6. உலகாயதன்மதம் மறுதலை

உலகின் தோற்றம், இயக்கம் குறித்து லோகாயதம் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

உலகின் தோற்றம், இயக்கம் குறித்து லோகாயதம் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. இது, மனிதர் அனைவருக்கும் ஒரு காலகட்டத்தில் வரும் ஐயங்களே. இவ்வாறு கேள்வி எழுவதால், அந்தக் கேள்விகளில் மாத்திரமே மகிழ்வுற்று விடை தேட முயலாமல் இருப்பது சரியாகுமா? கேள்வி எழுப்புவது சுலபம். அதற்கு விடை தேடுவதுதான் கடினம். அந்தக் கடினமான பணியை சிரமேற்கொண்டதால், விடையை அடைவதற்குப் பல புதுப் புது வழிமுறைகள் தோன்றின. இதில் ஒரு வழிமுறையில் கிடைக்கும் விடையில் எழும் சிறு சிறு சந்தேகங்களுக்கு மற்றொரு வழிமுறை பதில் கூறுகிறது. அதில் எழும் சந்தேகங்களுக்கு வேறொரு வழிமுறை பதிலாகிறது. இவ்வாறு நீடித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகையால்தான், நமது முன்னோர்கள் பன்முகத்தன்மையைப் பாராட்டினார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் வித்தைக்கு வேர் பாய்ச்சினார்கள். “எனது கருத்தோடு மாறுபடும் உனது கருத்தை நான் ஏற்காவிடினும், உனது கருத்தை நான் மதிக்கிறேன்” என்றார்கள். ஏகம் ஸத், விப்ரா பஹுதா வதந்தி (உண்மை ஒன்றுதான், அதனை அறிஞர்கள் பலவிதங்களில் மொழிகிறார்கள்) என்று அடக்கத்துடன் கூறினார்கள். இதையே, சமண மதம் சயாத் வாதம் என்ற பெயரில் தனித் தத்துவமாகவே வார்த்தெடுத்தது. சயாத் வாதம் என்றால், ஒருவேளை இப்படியும் இருக்கலாம், இல்லையேல் அப்படியும் இருக்கலாம் என்று கூறும் பல்வேறு வாய்ப்புகளை, அடிப்படை நோக்கில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தத்துவப் போக்கு. இதேபோல்தான், கணந்தோறும் உலகம் மாறிக்கொண்டே இருப்பதால், கருத்துகளும் மாறிக்கொண்டேதான் இருக்கும் என்று கூறும் க்ஷணிக வாதம் என்பதை முன்வைக்கிறது பௌத்தம். இவை பற்றியெல்லாம் பின்னர் காண்போம். இப்போது லோகாயதம் எனப்படும் உலகாயதன்மதத்துக்கு சிவஞான சித்தியார் கூறும் மறுப்பைக் காண்போம்.

‘காட்சி மாத்திரமே பிரமாணமாகக் கொள்ளத்தக்கது. அறிவு என்பது பூதங்களின் சேர்க்கையால் உருவானது. இது இயல்பானது. ஆகையால், ஆன்மாவோ ஆண்டவனோ கிடையாது’ என்பது லோகாயதத்தின் அடிப்படைக் கொள்கைகள். இவற்றை மறுக்கும் அல்லது மறுகேள்விகள் எழுப்பும் உலகாயதன்மதம் மறுதலை என்ற பகுதியை சிவஞான சித்தியார் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களாவன...

உள்ள துஆவது கண்ட துஎன்றுஉரை கொண்ட துஎன்உல கத்துநீ
பிள்ளை யாய்வளர் கின்ற நாள்உனைப் பெற்ற தாயொடு தந்தையைக்
கள்ள மேபுரி காலன் உயிர் உண்ண இன்றொரு காளையாய்
மெள்ள வேஉளர் என்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே. (1)

உலகாயதனே நீ கண்ணால் காண்பது மட்டுமே மெய் என்று கொள்கை கொண்டிருப்பது ஏனோ? அவ்வாறெனில், நீ பிறந்து சிறுபிள்ளையாய் வளர்கின்ற காலத்தில் (அதாவது நினைவு தெரியாத குழந்தைப் பருவத்தில்) உனது தாயொடு தந்தையும் - மற்றவர்கள் அறியாமல் உயிரைப் பறிக்கும் காலனது செயலால் - இறந்துவிட, நீ வளர்ந்து பெரியவனாகிய பின்னர், நமக்கு தாய், தந்தையர் உண்டு (இருந்திருக்கிறார்கள்) என்பதை மெதுவாக அறிந்துகொள்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அச் சமயத்தில், நீ உனது பெற்றோரை நேரில் பார்த்தா அதை மெய் என்று கொண்டாய்? அனுமானத்தால்தானே! அப்படியிருக்க, அனுமானத்தை பிரமாணமாக (ஏற்கத்தக்க அடிப்படையாக) நீ ஏற்காமல் இருப்பது ஏன்? என்று வினவுகிறது சிவஞான சித்தியார்.

மேலும், இடி இடித்து மேகம் திரண்டு எழும்போது மழை பெய்யும் என்பதையும், மலையில் உள்ள அகில், சந்தனம் முதலிய பொருட்களைத் திரட்டியபடி திடீரென வெள்ளம் வருகையில், அருகில் உள்ள மலை மீது மழை பொழிந்து இந்த வெள்ளம் உருவாகியிருக்கிறது என்பதையும் ஊகத்தால்தானே அறிகிறாய் என்றும் கேள்வி எழுப்புகிறது. இதில், மேகத்தைக் கண்டதும் மழை பொழியும் என்பதை உணர்வது காரண அனுமானம். புதுப் புனலைக் கண்டதும், மலையில் மழை பொழிந்திருக்கிறது என்பதை அறிவது காரிய அனுமானம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஆகையால், ஊகமும் (அனுமானமும்) முக்கியப் பிரமாணமே என்பதை சிவஞான சித்தியார் கீழ்வரும் பாடலில் மேலும் வலியுறுத்துகிறது...

காண்ட லோஅனு மானம் ஆவதும் காட்சி முன்னதும் காட்சியேல்
பூண்ட பூத உடம்பின் உள்எழு போதம் என்கொடு கண்டனை
மாண்ட வாயில் மனம்கொள் ஞானம் உணர்ந்த தும்அனு மானம்என்(று)
ஈண்டு பூதம் இயைந்தது இவ்வுடல் என்பது என்பிர மாணமே. (3)

முன்சொன்ன இருவகை அனுமானங்களும் ஏற்கெனவே காணப்பட்ட காட்சியால் தோன்றிய அனுமானங்களே - அதாவது மேகம் திரண்டால் மழை பொழியும் என்று உணர்வதும்; அகில், சந்தனம் ஆகிய பொருள்களைத் திரட்டியபடி திடீர் வெள்ளம் வந்தால் அருகில் உள்ள மலை மீது மழை பொழிந்திருக்கிறது என்று அறிவதும் ஆன இரு வகை ஊகங்களும், முன்னர் ஏற்கெனவே கண்ட காட்சியின் அடிப்படையில் செய்யப்பட்ட அனுமானங்கள் எனறு உலகாயதனே நீ வாதிடலாம். அவ்வாறெனில், பூதக் கூட்டத்தில் இருந்து அறிவு எழுவதாக எந்தக் காட்சி மூலம் அறிந்தாய்? எவ்வாறு அதனை நேரடியாகக் கண்டாய்? பொறிகளைக் கொண்டு பல விஷயங்களை அறிந்துகொள்வதாக ஏற்படும் அறிவு என்பதும் ஓர் ஊகம்தானே? அதனை நேரடிக் காட்சியாகக் காணமுடியுமா? (அதாவது நமக்கு அறிவு, மனம் இருப்பதை நேரடியாகக் காண முடியுமா? அவ்வாறு இருப்பதை அனுமானிக்கத்தானே முடியும்!) பூதங்களின் சேர்க்கையால் உடல் உருவாகிறது என்று கூறுகிறாயே அது என்ன நேரடிக் காட்சியா? அதுவும் உனது அனுமானம்தானே? (ஆகையால், காட்சி அளவையைப்போல அனுமானத்தையும், வேதம் முதலிய குற்றமில்லாத நூல்களையும் அளவைகளாக ஏற்கலாம் என்று சிவஞான சித்தியார் வாதிடுகிறது).

நான்கு பூதங்கள் நித்தியமானவை என்று உலகாயதா நீ கூறுவதும் தவறு. அவை உருக்களாக எழுவதோடு அழிந்துவிடுகின்றன. மண் கொண்டு உருவாக்கப்படும் பாத்திரங்கள்போல பல்வேறு உருவங்கள் எழுவதாக நீ கூறுகிறாய். அவ்வாறு உருவாக்க குயவன்போல் ஒரு கர்த்தா (செய்பவன்) இருந்தாக வேண்டுமே! நீரில் எழும் குமிழிபோல் மனம் தோன்றும் என்றாய். அவ்வாறெனில் நீரில் குமிழி தோன்ற வாயுவல்லவா காரணம்? அதேபோல், உடலுக்குள் மனத்தைக் கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டுமே? பூதங்களின் சேர்க்கையால் உருவங்கள் தோன்றும் எனில், அது வானிலிருந்து அப்படியே குதிக்க வேண்டியதுதானே? (அதாவது உடல்கள் தானாகவே தோன்ற வேண்டியதுதானே? அதற்கு ஒரு முறை என்று இருப்பது ஏன்?) மேலும் அது ஒருபோல இருக்காமல், பல்வேறு வகைப்பட்ட தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்களாகப் பிறக்க எது காரணம்? ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையான உயிரினங்களின் பன்மைக்கு, வெறும் பூதக் கூட்டங்களின் சேர்க்கை மட்டுமா காரணம்? கர்ம வினையின் தொடர்ச்சியால் அல்லவா இவ்வாறு பல்வேறு தோற்றங்கள் உருவாகின்றன! (கர்ம வினை என்பதை முற்பிறவிப் பயன் என்று பொதுவாகக் கூறலாம். அதே நேரத்தில் நுணுகி ஆராய்ந்தால், உயிரினத் தோற்றங்களின் எண்ணங்களால் எழும் செயல்பாட்டு வினைத் தொடர்ச்சி காரணமாக என்ற நுட்பமான விளக்கத்தையும் பெறலாம்) புத்தி, போகம் முதலிய குணங்கள், புசிப்புகள் ஆகியவற்றை பூதங்களா தருகின்றன? என்று சிவஞான சித்தியார் கேள்வி எழுப்புகிறது.

அறிவு உடல்குணம் என்னில் ஆனையது ஆதி அந்தம் எறும்பதா
உறும் உடல்பெரி தான வற்றின் உதித்தி டும்பெரி தாகவே
சிறுஉ டல்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமும்
பெறும் உடல்சிறி தாவ துஎன்பெரி தாவ துஎன்சில பேசிடே. (11)

அறிவு, உடலின் குணம்தான் என்று நீ வாதிட்டாயானால், பெரிய யானை முதல் சிறிய எறும்பு வரையான பல்வேறு உடல் வகை கொண்ட உயிரினங்களை எடுத்துக்கொள்வோம். இதில் பெரிய உடல் கொண்ட யானைக்கு அறிவு பெரிதாகவும், சிறிய உடல் கொண்ட எறும்புக்கு அறிவு சிறிதாகவும் இருக்க வேண்டும். ஆனால், பரிணாம வளர்ச்சியில் சிறிய உருவம் கொண்ட மனிதருக்கு, பெரிய உருவம் கொண்ட யானையைவிட அறிவு அதிகமாக இருப்பது எவ்விதம்? இதற்கு வேறு விளக்கங்கள் கூறு என்று கேட்கும் சிவஞான சித்தியார், இதே பகுதியின் 15-வது பாடலில், பூதங்களின் சேர்க்கையால்தான் உயிரினங்கள் தோன்றுகிறது எனில், ஆணும் பெண்ணுமாகக் காதலோடு செய்யும் புணர்ச்சி காரணமாக உயிருள்ள உடல்கள் தோன்றுவது எப்படி? என்று வினவுகிறது. உலகத்தின் ஆதியே (சிவ சக்தியே) ஆண் - பெண் என்ற இருவகை வேறுபாடாக இணைந்ததால், அதன் வழியில் உயிரினங்களும் இணைந்து தோற்றுவிக்கின்றன என்றொரு விளக்கமும் கூறுகிறது. (ஐம்பூதங்களை பொருள் சக்தியாகவும், பேரறிவாகிய உயிராற்றலை சிவமாகவும் உருவகிக்கிறது பாரதிய மெய்ஞானம். இவற்றையே இறைவடிவமாக சைவம் போதிக்கிறது).

இன்பத்தைத் துய்ப்பது இயல்பு என்று கூறினால், துன்பம் வருவதற்கு எது காரணம்? முந்தைய வினைப் பயனால் அல்லவா இன்ப, துன்பங்கள் வருகின்றன? தனக்கு ஒரு தோற்றுவாய் (ஆதி) இன்றி அனாதியாக இருக்கும் கர்த்தாவே (அதாவது ஆதிப் பேரறிவே), ஆன்மாவையும் அதனுடைய கர்ம பலன்களையும் அறிந்து அதற்கேற்ப இப்பிறவிக்கான பிறப்பைத் தருகிறது என்கிறது சிவஞான சித்தியார்.

காண்ஒ ணாகர ணங்க ளுக்குஉயிர் கண்டி டாமையின் இன்றுஎனில்
காணு மோகடம் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதும் கண்ணதே
காண்ஒ ணாதுஉயிர் தானும் இப்படி கண்டி டும்கர ணங்களைக்
காண்ஒ ணாகர ணங்க ளுக்குஉயிர் உண்மை யாவதும் கண்டிடே. (19)

புறக் கரணங்களால் (கருவிகளால்) காண இயலாததால், உயிர் என்பது இல்லை என்று கூறுகிறாயே? அவ்வாறெனில், நீ கூறிய கடம் (குடம்) முதலிய அனைத்துப் பொருள்களையும் கண்டு நிற்கின்ற கண்ணை, அந்தக் கண்ணே காண இயலுமா? இயலாது அல்லவா? அதேபோல்தான், நம்மால் காண இயலாத உயிர் (ஆன்மா) அறிவுடையது ஆகையால், பிற கரணங்களைக் கண்டு நிற்கிறது. ஆயினும் உடலைக் காணும் கண்ணை, உடலின் பிற உறுப்புகளைக் கொண்டு காண இயலாததுபோல, உயிரையும் பிற கரணங்களைக் கொண்டு கண்டறிய இயலாது. ஆகையால், உயிர் என்ற உண்மை இருப்பதை உணர்ந்துகொள் என்கிறது சிவஞான சித்தியார்.

அடுத்த பாடல்களில் கூறுவதாவன - விளக்கு உடைந்துபோனால் தீயும் பிரிவதைப்போல, உடல் அழிந்தால் உயிரும் பிரிந்துபோவதால், உயிருக்குத் தனி இருப்பு இல்லை என்று கூறுகிறாயே உலகாயதா! நெருப்பானது, பிறிதொரு பொருளைப் பற்றி நின்றே தன் உருவத்தைக் காட்டிடக்கூடியது. அது தனியாக தனது உருவத்தைக் காட்டிட முடியாது. அதுபோலத்தான், ஆன்மாவும் ஒரு உருவத்தில் கூடி நின்று தன்னைக் காட்டும். தீபம், திரியின் மூலம் எண்ணெய்யைப் பருகி எரிவதுபோல, ஆன்மாவானது உடலைக் கொண்டு கர்மவினையை அனுபவிக்கிறது. ஏற்கெனவே இறந்திட்ட அறிவே (ஆன்மாவே) மீண்டும் பிறக்கும் என்பது இசையாத கருத்து எனில், ஆழ்ந்த உறக்கத்தின்போது நமக்கு இல்லாத உணர்வு, தூக்கம் கலைந்ததும் மீண்டும் வந்துவிடுகிறதே? அதுபோல்தான் இதுவும். (இதைத்தான், உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்று திருக்குறள் செப்பிடுகிறது).

இவ்வாறாக ஆன்மா, வினைப்பயன், ஆண்டவன் உண்டு என்று கூறி, சார்வாகம், லோகாயதம் என்று கூறப்படும் நாத்திகவாதத்தை சிவஞான சித்தியார் மறுக்கிறது. ஆனால், நாத்திகம் அல்ல ஆன்மிகம் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு மார்க்கங்கள், இவற்றில் சிலவற்றை ஏற்றும் மறுத்தும் விளக்கத்தில் மாறுபட்டும் லோகாயதத்தை மறுதலிக்கின்றன. அதேநேரத்தில், லோகாயதத்தோடு மிக நெருக்கமானதாக மதிக்கப்படும் தத்துவங்களில் ஒன்றான ஆசீவகம் (ஆஜீவிகம்) ஆன்மாவை ஏற்பதுடன், கர்மவினைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, ஊழ்வினை எனப்படும் நியதிக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com