Enable Javscript for better performance
ரோஜா மலரே - 15- Dinamani

சுடச்சுட

  

  ரோஜா மலரே - 15

  By குமாரி சச்சு  |   Published on : 24th November 2019 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  actress-sachu

   

  நடிகையர் திலகம் சாவித்திரி போன்று இனிமையாகப் பழகும் இன்னொரு நடிகையும் உண்டு. அவர் என் மீது தனி அன்பும், பாசமும் வைத்திருந்தவர். நடிப்பும், நாட்டியமும் ஒருசேரக் கற்றுத்தேர்ந்தவர். அவர்தான் நாங்கள் எல்லோரும் அன்பாகக் கூப்பிடும் பப்பிமா. புரியலையா? அவர்தான் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளில் ஒருவரான நாட்டியப் பேரொளி பத்மினி. இவரது அன்பையும் பாசத்தையும்தான் கிடைத்தற்கரியது என்று சென்ற வாரம் சொன்னேன்.

  நான் முதல்முதலாக அவரைப் பார்த்தது கோவையில் உள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவில்தான். அப்போது எனக்கு 6 வயது இருக்கும். அவர் நடித்துக்கொண்டிருந்த படத்தின் பெயர் ‘சொர்க்க வாசல்’. படத்தில் அவர் ஓர் ஆஸ்தான நடனமணியாக வருவார். அப்புறம் அவர்களுடன் நான் சேர்ந்து நடித்த படம் ‘மருமகள்’. அந்தப் படத்தில் அவரது ஜூனியராக நான் நடித்திருப்பேன்.

  ஒருமுறை ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பு ஏனோ தெரியவில்லை நீண்டுகொண்டே சென்றது. வேலுமணிதான் இந்தப் படத்தின் புரொடக்ஷனை ஏற்று பார்த்துக்கொண்டிருந்தார். பரிமளா பிக்சர்ஸ் என்பது அந்தக் கம்பனியின் பெயர். குழந்தையாக அன்று இருந்ததால் தூக்கம் தூக்கமாக வந்தது. அதனால் நான் சரியாக வசனத்தைப் பேசவில்லை.

  என் பாட்டிக்கு எப்பவுமே நான் முதல் டேக்கிலேயே சரியாகப் பேசிவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் கோபம் வந்துவிடும். அன்று அந்தக் காட்சி என்னால் இரண்டு மூன்று டேக் ஆகிவிட்டது. அன்று பார்த்து நான் அழுதுகொண்டே வசனத்தைப் பேசும் காட்சி. அழுதால் என் மேக்கப் ஓரளவிற்குக் கலைந்துவிடும். அதனால் அதைச் சரி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சரியாகப் பேசாததனால் எல்லோருக்கும் கஷ்டம்.

  இதற்கெல்லாம் காரணம் என் தூக்கம்தான். நான் சரியாக நடிக்கவில்லை என்பதால் கோபத்துடன் என் பாட்டி, திட்டிக்கொண்டே என் காதைத் திருகினார். என் அருகில் இருந்த பப்பிமா, பாட்டியின் கையைத் தட்டிவிட்டு அவரிடம் கூறியது: ‘நீங்க போங்க, நான் அவளைப் பேச வைக்கிறேன். அவ குழந்தை. நாம்தான் இரவு படப்பிடிப்பு நடத்துகிறோம். அவள் தூங்கும்போது எப்படிச் சரியாக நடிக்க முடியும். அவளுக்கு என்ன தெரியும். நாம்தான் தவறான சமயத்தில் படப்பிடிப்பை நடத்துகிறோம்.அவளை எந்தவிதத்திலும் தவறே சொல்ல முடியாது’ என்று சொல்லி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டுவிட்டார். அன்று முதல் எனக்கு ஏனோ தெரியவில்லை, பப்பிமா (பத்மினி அம்மா) என்றால் தனியான பாசம் மனதில் தோன்றும்.

  லேனா செட்டியாரின், கிருஷ்ணா பிக்சர்ஸ் படமான ‘மருமகள்’ அதற்குப் பிறகுதான் வந்தது. மூன்று சகோதரிகளையும் எனக்கு நன்றாகத் தெரியும். என் அக்கா மாடிலட்சுமி நடனம் ஆடுவதால், அவர்கள் எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்கள் ஆனார்கள். அது மட்டும் அல்லாமல் நாங்கள் எல்லோரும் சந்திக்கும் ஓர் இடம் ‘நிருத்யோதயா’ நடனப் பள்ளி. அங்குப் பல பிரபலமானவர்களும் வந்து செல்வார்கள்.

  அது மட்டுமல்லாமல் நாங்கள் எல்லோருமே மயிலாப்பூரில்தான் இருந்தோம். பத்மினி வீடு எட்வர்ட் எலியட்ஸ் ரோட்டில் இருந்தது. இப்போது ராதாகிருஷ்ணன் சாலை. என் அக்கா மாடிலட்சுமிக்காக, சில படங்களில் வாய்ப்பு வாங்கியும் கொடுத்தார் பத்மினி. இவை மட்டும் அல்ல, நாங்கள் எல்லோரும் எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வோம். அந்த அளவுக்கு எங்கள் நட்பு ஆழமாகப் பாசத்துடன் இருந்தது.

  பத்மினி ரொம்ப சிம்பிளான நபர். தான் ஒரு மிகப்பெரிய நடிகை என்றோ, நடனமணி என்றோ என்றுமே எண்ணாதவர். ஆர்ப்பாட்டமாக வாழத் தெரியாதவர். இன்னும் சொல்லப்போனால், நான் பார்த்தவரையில் சிம்பிளாக வாழ்ந்தவர்களில் முதன்மையானவர் என்றுதான் பத்மினியை கூறுவேன். அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்.

  பல்வேறு விழாக்களுக்கு என் குடும்பமும் அவரது சகோதரிகளும் ஒன்றாகச் சென்றிருக்கின்றோம். ஒருமுறை, இன்று அண்ணா சிலை இருக்கும் மவுண்ட் ரோடு ரவுண்டானா, அன்று அப்படித்தான் அந்த இடத்தை அழைப்பார்கள். அங்கு ஒரு அரசு விழா ஏற்பாடாகி இருந்தது. கலைவாணர் எல்லோரையும் அழைத்திருந்தார். பத்மினிதான் எங்கள் எல்லோரையும் அந்த விழாவுக்கு அழைத்துச் சென்றார். ஈ.வி. சரோஜா, ராஜசுலோச்சனா போன்ற பலரையும் கூப்பிட்டு சேர்த்துக்கொண்டார்.

  இப்படி உள்ள அவருக்கு ஒருமுறை ‘காவேரி’ என்ற படத்தில் ஒரு நவராத்திரி காட்சியில் சிவாஜி கணேசனுக்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு பாட்டு வரும். அதில் கிண்டலாகப் பாடும் பல வரிகளை என்னைப் பாடி நடிக்கச் சொல்லி எடுத்தார்கள். இப்படி எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைக்க வழி செய்வார்கள். அதற்குப் பிறகு ‘மரகதம்’ என்று ஒரு படத்தில் அவருடன் நான் நடித்திருக்கிறேன். ஒரு முறை ‘எதிர்பாராதது’ படத்தின்போது என்று நினைக்கிறேன். அவருக்கு ஆஸ்துமா நோய் இருந்த சமயம். மூச்சுத்திணறல் ஏற்படும். கண்ணில் கிளிசரின் போட்டாலே ஜலதோஷம் பிடித்துவிடும். ஆனாலும் அவர் படப்பிடிப்பை நிறுத்தமாட்டார். அந்தக் காலத்தில் அவர் ரொம்பப் பிஸியாக இருந்த நேரம். இரவு பகலாக படப்பிடிப்பு இருக்கும். வாரத்தின் கடைசி என்றால், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு என்று வந்தால் நடன நிகழ்ச்சியும் சேர்ந்துவிடும். இப்படி இருக்கும் நிலையில் திடீர் என்று இந்த ஆஸ்துமா வேறு அவருக்குக் கஷ்டம் கொடுக்கும்.

  இவை எல்லாம் இருந்தாலும் அவர் படப்பிடிப்பை நிறுத்தியதே கிடையாது. அதேபோன்று அவர் அதிகமாகச் சாப்பிடமாட்டார். உடல்நிலைதான் சரியில்லையே என்று நட்சத்திர ஓட்டலில் இருந்து உணவு வர வேண்டும் என்றெல்லாம் அவர் சொன்னதே கிடையாது. இன்று என்ன மதிய உணவுக்கு என்று புரொடக்ஷனில் கேட்பார். அவர்கள் என்ன சொன்னாலும் அதில் இருந்து ஏதாவது ஒரு சப்பாத்தி அல்லது அசைவ உணவு அவர்களுக்குப் பிடித்த ஏதாவது இருந்தால் இரண்டே இரண்டுதான் கேட்பார். அவருக்குத் தேவை சுடு தண்ணீர். அது கிடைத்துவிட்டால் போதும். மதிய உணவோ, இரவு உணவோ எதுவாக இருந்தாலும் இவ்வளவுதான் அவருக்குத் தேவை. ஏன் என்று அவரிடம் சிலர் கேட்கும்போது, ‘திரைப்பட முதலாளிகளுக்கு நாம எந்தக் கஷ்டமும் கொடுக்கக் கூடாது. ஒருநாள் படப்பிடிப்பு நின்றுவிட்டால், அவருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும். அதை அவருக்கு நாம கொடுத்ததாக இருக்கக் கூடாது’ என்று சொல்வார். இந்திப் படத்தில்கூட அவர் நடித்துள்ளார். அப்படி இருந்தும் ஏன் இப்படி இருக்கிறார் என்று அன்று எனக்குப் புரியவில்லை. நான் பெரியவளான பின்தான் அவர் செய்த பல விஷயங்கள் எனக்குப் புரிந்தது.

  நாங்கள் எல்லோரும் வெளியே போவது என்பது ஏதாவது ஒரு படத்துக்காகத்தான் இருக்கும். அது இல்லாமல் ஒருநாள் நாங்கள் எல்லோரும் பீச்சுக்கு போகலாம் என்று முடிவு செய்தோம். கடற்கரை என்று ஏன் முடிவாகியது என்றால், அதுதான் அவர்கள் வீட்டுக்கு மிகவும் அருகில் இருந்தது. இதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா? மூன்று பேரும் புகழ் பெற்றவர்கள். அதிலும் பத்மினி எல்லோருக்கும் மிகவும் தெரிந்த முகம்.

  கூட்டம் சேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வேறு. மூன்று பேரும் இதில் பெண்மணிகள் என்பதால் பயமும் சேர்ந்துகொண்டது. அதனால் எல்லோரும் மாற்று உடை உடுத்திக்கொள்ள முடிவு செய்தோம். இன்று பிரபலமாக இருக்கும் நடிகை ஷோபனாவின் தந்தையின் ஷர்ட்டை போட்டுக்கொண்டு, அவரின் லுங்கியை இடுப்பில் கட்டிக்கொள்வார் ராகினி. பத்மினி, தலையில் இருந்து கால் வரை மூடியிருக்கும் பெரிய அங்கியை அணிந்துகொள்வார்கள். லலிதா, பெரிய கொண்டையைப் போட்டுக்கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் தயாராக வருவார்கள்.

  இப்படிப் போகும்போது எங்களையும் கூப்பிடுவார்கள். இன்று மெரினா கடற்கரையில் இருப்பதுபோல் அன்று கடைகளோ அல்லது அவ்வளவு கூட்டமோ இருக்காது. அதேபோன்று இன்று கீழே இருக்கும் ரோடும் அன்று கிடையாது. வீட்டில் இருந்தே முறுக்கு போன்ற தின்பண்டங்களை எடுத்து வண்டியில் போட்டுக்கொள்வோம். எங்களுடன் அவர்கள் குழுவில் உள்ள சில நடனமணிகளும், அவர்களது உறவினரான சுகுமாரி, அம்பிகா போன்றோரும் இந்தக் கடற்கரை கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள்.

  ராகினிதான் ரொம்ப குறும்புத்தனம் செய்வார். அவர் செய்த ஒரு குறும்புத்தனத்தைப் பார்த்துவிட்டு பத்மினி அம்மாவே அவரைக் கடிந்துகொண்டார். அப்படி என்னதான் குறும்பு செய்தார் என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

  (தொடரும்)

  சந்திப்பு: சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai