்திருக்காமல், தம் சொந்தக் கால்களில் நிற்பதுதான் யதார்த்த நிலைக்குப் பொருத்தமானது அல்லவா? இவை குறித்து சிந்திப்பவர்கள் நிச்சயமாக, ரிடையர்மென்ட் பிளான்ஸ் எனப்படும் ஓய்வுக்கால நிதித் திட்டங்களில் இணைவர். இதனை ஓய்வூதிய நிதித் திட்டங்கள் (பென்ஷன் பிளான்ஸ்) என்றும் அழைப்பர்.

  அரசு ஊழியர்களுக்கு அவர்களது ஓய்வுக்குப் பிறகு அரசே ஓய்வூதியம் வழங்கும் என்பதெல்லாம் அந்தக் காலம். தற்போது அரசு ஊழியர்களே என்பிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பென்ஷன் ஸ்கீம், அதாவது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருப்பது அவசியமாக உள்ளது. அவ்வாறெனில், தனியார் துறை ஊழியர்களும் பிறரும் ஓய்வூதிய நிதித் திட்டங்களில் அவசியம் இணைய வேண்டும் அல்லவா? அரசு ஊழியர்களாகவே இருந்தாலும் சரி, மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், பணவீக்கமும் செலவுகளும் அதிகரிக்கும் சூழ்நிலையில், கூடுதலாக சில ஓய்வூதிய நிதித் திட்டங்களை மேற்கொள்வது தவிர்க்க இயலாதது.

  எவ்வ துறைவ துலக முலகத்தோ

  டவ்வ துறைவ தறிவு. (426)

  என்று ‘அறிவுடைமை’ அதிகாரத்தின் கீழ் வரும் குறள் நமக்கு அறிவுறுத்துகிறது. எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு என்று இதனைப் பிரித்து பொருள் கொள்ள வேண்டும். உலகம் தற்போது எவ்விதம் செயல்படுகின்றதோ, அந்த உலக இயல்புக்கு ஏற்ப நாமும் செயல்படுவதே அறிவு எனப்படுவதாகும் என்று இதற்கு அர்த்தம். தற்கால சமூக, பொருளாதார சூழலில் நமது எதிர்காலத் தேவைகளுக்காக நமது இளமைக் காலத்திலேயே திட்டமிடுவதுதான், ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பதற்கான வழி. ‘பெத்த பிள்ளை காப்பாற்றாவிட்டாலும், வெச்ச பிள்ளை காப்பாற்றும்’ என்று தென்னை மரத்தைக் கூறுவார்கள். அதனால்தான் தென்னை மரத்துக்கு தென்னம் பிள்ளை என்ற செல்லப்பெயரும் உண்டும். அந்தத் தென்னை மரங்களைப்போல வளர்ந்து நின்று, நமக்கு வயதான காலத்தில் பலன் தருபவையே ஓய்வூதிய நிதித் திட்டங்கள்.

  இவற்றைப் பொதுவாக, 1. தேசிய ஓய்வூதியத் திட்டம் (நேஷனல் பென்ஷன் ஸ்கீம் - என்பிஎஸ்), 2. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (எம்ப்ளாயீஸ் பிராவிடென்ட் ஃபண்ட் – இபிஎஃப்), 3. பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் – பிபிஎஃப்), 4. ஓய்வூதியம் அல்லது ஓய்வுக் காலப் பயன் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் (பென்ஷன் லிங்க்டு லைஃப் இன்சூரன்ஸ் பாலிஸி), 5. மாதாந்திர வருவாய்த் திட்டம் (மந்த்லி இன்கம் ஸ்கீம் – எம்ஐஎஸ்), 6. இதர வகை முதலீடுகள் என்று வகைப்படுத்தலாம்.

  இதுபோன்ற திட்டங்களில், எதிர்காலத் தேவைகளைக் கருதி சேர்வது வயதான காலத்தில் நமக்கு வலிமையான கருவியாகப் பயன்படும்.

  ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து

  போற்றார்கண் போற்றிச் செயின். (493)

  ‘இடனறிதல்’ என்ற அதிகாரத்தின்கீழ் இடம்பெற்றுள்ள இந்தக் குறள், இதனை உணர்த்துவதுபோல் அமைந்துள்ளது. ஆற்றார் என்றால் ஒரு செயலைச் செய்ய வலிமையற்றவர்கள் என்று பொருள். போற்றார் என்றால் (நம்மைப் போற்றாத, பொருட்படுத்தாத) எதிரிகள் என்று பொருள். ஒரு செயலைச் செய்ய வலிமையற்றவர்களாகவே இருந்தாலும்கூட, தகுந்த இடத்தைக் கண்டறிந்து எதிரிகளுக்கு எதிரான செயலைச் செய்ய முற்பட்டால், அவர்களாலும் அந்தச் செயலை எளிதில் செய்து முடித்துவிட முடியும் என்கிறார் திருவள்ளுவர். முதுமையும் வறுமையும் நமக்கு எதிரிகள். அவற்றை முறியடிக்க வேண்டுமானால், தகுந்த இடம் பார்த்து ஓய்வூதிய நிதித் திட்டங்களில் முதலீடு செய்கின்ற செயலைச் செய்ய வேண்டும். அந்த வகையில் முன்கூறப்பட்ட திட்டங்கள் குறித்து சற்று விளக்கமாக இனி காண்போம்.

  தேசிய ஓய்வூதியத் திட்டம்

  நாடு முழுவதிலுமாக 18-லிருந்து 60 வயது வரையுள்ள யார் வேண்டுமானாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். அரசு ஊழியர்கள் எனில், இதில் இணைவது கட்டாயம். அவர்களுக்கு பங்களி்ப்பு ஓய்வூதியத் திட்டம் (கான்ட்ரிப்யூட்டரி பென்ஷன் ஸ்கீம் – சிபிஎஸ்) என்ற பெயரில் இது அமல்படுத்தப்படுகிறது. அவர்களது மாத ஊதியத்தில் இருந்து (அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து) சுமார் 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்படுகிறது. தனியார் துறை ஊழியர்களும் மற்றவர்களும் இதில் விருப்பப்பட்டால் சேர்ந்துகொள்ளலாம். தனியார் நிறுவனங்களும் இத் திட்டத்தின்கீழ் தங்களது ஊழியர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் அல்லாத தனிநபர்களைப் பொருத்தவரை ஆண்டுக்கு ரூ. 6,000, அதாவது மாதத்துக்கு ரூ. 500 வீதம் சேமிக்க வேண்டும். இவ்வாறான முதலீட்டுக்கு வரி விலக்கு உண்டு. அதேநேரத்தில் முதிர்வுக் காலத்தின்போது கிடைக்கும் தொகைக்கு வரிப் பிடித்தம் செய்யப்படும்.

  ஊழியர்களின் சேமிப்புகளில் இருந்து திரட்டப்படும் தொகையை நிதி நிர்வாகிகள் (ஃபண்ட் மேனேஜர்ஸ்) என நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களானவை, தனியார் நிறுவனப் பங்குகள், அரசுப் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அரசு ஊழியர்களுக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பெருமளவு தொகை அரசுப் பத்திரங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் போன்றவற்றில்தான் முதலீடு செய்யப்படும். தனியாருக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அரசுப் பத்திரங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள்போக கூடுதல் தொகை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். என்பிஎஸ் திட்டங்கள், தோராயமாக ஆண்டுக்கு 10 சதவீதம் வரை ஆதாய வளர்ச்சி அடைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின்கீழ் இதனைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கான கட்டணங்கள் மிகச் சொற்பமாகவே பிடித்தம் செய்யப்படுகின்றன. ஆகையால் ஏறத்தாழ முழுப் பயனும், பயனாளிகளுக்குக் கிடைக்கிறது.

  இத்திட்டத்தில் இணைந்துள்ளோருக்கு 60 வயது கடந்தபின், திட்டப் பயன்கள் அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் எனில், இடைக்காலத்தில் 20 சதவீதத் தொகை வரை, சில காரணங்களுக்காக முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் 60 வயது நிறைவடையும்போதும் முழுத் தொகையையும் எடுத்துவிட முடியாது. அதிகபட்சம் 60 சதவீதத் தொகையை எடுத்துக்கொள்ளலாம். மீதி 40 சதவீதத் தொகை இருப்பில் வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாதந்தோறும் ஓய்வூதியம் கணக்கிட்டுத் தரப்படும். திட்டத்தில் இணைந்தவர் உயிரிழக்க நேரிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். அரசு ஊழியர் அல்லாதோர் எனில், விருப்பப்படும்போது எவ்வளவு தொகை வேண்டுமானலும் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். மீதித் தொகை அடிப்படையில் 60 வயதுக்குப் பின் ஓய்வூதியமாகப் பெறலாம்.

  தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம்

  தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்கள், அவற்றின் நிரந்தர ஊழியர்களை இத்திட்டத்தில் சேர்க்கின்றன. இத்திட்டத்தில் இணையும் ஊழியர்களின் மாத ஊதியத்தில் (அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி) 12 சதவீதம் பிடித்தம் செய்து சேமிக்கப்படும். இதேபோல் 12 சதவீதத் தொகையை நிறுவன நிர்வாகம் வழங்கும். ஆக 24 சதவீதத் தொகை சேமிக்கப்படுகிறது.

  இவ்வாறு சேமிக்கப்படும் நிதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) நிர்வகிக்கிறது. இந்த நிதி, அரசுப் பத்திரங்கள், கடன்பத்திரங்கள், பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டு வளர்ச்சி காணச் செய்யப்படுகிறது. ஊழியர்களின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டித் தொகை வழங்கப்படுகிறது. இது அவ்வப்போது ஓரளவு மாற்றத்துக்குரியது. தேவைப்பட்டால் வருங்கால வைப்பு நிதித் தொகை முதலீட்டைப் பகுதியளவிலோ, முழுமையாகவோ திரும்பப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரியும் இடத்தில் இருந்து பதவி விலகும்போது முழுமையாக தொகையைத் திரும்ப எடுக்கலாம். அதேநேரத்தில் அவ்வாறு எடுக்காமல் புதிய நிறுவனத்தில் சேர்ந்தாலும், அங்கேயும் பழைய இபிஎஃப் எண்ணிலேயே புதிய சேமிப்புகளைத் தொடர வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்பட்சத்தில்தான் நமது முதலீடுகள் வளர்வீத அடிப்படையில் கூடுதல் ஆதாயத்தைத் தரமுடியும்.

  இபிஎஃப் திட்டத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு மட்டுமின்றி, அதன் மீது கிடைக்கும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. மேலும், தொடர்ந்து 5 ஆண்டுகள் இத்திட்டத்தில் இணைந்திருந்து, பின்னர் திரும்பப் பெறப்படும் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு. 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இத்திட்டத்தில் இணைந்திருக்கும் பட்சத்தில், ஓய்வு பெறும்போது கணிசமான தொகை வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கென, திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பிடித்தம் செய்யப்படுகின்ற தொகையில் 8.33 சதவீதத் தொகை ஓய்வூதியத் திட்டத்துக்காகவும், மீதி 3.67 சதவீதத் தொகை ஓய்வின்போது வழங்கப்படும் நிதிக்காகவும் ஒதுக்கப்படுகின்றன.

  பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம்

  பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட சில பொதுத் துறை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.500-ம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சமும் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு தற்போது 7.9 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. முதலீட்டுத் தொகைக்கும், அதன்மூலம் கிடைக்கும் வட்டித் தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு. திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பாக முறித்துக்கொள்ள முடியாது. 3 ஆண்டுகள் கழித்து இத் திட்டத்தின் மீது கடனுதவி பெற முடியும். 7 ஆண்டுகள் கழித்து, பகுதியளவு தொகையை தேவைப்பட்டால் திரும்பப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகையை, நீதிமன்றத்தால் முடக்க முடியாது என்பது சிறப்பம்சம்.

  ஓய்வூதியம் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

  எல்ஐசி எனப்படும் மத்திய அரசின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் இதர தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் பல்வேறு பென்ஷன் திட்டங்களை செயல்படுத்துகின்றன. என்பிஎஸ், ஈபிஎஃப், பிபிஎஃப் போன்ற திட்டங்கள் எல்லாம் முதலீடு சார்ந்தவை மட்டுமே. இவற்றின்கீழ் ஆயுள் காப்புறுதிப் பயன் கிடைக்காது. ஆனால் ஓய்வூதியம் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில், குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்த பிறகு ஓய்வூதியம் கிடைப்பதுடன், இடையில் முதலீட்டாளர் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

  ஓய்வூதியம் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், இரண்டு பருவங்களை உள்ளடக்கியவை. முதல் பருவம், நிதி வளர்ப்புப் பருவம். இதனை ஆங்கிலத்தில் அக்குமலேஷன் ஸ்டேஜ் என்பார்கள். இரண்டாவது பருவம், பயனுறு காலம். இதனை ஆங்கிலத்தில் வெஸ்டிங் ஏஜ் என்பார்கள். நிதி வளர்ப்புப் பருவத்தில் ஒருவர், இத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றின்கீழ் மாதந்தோறும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என குறிப்பிட்ட தொகையைச் சேமித்து வர வேண்டும். 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என நமக்குத் தேவையான ஆண்டுக்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு சேமிக்கப்படும் தொகை, திட்டத்தை நிர்வகிக்கும் நிறுவனத்தாரால் பங்குகள், கடன் பத்திரங்கள், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு வளர்ச்சி அடையச் செய்யப்படும்.

  நிதி வளர்ப்புப் பருவம் முடிந்த உடனேயே பயனுறு காலம் தொடங்கிவிடும் என்று கூறிவிட முடியாது. 40 வயதில் இருந்து 70 வயதுக்குள் ஏதேனும் ஒரு வயதை பயனுறு காலத் தொடக்கமாக நாம் நிர்ணயிக்கலாம். பொதுவாக, 58 அல்லது 60 வயதில் ஓய்வு பெறுவோம் என்பதால், அந்த வயதையே பயனுறு காலத்தின் தொடக்கமாக நிர்ணயிக்கலாம். இக் காலகட்டத்தில் மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என திட்டப் பயனாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். பயனுறு காலத்தில் அவர் இறக்க நேரிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். திட்டத்தின் நிதி வளர்ப்புக் காலத்தில் திட்டப் பயனாளி உயிரிழக்க நேரிட்டால், அவரது வாழ்க்கைத் துணைக்கு அல்லது நாமினி என பெயர் பதிவு செய்யப்பட்டவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும். பயனுறு காலத்தின் தொடக்கத்தில், சேர்ந்துள்ள நிதியில் 33 சதவீதம் வரை ஒரே கட்டமாகத் திரும்பப் பெறலாம். மீதித் தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் பெறலாம்.

  ஓய்வூதியத் திட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை –

  பயனுறு காலம் (வெஸ்டிங் ஏஜ்)

  எந்த வயதில் இருந்து ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதை இது குறிக்கிறது. ஓய்வூதியத் தொகை (அன்யூட்டி) – பயனுறு காலம் தொடங்கியவுடன் மாதந்தோறும் எவ்வளவு தொகையை ஓய்வூதியமாகப் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்படும் தொகை.

  காப்புறுதித் தொகை (சம் அஸ்யூர்டு)

  நிதி வளர்ப்புக் காலத்தில் திட்ட முதலீட்டாளர் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்துக்குத் தரப் பட வேண்டிய உத்தரவாத காப்பீட்டுத் தொகை.

  நிதி வளர்ப்புப் பருவம் (அக்குமலேஷன் ஸ்டேஜ்)

  எத்தனை ஆண்டுக் காலம் திட்டத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படும் ஆண்டுகள். சரண் கட்டணங்கள் (சரண்டர் சார்ஜஸ்) – ஒருவேளை திட்டக் காலத்துக்கு முன்பேயே திட்டத்தில் இருந்து விலக நேரிட்டால் பிடித்தம் செய்யப்படும் தொகை.

  பங்களிப்பு ஆதாயத் திட்டங்கள் (பார்ட்டிஸிபேஷன் பிளான்ஸ்)

  சில ஓய்வூதியம் சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில், அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி, திட்ட முதலீட்டாளருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இது நிரந்தரமானதல்ல. திட்டத்தில் கிடைக்கும் லாபத்தைப் பொருத்து மாறுபடும்.

  இவை குறித்த சந்தேகங்களை எல்லாம் தெளிவாகக் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டு, மன உறுதியோடு இத்திட்டங்களில் சேர வேண்டும். அதை விடுத்து, அரைகுறையாகத் தெரிந்துகொண்டு இறங்கினால் பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் முதலீட்டாளர்களை நிம்மதியாக இருக்கவிடாது.

  நுணுங்கிய கேள்விய ரல்லர் வணங்கிய

  வாயின ராத லரிது. (419)

  ‘கேள்வி’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் இந்தக் குறள் இதனை எடுத்துரைக்கிறது. நுணுக்கமான விஷயங்களைக் கேட்டு அறிந்துகொள்ளாதவர்களால், வணக்கத்துக்குரிய வார்த்தைகளைக் கூற இயலாது என்று இதற்குப் பொருள். ஓய்வூதியம் சார்ந்த முதலீடுகளுக்கும் இது பொருந்தும். இது என்ன, அது என்ன, இதில் என்ன செய்ய வேண்டும், இதைச் செய்தால் என்ன பலன் கிடைக்கும், செய்யாமல் விட்டால் இழப்பு என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் முகவர்களிடமும், நண்பர்களிடமும், விஷயம் தெரிந்தவர்களிடமும் முன்கூட்டியே கேட்டறிந்துகொண்டு ஐயங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல், வணங்கிய வாயினராக அல்லாமல், புலம்பிய வாயினராக ஆகிவிடக் கூடும்.

  மாதாந்திர வருவாய்த் திட்டம்

  எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட தொகையை 5 ஆண்டுகளுக்கு நிரந்தர முதலீடாக வைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 1,500 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக தனிநபர் எனில் ரூ. 4.5 லட்சமும், கூட்டுக் கணக்கு எனில் ஒருவருக்கு ரூ. 4.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 9 லட்சமும் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு ரூ. 7.70 சதவீத வட்டி வழங்கப்படும். இந்தத் தொகை வருவாயாக மாதந்தோறும் பிரித்து வழங்கப்படும். 5 ஆண்டுகள் கழித்து முதலீட்டைத் திரும்பப் பெறலாம். இல்லையேல் மீண்டும் 5, 5 ஆண்டுகளாக முதலீட்டைப் புதுப்பித்துத் தொடரலாம்.

  இதர வகைத் திட்டங்கள்

  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மூத்தோர்களுக்கான நிரந்தர வைப்பு நிதித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அஞ்சலகங்கள் மற்றும் சில பொதுத் துறை வங்கிகளில் செயல்படுத்தப்படும் எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ. 1000 முதலீடு செய்ய வேண்டும். அதற்குமேல் இதன் மடங்குகளில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக கணக்கிட்டு வழங்கப்படும். முதலீட்டுத் தொகைக்கு வருமான வரிச் சலுகை உண்டு. அதேபோல் இதில் கிடைக்கும் வட்டித் தொகைக்கு ரூ.10,000 வரை வருமான வரிச் சலுகை உண்டு.

  முதியோர்களுக்கெனவே செயல்படுத்தப்படும் சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. இதில் முதியோர்களுக்கு வரும் நோய்களுக்கும் அபாயகரமான நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி பெற கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ் செயல்படுத்தும் வரிஷ்டா மெடிக்ளைம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் செயல்படுத்தும் சீனியர் சிட்டிசன்ஸ் மெடிக்ளைம் ஆகிய திட்டங்களை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இதுபோன்ற திட்டங்களில் 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டோர் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் 90 வயது வரை இத் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

  பல்வேறு வங்கிகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தொடங்கும் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களுக்கு, வழக்கத்தை விட சற்று கூடுதலாக – பொதுவாக அரை சதவீதம் கூடுதலாக வட்டித் தொகை வழங்கப்படும். இதிலும் முதியோர் சேர்ந்து பயன்பெறலாம்.

  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

  எண்ணுவ மென்ப திழுக்கு. (467)

  ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தின்கீழ் திருவள்ளுவர் கூறியுள்ள அறிவுரை இது. எந்தவொரு செயலையும் அதுகுறித்து முழுமையாக அறிந்துகொண்டு, திட்டமிட்டே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் செயலில் இறங்கிய பிறகு அதுபற்றி எண்ணுவோம் என்றிருப்பது இழுக்கைத் தந்துவிடும் என்று எச்சரிக்கிறது இக் குறள். பொருளாதார விஷயத்திலும், நமது முதுமை என்னும் ஓய்வுக்காலத்துக்குப் பயனளிக்கும் திட்டங்களை, முன்கூட்டியே எண்ணிப் பார்த்து, உரிய முறையில் தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், முதுமை வந்தபிறகு இதுபற்றி நினைத்துப் பார்க்கலாம் என்று அசட்டையாக இருப்பது அவமானத்தைத்தான் தரும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  ***

  துணைத் தகவல்

  எதிர் அடைமானக் கடனுதவி

  திருமணத்தின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு சீர்வரிசை தருவார்கள். பதிலுக்கு பெண் வீட்டாருக்கு அல்லது தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் மருமகளுக்கு, மாப்பிள்ளை வீட்டார் வழங்கும் சீர்வரிசைக்கு எதிர் சீர் என்று பெயர். டௌரி என்று அழைக்கப்படும் சீர்வரிசைக்கு முக்கியத்துவம் தரும் சமூகம், இந்த எதிர் சீர் குறித்து அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இதேபோல் பொருளாதாரத் துறையிலும் அதிகம் பேரால் அறிந்துகொள்ளப்படாத, ஆனால் பயனுள்ள ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அதுதான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் எனப்படும் எதிர் அடைமானக் கடனுதவி.

  வழக்கமாக, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து புதிய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு (ஃபிளாட்) ஒன்றை வாங்கக் கடனுதவி பெற்று, வட்டியுடன் மாதத் தவணைகளாகத் திருப்பிச் செலுத்துவோம். தவணைகள் முடியும் வரை, கடன் வழங்கிய வங்கியின் பெயரில் அந்த வீடு அடைமானமாக இருக்கும். அதற்குப் பதிலாக, நமது சொந்த வீட்டை வங்கியிடம் அடைமானம் வைத்து, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு தொகையை வங்கியிடமிருந்து நமது செலவுகளுக்கான நிதியுதவியாகப் பெறுவதே ரிவர்ஸ் மார்ட்கேஜ்.

  மூத்த குடிமக்களுக்காகவே அவர்களது மாதச் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் இந்தப் புதிய வகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2007-ஆம் ஆண்டிலேயே இது அறிமுகமான போதிலும், பலருக்கும் இதுபற்றி பரவலாகத் தெரியவில்லை. இத்திட்டத்துக்கான நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

  சொந்த வீட்டில் அல்லது ஃபிளாட்டில் வசித்துவரும் 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு உட்பட்ட வீடுகளின் பேரில்தான் இந்தத் திட்டத்தின்கீழான கடனுதவியைப் பெற முடியும். வீட்டின் மதிப்பில் அதிகபட்சம் 60 சதவீதத் தொகை கடனுதவியாக வழங்கப்படும். இந்தத் தொகை ஒட்டுமொத்தமாக வழங்கப்பட மாட்டாது. மாறாக, அது ஒரு நிதி போல் வைக்கப்படும். அதிலிருந்து கடனுதவிக்கான வட்டித் தொகை போக, மீதித் தொகை மாதந்தோறும் தவணைகளாக திட்டப் பயனாளிக்கு வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகளாக திட்டக் காலம் இருக்கும். சில வங்கிகள் 20 ஆண்டுகள் வரைகூட திட்டக் காலத்தை நிர்ணயிக்கின்றன.

  வீட்டின் மதிப்பை வங்கியே தகுந்த நிபுணர்களைக் கொண்டு சந்தை விலையின் அடிப்படையில் தீர்மானிக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மறுமதிப்பீடு செய்யப்படும். அப்போது மதிப்பு உயரும் பட்சத்தில், கூடுதல் கடனுதவியைப் பெறலாம். கடனுதவி பெறுவதற்காக ரிவர்ஸ் மார்ட்கேஜ் அதாவது எதிர் அடைமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டில், தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக திட்டப் பயனாளி தங்காமல் போனாலோ, அல்லது திட்டத்தில் சேர்ந்த பிறகு கடன் வழங்கிய வங்கிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் வீட்டில் மாறுதல்களைச் செய்தாலோ அல்லது திட்டப் பயனாளி திவாலானவராக அறிவிக்கப்பட்டாலோ திட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிடும்.

  மற்றபடி, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட 15 அல்லது 20 ஆண்டுகள் வரையில் இத் திட்டத்தில் நீடிக்கலாம். அந்தக் காலகட்டம் வரையில் நிர்ணயிக்கப்பட்ட தவணைத் தொகையை தொடர்ந்து மாதந்தோறும் வங்கி வழங்கிவரும். இடையில் திட்டப் பயனாளி உயிரிழந்துவிட்டால், அவரது வாழ்க்கைத் துணை உயிருடன் இருக்கும் காலம் வரையில் தவணைத் தொகை வழங்கப்படும். திட்டத்தில் இருந்து முன்கூட்டியே விலக விரும்பினால், கடனுதவித் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகையைக் கொடுத்து விலகிக் கொள்ளலாம். இவ்வாறு முன்கூட்டியே முடித்துக்கொள்வதற்கு, வீட்டுவசதிக் கடனுதவிக்குப் பிடித்தம் செய்யப்படுவதைப்போல கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

  திட்டப் பயனாளி திட்டக் காலத்துக்குப் பிறகும் உயிரோடு இருந்தால், அவர் தனது வாழ்வுக்காலம் வரையில் அந்த வீட்டிலேயே தங்கியிருக்கலாம். அவருக்குப் பின் அவரது வாழ்க்கைத் துணையும் தொடர்ந்து தங்கியிருக்கலாம். ஆனால் திட்டக் காலத்துக்குப் பிறகு எந்த நிதியுதவியையும் வங்கி தராது. பயனாளியும் அவரது வாழ்க்கைத் துணையுமாக இருவரும் உயிரிழந்தால் மட்டுமே கடனைத் திருப்பிப் பெறுவதற்காக வீட்டை விற்கும் முயற்சியில் வங்கி இறங்கும். அப்போது பயனாளியின் வாரிசுகளுக்கு, குறிப்பிட்ட கடன்தொகை மற்றும் வட்டித் தொகையைத் திருப்பிச் செலுத்தி, பெற்றோர் வாழ்ந்த வீட்டை மீட்டுக்கொள்வதற்கான வாய்ப்பை வங்கி வழங்கும். அதனை வாரிசுகள் ஏற்காதபட்சத்தில்தான், மூன்றாம் தரப்பினரிடம் வீட்டை விற்பதற்கான நடவடிக்கைய வங்கி மேற்கொள்ளும்.

  இவ்வாறு வீட்டை விற்கும்போது கிடைக்கும் தொகை, கடனுதவி மற்றும் வட்டித்தொகை இணைந்த கூட்டுத்தொகையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், அந்த மிகுதித் தொகை வாரிசுகளிடம் வழங்கப்படும். ஒருவேளை குறைவாக இருக்கும்பட்டத்தில், வாரிசுகளிடம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான பொறுப்பை அதாவது இழப்பை வங்கி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும்.

  சொந்த வீடு வைத்துள்ள முதியோர், சொந்தக் காலில் நிற்பதற்கு மிகவும் உதவிகரமான கருவி, இந்த ரிவர்ஸ் மார்ட்கேஜ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai