11. வைசேஷிகம் கூறும் அதிருஷ்டம்

திருஷ்டம் என்றால் காணக்கூடியது என்று பொருள். அதிருஷ்டம் என்றால் காண இயலாதது ஆகும்.

சாதாரணமாக, பரிசுச் சீட்டுக் குலுக்கலில் பரிசு விழுந்தாலோ அல்லது திடீரென பணமோ சொத்தோ கிடைத்தாலோ நாம் கூறுகிறோமே அவருக்கு நல்ல அதிருஷ்டம் என்று, அதுவல்ல வைசேஷிகம் கூறும் அதிருஷ்டம். இது தத்துவார்த்த ரீதியிலானது. திருஷ்டம் என்றால் காணக்கூடியது என்று பொருள். அதிருஷ்டம் என்றால் காண இயலாதது ஆகும்.

இந்த உலகின் தோற்றத்துக்கான காரணத்தை நாம் காண இயலாது. ஏற்கெனவே உள்ள ஒன்றின் (ஆண்டவன் அல்லது மூலப் பிரகிருதி) விளைவாக இந்த உலகம் தோன்றவில்லை. காரணம் ஏதுமின்றி, புதிதாக இந்த உலகம் தோன்றுகிறது என்பதே வைசேஷிகத் தத்துவம். ஆயினும், உலகம் தோன்றுவதற்கு அதிருஷ்டம் காரணம் என்று கூறப்பட்டுள்ளதே எனில், இங்கே காரணம் என்பது யாரோ ஒருவர் அல்லது ஒரு சக்தி இந்த உலகத் தோற்றத்துக்குக் காரண கர்த்தா என்ற பொருளில் கூறப்படவில்லை. இங்கே காரணம் என்பது தோற்றுவாய் அதாவது தொடக்கம் என்ற பொருளிலே கையாளப்பட்டுள்ளது.

ஆக, உலகின் தொடக்கம், காண இயலாத அதிருஷ்டத்தின் செயலாகும். இந்த அதிருஷ்டம் என்பதற்கு வைசேஷிகம் கூறுகின்ற பொருள்தான் என்ன? சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த உலகமானது அணுக்களின் கூட்டுச் சேர்க்கையால் உருவானது. இந்த உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் இதேபோன்ற கூட்டுச் சேர்க்கையால் உருவானவையே. இந்தக் கூட்டுச் சேர்க்கையைப் பகுத்துக்கொண்டே போனால், அவை அணுக்கள் ஆகும். அந்த அணுக்களையும் பகுத்தால் கிடைப்பது பரமாணு. இந்தப் பரமாணுக்களின் கூட்டுச் சேர்க்கையால் உலகம் தோன்றி, அந்தச் சேர்க்கை சிதையும்போது உலகமும் அழிகிறது. ஆயினும் இந்தப் பரமாணுக்களின் கூட்டுச் சேர்க்கைதான் தோன்றி அழிகிறதே அன்றி, அணுக்கள் நித்தியமானவை.

உலகைக் கட்டமைத்துள்ள திரவியங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கின் பரமாணுக்களும் குணத்திலும், செயலிலும், எண்ணிக்கையிலும் வேறுபட்டவை. தனித்தன்மை வாய்ந்தவை. இந்தப் பரமாணுக்கள் இயங்கும் தன்மை கொண்டவை என்றபோதிலும், தாமாகவே இயங்க இயலாதவை. அதிருஷ்டம் எனப்படும் காணவியலாத சக்தி ஒன்று, ஜீவன்களின் சுக துக்க அனுபவங்களை இயங்கச் செய்வதற்காக அணுக்களை இயங்க வைக்கிறது. இவ்விதம் அணுக்கள் இயங்குவதற்கு ஆகாயம் ஊடகமாக, ஒரு தளமாக அமைகிறது. அதிருஷ்டம் இயக்கி வைத்ததால் அணுக்கள் அதிர்வடைகின்றன. இதற்கு பரிஷ்பந்தம் என்று பெயர். இந்த அதிர்வால் அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து இரட்டை அணுக்கள் (த்வாயணுக) ஆகின்றன.

மிகக் குறுகியதாகவும் நுண்ணியதாகவும் இருக்கும் இந்த இரட்டை அணுக்கள், பின்னர் மூன்று மூன்றாக இணைந்து மூவணுக்கள் (த்ரையாணுக) ஆகின்றன. இவை சற்று நீண்டதாகவும் புலப்படக்கூடியதாகவும் இருக்கின்றன. இவ்வாறான அணுக்களின் வடிவு சார்ந்த வளர்ச்சி மூலம் காற்று, தீ, நீர், நிலம் ஆகிய நாம் பார்க்கக்கூடிய அல்லது அறியக்கூடிய பரு வடிவிலான பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வாறு அணுக்களை அதிர்வடையச் செய்து பூதங்களைத் தோற்றுவிக்கும் அதிருஷ்டம், இந்த பூதங்களையும் செயல்படச் செய்து உலகின் இயக்கத்தை உருவாக்குகிறது.

அக்னேஹி ருத்வ ஜ்வலனம் வாயோஹு திர்யக் பவனம்
அணூனாம் மனஸாச ஆத்யம் கர்ம அதிர்ஷ்ட காரிதம்”

என்கிறது வைசேஷிக சூத்திரம் (5.2.13).

தொடக்கத்தில் (ஆதியில்) தீயானது (அக்னி) மேல்நோக்கி எரிவதற்கும், காற்றானது (வாயு) பக்கவாட்டில் வீசுவதற்கும், அணுக்களும், மனமும் செயல்படத் தொடங்கியதற்கும் கண்ணுக்குத் தெரியாத ஆற்றலே (அதிருஷ்டம்) காரணம் என்கிறது வைசேஷிகம். மேற்சொன்ன சூத்திர நூற்பாவின்படி, அணுக்கள் இரண்டு நிலைகளில் இருப்பது தெரியவருகிறது. ஒன்று, எவ்விதச் சலனமுமின்றி நிலையாக இருத்தல்; மற்றொன்று, இயங்குதல்.

அணுக்களின் சிறப்புக் குணங்களாகிய ஸ்பரிசம் (தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), கந்தம் (வாசனை), ரஸம் (சுவை) முதலியவை, அணுக்களின் வெவ்வேறு விதமான தொடக்க இயக்கத்தின் மூலமே அமைகின்றன. இவ்வாறான இயக்கத்துக்குக் காரணம் அதிருஷ்டம்.

அது சரி, இந்த அதிருஷ்டம் என்பதுதான் என்ன? அது எவ்விதம் இயங்குகிறது? ஆன்மாக்கள் முற்பிறவிகளில் செய்த பாவ-புண்ணியங்களின் ஒட்டுமொத்தமே அதிருஷ்டம். ஒரு பிரளயம் (ஒட்டுமொத்த அழிவு) முடிந்து, பிரபஞ்சம் தொடங்கும்போது, இந்த அதிருஷ்டம் எனப்படும் சக்தியே ஆன்மாக்களின் அனுபவத்துக்காக மீண்டும் இயக்கத்தை அதாவது படைப்பைத் தொடங்குகிறது.

ஆன்மாக்களின் பாவ-புண்ணிய பலன்களால் தோன்றிய அதிருஷ்டத்துக்குக் குறிப்பிட்ட கால வரையறை உண்டு. அந்தக் காலம் முடியும்போது, அணுக்களால் ஏற்பட்ட கூட்டுச் சேர்க்கை சிதைவடைந்து, அனைத்தும் அழிகையில், அந்தந்த பூதங்கள் அவற்றின் நுண்கருப்பொருட்களோடு லயமடைகின்றன. பின்னர், அதிருஷ்டத்தின் மூலம் மீண்டும் பிரபஞ்சம் இயங்கத் தொடங்குகிறது என்கிறது வைசேஷிகம்.

இவ்வாறாக, அணுக்களின் கூட்டுச் சேர்க்கையால் அமைந்த பொருள்களின் மீது அதிருஷ்டம் நிகழ்த்திய இயக்கமே உலகின் தோற்றத்துக்குக் காரணம் என்று வைசேஷிகம் தொடக்கத்தில் கூறியபோதிலும், இந்த உலகின் தோற்றம் மற்றும் இயக்கத்துக்கு ஈஸ்வரன் அல்லது மகேஸ்வரன் எனப்படும் ஆண்டவன் செயல்பாட்டுக் காரணமாக விளங்குகிறார் என்று பிற்காலத்தில் விளக்கம் கொடுக்கத் தொடங்கியது. ஏனெனில், அறிவற்றதாகிய (Unintelligent) அதிருஷ்டம் எவ்வாறு, அறிவுசார்ந்த இயக்கத்துக்குக் காரணமாக இருக்க முடியும் என்று எதிர்முனைகளில் இருந்து எழுந்த வினாக்களுக்கு விடையாக, ஆண்டவனை வைசேஷிகம் முன்வைத்தது.

நமது ஹிந்து அல்லது பாரதீய தத்துவங்களுக்கு அடிப்படை, ஆண்டவன் என்பதைவிட தர்மம் (அறம்) என்பதே ஆகும். ஆகையால்தான் இதனை ஹிந்து தர்மம், சனாதன தர்மம் (தோற்றம் தெரியாத பண்டைய அறம்) என்று சிறப்பித்து அழைக்கின்றனர். உலகை இயக்குகின்ற, கட்டிக் காப்பாற்றுகின்ற முதன்மைக் கோட்பாடுகளாக அறத்தையே ஏறத்தாழ அனைத்து சம்பிரதாயங்களும் (தத்துவ, மதப் பிரிவுகளும்) தூக்கிப் பிடிக்கின்றன. அதேநேரத்தில், அவற்றை நெறிமுறைப்படுத்தும் நேர்த்தியாளராக, காப்பாளராக ஆண்டவனை பல்வேறு சம்பிரதாயங்கள் ஏற்றுக்கொண்டன என்பதே உண்மை. அந்த வகையில், உலகின் தோற்ற, இயக்கத்துக்கு அறிவியல்ரீதியில் பொருள்சார்ந்த அணுக்களையும் பூதங்களையும் காரணமாக முன்வைக்கும் வைசேஷிகமும், இதன் இயக்கத்தின் ஒழுங்கமைதியைக் கருத்தில்கொண்டு அறவியல்ரீதியில் ஆண்டவனை ஏற்றுக்கொண்டது. என்னதான் நவீன அறிவியலின் துணைகொண்டு பொருள் முதல்வாதத்துக்கு வலு சேர்த்தாலும்கூட, அந்த அறிவியல் என்னும் பெயரிலேயே உட்பொருளாக விளங்கும் அறிவாகிய கருத்துமுதல்வாதமும் பிரிக்க இயலாமல் இணைந்தே பயணப்பட்டு வருகிறது.

அது இருக்கட்டும். இப்போது, வைசேஷிக தத்துவ விளக்கம் அளித்த கணாதரின் அறிவுக்கூர்மைக்கு வருவோம். அணுவைப் பற்றி முதலில் பேசிய விஞ்ஞானியாக மேலைநாட்டினர் வர்ணிக்கும் கி.மு. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க தத்துவ ஞானியான டெமாக்ரடீஸைவிட காலத்தால் முந்தியவர் பாரதத்தின் கணாதர். கடந்த நூற்றாண்டு கண்டெடுத்த உலகின் மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் பல்வேறு கோட்பாடுகளை அக்காலத்திலேயே எடுத்துரைத்திருக்கிறார் கணாதர்.

அணு, அழிவற்றது என்றும் கோள வடிவிலானது என்றும் தற்கால விஞ்ஞானம் சொல்கிறது. இதனைத்தான் கணாதரின் வைசேஷிக சூத்திரம், அணுவை நித்யம் பரிமண்டலம் (7.1.20) என்கிறது. நித்யம் என்றால் எப்போதும் நிலைத்திருக்கக்கூடியது, அழிவில்லாதது என்று பொருள். பரிமண்டலம் என்பதற்கு சுற்றிலும் வட்டவடிவமான அல்லது கோள வடிவமான என்று பொருள். பரிமண்டலத்துக்கு விளக்கம் அளிக்கையில், நமது உணர்வுக்கருவிகளுக்குப் புலப்படாத அணுவானது, எந்தத் திசையில் இருந்தும் சமமான தூரத்தில் உள்ளதாக வடிவம் கொண்டுள்ளது என்கிறார் கணாதர். எந்தத் திசையில் இருந்தும் சமமான தூரம் எனில், அதன் வடிவம் வட்டமாக அல்லது கோளமாக இருத்தலே சாத்தியம்.

அத்துடன், அணு ஒரே நேரத்தில் துகளாகவும் (particle) அலையாகவும் (wave) இருப்பதாக நவீன அறிவியலான குவாண்டம் ஃபிஸிக்ஸ் கூறுகிறது. இதைத்தான் வைசேஷிகமும் கூறியுள்ளது. அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து இரட்டை அணுக்களாகவும், மூவணுக்களாகவும் உருவாவது துகள்களாக இருப்பதன் மூலமே சாத்தியம். அதே நேரத்தில், அவற்றில் இயக்கம் ஏற்பட்டதாக வைசேஷிகம் கூறுவது, அணுக்களின் சலனத்தன்மையை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பரவுகின்ற அலைத்தன்மையைக் குறிக்கிறது.

மேலும், இடத்துக்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி தியரி எடுத்துரைக்கிறது. இதனை அன்றே மொழிந்திருக்கிறார் கணாதர். வைசேஷிகம் கூறுகின்ற, உலகின் தோற்றத்துக்குக் காரணமான 9 திரவியங்களில் திக்கு (இடம்), காலம் (பொழுது) ஆகிய இரண்டு திரவியங்கள் இடம் பெற்றிருப்பதும், அவற்றுக்கான விளக்கங்களும் இதனை விண்டுரைக்கும். உலகின் இயக்கம் தொடங்கும்போதே அதன் அடிப்படையாக இடமும், காலமும் அமைந்துவிடுகின்றன. இடமும், காலமும் இல்லையென்றால் இயக்கமும் இல்லை என்றே பொருள். இடமும், காலமும் இணைந்த கூட்டில்தான் பொருள்களின் இயல்புக் குணங்களான தொடு உணர்வு (காற்று), வாசனை (நிலம்), சுவை (நீர்), நிறம் (தீ) ஆகியவை அடங்கியுள்ளன. உலகில் உள்ள பொருள்களை, அவற்றின் இந்தக் குணங்களைக்கொண்டே உணர்வுக் கருவிகள் மூலம் மனமானது உணர்ந்துகொள்கிறது. ஆக, இடத்துக்கும், காலத்துக்கும் உள்ள தொடர்பும் பிரபஞ்ச இயக்கமும் இணைபிரியாதவை என்கிறது வைசேஷிகம்.

தமிழில் வைசேடிகம் எனப்படும் இந்தத் தத்துவத்தை உரைத்தவர் கணாதன் என்று சான்று பகர்கிறது மணிமேகலை. அதேநேரத்தில், நீலகேசி இக் கோட்பாடு குறித்து மேலும் சில விளக்கங்களைத் தருகிறது. இந்தக் காப்பியத்தின் நாயகியான நீலகேசி என்னும் சமணப் பெண் துறவி, உலோகசித்து என்னும் வைசேடிகத் துறவியைச் சந்தித்து, விவாதிப்பதாக வைசேடிக வாதச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தச் சருக்கத்தில், பொது (சாமான்யம்), சிறப்பு (விசேஷம்) ஆகிய தன்மைகளுடன் பொறிகள் இணைவதே உலகம் என உலோகசித்து கூறுகிறார்.

மேலும்,

பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி
ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை

என்றும் உலோகசித்து உரைக்கிறார். அதாவது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பூதங்கள் ஐந்தோடு திசை (இடம்), மனம், பொழுது (காலம்), உயிர் ஆகிய (நான்கும் சேர்ந்த) ஒன்பதும் உரைக்கப்படுகின்ற திரவியங்களாகும் என்பது இதன் பொருள்.

பாரதத்தின் பண்டைய மெய்ஞானத் தத்துவங்களில் ஒன்றான இந்த வைசேஷிகத்தில், ஏற்கெனவே இல்லாததில் இருந்து உலகம் புதிதாகத் தோன்றுகிறது என்று கூறினாலும், அணுக்களும், சில திரவியங்களும் அழிவில்லாதவை என்றும், பாவ-புண்ணிய பலன்களை அடிப்படையாகக் கொண்ட அதிருஷ்டத்தின் மூலம் புதிய உலகின் தோற்றம் அமைவதாகவும், இதன் செயல்பாட்டுக் காரணமாக ஆண்டவன் இருப்பதாகவும் (பிற்கால வைசேஷிகர்கள்) கூறுவது முரணாக உள்ளதே என்றால், அதற்கான விடையை வைசேஷிகத்தின் நீட்சியாக அமைந்த நியாய தத்துவம் பகர்கிறது.

அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com