9. அணுவியல் பேசும் வைசேஷிகம்

வேதத்தை ஏற்றுக்கொள்ளாத அவைதீக மார்க்கமாகிய ஆஜீவகத்துக்கு முன்பே வைதீகத்தின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய வைசேஷிகம், அணுவியல்

வேதத்தை ஏற்றுக்கொள்ளாத அவைதீக மார்க்கமாகிய ஆஜீவகத்துக்கு முன்பே வைதீகத்தின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய வைசேஷிகம், அணுவியல் கொள்கையை மொழிந்திருப்பதாக சில வரலாற்று, தத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களது கருத்துப்படி, வைசேஷிக தத்துவத்தை உரைத்த கணாதர், கி.மு. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு காஸ்யபர் என மற்றொரு பெயரும் உண்டு. (ஆஜீவக ஞானியான பூர்ண காஸ்யபர் அல்லர்). வேறு சிலர், இந்த கணாதர், கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.

கணாதருக்கு உலூகர் என்ற பட்டப்பெயரும் இருப்பதாகத் தெரிகிறது. ஆகையால், வைசேஷிக தரிசனம், ஔலூக்கிய தரிசனம் அதாவது உலூகரின் கண்ணோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. துறவிகளில் ஒரு வகையினரை உலூகர் என்று அழைப்பது வழக்கம். கணாத மகரிஷி என்றும் இவர் அழைக்கப்படுகிறார். கண + ஆத என்பது சேர்ந்து கணாத ஆனது. கண என்றால் விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் நெற்கதிர் போன்ற தானியங்கள். ஆத என்றால் உண்பது என்று பொருள். ஆக, விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்து உண்ணும் துறவியாக வாழ்ந்தவர் கணாதர். பக்ஷ என்பதற்கும் உண்ணுதல் என்று பெயர். ஆகையால் இவர் கணபக்ஷர் என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் எழுதிய வைசேஷிக சூத்திரம் என்னும் நூலே, இந்தக் கோட்பாட்டை அறிவதற்கான முக்கிய அடிப்படை நூலாக விளங்குகிறது. இது 10 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டவை. ஒட்டுமொத்தமாக 374 சூத்திரங்கள் இந்த நூலில் உள்ளன.

பௌதிகம் என்று சொல்லப்படும் இயற்பியலை அக்காலத்திலேயே விரிவாக அலசிய கோட்பாடு, வைசேஷிகம். இது அணுவியலோடு பிரபஞ்சவியலையும் பேசுகிறது. வைசேஷிகம் என்பது விசேஷம் என்ற சொல்லில் இருந்து உதித்தது. விசேஷம் என்பதற்கு சிறப்புத்தன்மை வாய்ந்தது, மற்றவற்றில் இருந்து வேறுபட்டது, புதுமையானது எனப் பல பொருள் உண்டு. வழக்கமான நாட்களாக அல்லாத பண்டிகை, கொண்டாட்ட தினங்களை வீட்ல விசேஷங்க என்று கூறுகிறோமே, அதேபோல்தான் இதுவும்.

அப்படி என்ன விசேஷம் இந்தக் கோட்பாட்டில்? அந்த விசேஷமான, அதாவது சிறப்பு வாய்ந்த பொருள்தான் அணு. உலகம் மற்றும் உயிரினங்களின் தோற்றத்துக்கு இந்த அணுக்களும் அவற்றின் சேர்க்கையும்தான் காரணம் என்று அடித்துச் சொல்கிறது வைசேஷிகம். நவீன விஞ்ஞானமும் அணுக்களின் சேர்க்கையே உலகம் என்று உரைக்கிறது.

சேஷம் என்றால் மீதி என்று பொருள். விசேஷம் என்றால் ஒன்றின் மீதியாக, எச்சமாக அல்லாத புதியது என்று அர்த்தம். இந்த உலகம் புதியதொரு தோற்றம்; ஏற்கெனவே இருந்த ஒன்றின் தொடர்ச்சி அல்ல என்கிறது வைசேஷிகம். அணுக்களின் கூறுகளாகிய பரமாணுக்களின் கூட்டுச் சேர்க்கையால் உலகம் உருவாகிறது, இந்தச் சேர்க்கை சிதைவதால் உலகம் அழிகிறது. எனினும், இந்த அணுக்கள் அழிவில்லாதவை, நிலையானவை. ஆக, அணுக்களால்தான் உலகம் தோன்றுகிறதே தவிர, ஏற்கெனவே இருக்கும் மற்றொன்று (ஆண்டவன் போன்ற சக்தி, மூலப் பிரகிருதி போன்றவை) இந்த உலகின் தோற்றத்துக்குக் காரணம் அல்ல என்கிறது வைசேஷிகம்.

ஆகையால் வைசேஷிகக் கோட்பாடு, அஸத்காரியவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸத் என்றால் உள்ளது என்று பொருள். இந்த ஸத் என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் ஸத்தியம் (சத்தியம்), அதாவது உண்மை என்ற சொல் பிறந்தது. இங்கே கூறப்படும் அஸத் என்பதற்கு உண்மையற்ற பொய் என்று பொருள் அல்ல. ஏற்கெனவே உள்ளது அல்ல என்று மாத்திரமே பொருள். ஏனெனில், வைதீகத்தின் இதர கண்ணோட்டங்களாகிய மீமாம்சை, சாங்கியம், யோகம், வேதாந்தம் ஆகியவை, ஒருவகையில் ஏற்கெனவே இருக்கின்ற ஒன்றுதான் இந்த உலகின் தோற்றதுக்குக் காரணம் என்று கூறுகின்றன. ஆகையால், அவை ஸத்காரியவாதம் என்ற வகைக்குள் அடங்குகின்றன. சாங்கியம் ஆண்டவனை மறுக்கின்றபோதிலும், மூலப் பிரகிருதி எனப்படும் கண்ணுக்குப் புலப்படாத ஆதிப் பேரியற்கைதான் உலகின் தோற்றத்துக்குக் காரணம் என்பதால், அதுவும் ஸத்காரியவாத வகையைச் சார்ந்ததே.

ஆயினும், வைசேஷிகம் அவ்வகை சார்ந்தது அல்ல. உலகின் தோற்றத்துக்குக் காரணமான அழிவில்லாத அணுக்கள், எதன் ஒன்றின் தொடர்ச்சியும் அல்ல என்பதே இக் கோட்பாட்டின் வாதம். அதன்படி இந்த உலகம் உருவாக்கப்பட்டது அல்ல. அது காரணம் எதுமின்றி புதிதாகத் தோன்றுகிறது. புதிய உலகம் உருவாகிறது. ஏனெனில் விளைவு என்பது, அதாவது உண்டாகியிருப்பது, ஏதோ ஒரு காரணத்தின் உள்ளடக்கமோ அல்லது அதுசார்ந்த அடையாளமோ அல்ல என்கிறது வைசேஷிகம். ஒரு வகையில், உலகின் தோற்றத்துக்கும் அதன் இயக்கத்துக்கும் அணுக்களின் சேர்க்கையை வைசேஷிகம் காரணமாகக் கூறுகின்றபோதிலும், அந்த அணுக்களின் தோற்றத்துக்கு எந்தக் காரணமும் இல்லை என்கிறது.

இதை வைசேஷிக சூத்திரம், “ஜானிம் அஸத” என்கிறது. ஆராய்ந்து பார்த்தால், இந்த உலகம், காரணம் ஏதுமின்றிப் புதிதாகத் தோன்றிய அணுக்களின் (அஸத்) மூலமே படைக்கப்பட்டுள்ளது என்று இதற்குப் பொருள். இதேபோல், அணுக்களை “நித்தியம் பரிமண்டலம்” என்று வைசேஷிகம் உரைக்கிறது. அதாவது மிகவும் நுண்ணிய இந்த அணுக்கள், நித்தியமானவை (நிலையானவை) என்று கூறுகிறது. அணுக்களைப் போலவே ஆத்மா (உயிர்), மனஸ் (மனம்) ஆகியவையும் அழியாத நிலைப்பேறு உடையவை. இவை ஒன்றல்ல, பல என்கிறது வைசேஷிகம்.

கணாதர் தனது வைசேஷிக சூத்திரத்தில், எந்த இடத்திலும் ஆண்டவன் என்ற வார்த்தையைச் சொல்லவில்லை. இருப்பினும், பிற்கால வைசேஷிகர்கள். பரமாத்மா எனப்படும் ஆண்டவனை ஏற்றுக்கொண்டார்கள். அதேநேரத்தில், வைசேஷிகத்தின்படி உலகின் தோற்றத்துக்கு ஆன்மா, பரமாத்மா ஆகியவற்றின் பங்கு பெரிதாக எதுவுமில்லை. உலகத் தோற்றத்துக்கான பங்களிப்பை, அணுக்களின் கூட்டுச் சேர்க்கையே தருகிறது. ஆனால், வைசேஷிகத்தில் இருந்து கிளைத்த நியாய தரிசனம், ஆண்டவனை ஏற்றுக்கொள்வதோடு, நிலைத்தன்மை வாய்ந்த அணுக்களைக் கொண்டு உலகின் படைப்புகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆண்டவனே காரணம் என்கிறது. இதேபோல் கணாதர். பரமாணு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அணு என்று மட்டுமே கூறியுள்ளார். எனினும். பிற்கால வைசேஷிக தத்துவவாதிகள், அணுவைப் பகுத்தால் (பிரித்தறிந்தால்) வருவது பரமாணு என்றும், அதற்கு மேல் பிரிக்கப்பட முடியாத இந்தப் பரமாணுக்களின் சேர்க்கையே உலகம் என்றும் கூறினர்.

வைசேஷிக சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, அதில் கூறப்பட்டுள்ள தத்துவங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசஸ்தபாதர், பதார்த்த தர்ம சங்கிரஹ என்னும் நூலைப் படைத்துள்ளார். இந்த நூலுக்கு கி.பி. 10-ம் நூற்றாண்டில் சில தத்துவஞானிகள் விளக்கவுரை எழுதினர். அவற்றில், ஸ்ரீதரரின் நியாயகண்டலீ, வியோமசிவரின் வியோமாவதி, உதயணரின் கிரணாவலீ ஆகியவை பிரசித்தி பெற்று விளங்குகின்றன. மேலும், உதயணரின் லக்ஷணாவலீ, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வல்லபாசார்யரின் நியாயலீலாவதி ஆகிய நூல்களும் வைசேஷிக தத்துவத்தை விரிவாக விளக்குகின்றன.

வைசேஷிக தத்துவத்தின்படி, இந்த உலகில், பேரண்டத்தில் உள்ளவற்றை ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இந்த வகைப்பாட்டுக்கு பதார்த்தம் என்று பெயர். பதம் + அர்த்தம் என்பதன் கூட்டுச் சொல்லே பதார்த்தம். பதம் என்றால் சொல். பெயர் என்றும் கூறலாம். அதாவது, எந்த ஒன்றையும் பிரித்துப் பார்த்து விளங்கிக்கொள்ளச் செய்வதற்காக அழைக்கப்படும் பெயர் அல்லது சொல்லே பதம். அர்த்தம் என்பது அதனுடைய பொருள். குறிப்பிட்ட ஒரு சொல்லைச் சொன்னதும் அதன் தன்மை நமது மனத்தில் எழுகிறது அல்லவா, அவ்வாறு ஒரு சொல்லின் பொருளை நம்மிடையே விளங்கச் செய்வதுதான் அர்த்தம். இவை இரண்டும் சேர்ந்ததே பதார்த்தம். இதனை சில தத்துவஞானிகள் அர்த்தபதி என்றும் அழைத்தனர். பொருள் கொண்ட சொல் என்று இதனைக் கூறலாம்.

வைசேஷிகம் கூறுகின்ற அந்த ஏழு வகை பதார்த்தங்கள் யாவை?

1. திரவியம் (கருப்பொருள்)

2. குணம் (தன்மை)

3. கர்மம் (வினை அதாவது செயல்)

4. சாமான்யம் (பொதுத்தன்மை)

5. விசேஷம் (சிறப்புத்தன்மை)

6. சமவயம் (இயல்பு)

7. அபாவம் (இல்லாமை).

இவை பற்றிய விளக்கங்களை அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com