Enable Javscript for better performance
45. முடிந்த முடிவு- Dinamani

சுடச்சுட

  

  45. முடிந்த முடிவு

  By பத்மன்  |   Published on : 30th August 2016 02:58 PM  |   அ+அ அ-   |    |  

   

  சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட விசிஷ்டாத்வைத வேதாந்த மரபுகளில் தமிழகத்தில் வேரூன்றிய சித்தாந்த சைவம் மிக முக்கியமானது. வேதாந்தம் என்ற சொல்லுக்கு இணையான சித்தாந்தம் என்ற பதத்தைக் கொண்டிருப்பது இதன் தனிச் சிறப்பு. வேதம், அதாவது அறிவின் முடிவு வேதாந்தம் என்றால், அனைத்து வகை சிந்தனைகளின், அதாவது எண்ணங்களின் முடிவு சித்தாந்தம் என்பதாகும். சைவ சித்தாந்தத்தின்படி அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், பேதாபேதம் மற்றும் இன்னபிற தத்துவங்கள் எல்லாம் நிறைவுபெறாதவை, சித்தாந்தம் மாத்திரமே முழு நிறைவான முடிவு. ஆகையால்தான், சைவ சித்தாந்தத்தை முடிந்த முடிவு என்பார்கள்.

  வேதங்களுடன் சைவ ஆகமங்களையும் தனது தத்துவத்துக்கு ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது சித்தாந்த சைவம். அத்துடன், சைவ நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்களான தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை தலையாயதாகக் கருதுகிறது சைவ சித்தாந்தம்.

  வேதாந்தத்துக்கு மாற்றாக சித்தாந்தம் என்று பெயர் கொண்டிருப்பதால், இதனை வேதத்துக்குப் புறம்பானது என்று வேறு தத்துவங்களைச் சார்ந்த சிலரும், இத் தத்துவத்தைப் பின்பற்றுவர்களில்கூட ஒருசிலரும், நவீன கால நாத்திகர்களும் அவர்களால் திரிவுபட்ட சில தீவிரத் தமிழ்ப் பற்றாளர்களும் கூறுவதுண்டு. அது முற்றிலும் தவறு. வேதத்தையும் வேதாந்தத்தையும் சித்தாந்தம் புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவற்றின் உண்மையான, தொன்மையான உட்பொருளை மீட்டெடுத்துத் தந்தது. வைதீக மார்க்கத்தில் புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தரும் மீமாம்சை மேலோங்கியபோது சில வேள்வி வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்படி பலிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த பலிகளை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் மேதாபதி என்றழைக்கப்பட்டார். பலியிடப்படும் விலங்குகள் பசு என்றழைக்கப்பட்டன. இந்த விலங்குகளை யாகத் தூணில் கட்டிவைக்கப் பயன்பட்ட கயிறு பாசம் எனப்பட்டது. சுயத்தை பலி தந்து இறைவனோடு ஐக்கியமாகும் மிக உயர்ந்த பேற்றை வலியுறுத்தும் சைவ சித்தாந்தம், இந்த பதி, பசு, பாசம் ஆகிய மூன்றையும் தனது தத்துவ விளக்கங்களாக எடுத்துக்கொண்டது.

  பதி என்பது ஒற்றைக் கடவுளான சிவம், பசு என்பது ஜீவாத்மாக்களாகிய உயிர்கள், பாசம் என்பது பதியுடன் பசுவை இணையவிடாமல் தடுக்கும் கட்டுக் கயிறு என்பதே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான விளக்கம். பதி, பசு, பாசம் ஆகிய இம்மூன்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் கூறும் முறையே ஈஸ்வரன், சித், அசித் ஆகியவற்றுக்கு நேரானவை. இந்த பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த அடிப்படைக் கூறுகள், மிகப் பழமையான ஸ்வேதாஸ்வதர உபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ளன. இதனை ரௌரவம், காமிகம், சிந்த்யம் உள்ளிட்ட 28 சைவ ஆகமங்கள் விளக்கமாகக் கூறியுள்ளன. இவற்றின் அடிப்படையில் எழுந்த சித்தாந்த சைவம், வேதத்தின் உண்மைப் பொருளை மற்ற தத்துவங்கள் எல்லாம் முழுமையாக விளக்கவில்லை என்றும் இல்லையேல் ஓரளவோ முழுமையாகவோ திரித்துக் கூறியுள்ளன என்றும் கூறுவதுடன், சைவ சித்தாந்தம் மாத்திரமே வேதத்தின் உண்மையான மற்றும் பொருத்தமான விளக்கம் என்று வாதிடுகிறது. இதனால், இதற்கு வேதாந்த சித்தாந்தம் என்றும் வைதீக சைவம் என்றும் பெயர் உண்டு. அதேநேரத்தில் தத்துவ நோக்கில் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தை ஒத்திருக்கும் சைவ சித்தாந்தம், தன்னை சுத்த அத்வைதம் (சுத்தாத்வைதம்) என்று அறிவிக்கிறது. அத்துடன், ஆதிசங்கரரின் அத்வைதம் உண்மையான அத்வைதம் இல்லை என்று வாதிடும் சைவ சித்தாந்தம், அதனை மாயாவாதம் என்றுதான் குறிப்பிடுகிறது.

  கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர் மற்றும் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகியோர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சைவம் தழைத்திருந்தாலும், பெரும்பாலும் அது வழிபாட்டுச் சமயம் சார்ந்த சைவம்தான். இந்த நால்வரும் (சைவ) சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுகின்றனர். (குரவர் என்பது குருவின் பன்மைச் சொல். இதன் பொருள் குருமார்கள், ஆசார்யர்கள் என்பதாகும்). இவர்களது திருவாசகம், தேவாரம் ஆகியவற்றுடன் நால்வருக்கும் முந்தைய திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்ட பாசுரங்களை, பன்னிரு (12) திருமுறைகளாக கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்ற சைவத் தொண்டர் தொகுத்தளித்தார். இவற்றில், திருமூலரின் திருமந்திரத்தில் பக்தியைவிட சைவ சித்தாந்தக் கொள்கைகள், தத்துவங்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

  இருப்பினும், தத்துவ நோக்கிலான சைவ சித்தாந்தம் அதற்கும் பழைமையானது; சிவனைப் போலவே அனாதியானது. அதேநேரத்தில், கி.மு. 3-ம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்தவராகக் கருதப்படும் நந்திதேவர், வரலாற்று ரீதியில் சைவ சித்தாந்தத்தை வடிவமைத்தவராகக் கூறப்படுகிறார். சுத்தாத்வைதம் அல்லது ஈஸ்வராத்வயவாத சைவம் எனப்படும் காஷ்மீர சைவத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், மிக நெருங்கிய தொடர்பும் அதிக ஒற்றுமைகளும் இருப்பது இங்கே நோக்கத்தக்கது. எனினும், சைவ சித்தாந்தவாதிகளின் கருத்துப்படி, சிவபெருமானின் அணுக்கத் தொண்டரான நந்திதேவரிடமிருந்து சைவ சித்தாந்தம் தொடங்கியுள்ளது. நந்திதேவர், அவரது சீடர் சனற்குமாரர் (சனத்குமாரர்), அவரது சீடரான சத்தியஞானதரிசி முனிவர், அவரது சீடரான பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும், சைவ சித்தாந்தத்தின் அகச் சந்தான ஆசார்யர்கள் என்று போற்றப்படுகின்றனர். சந்தானம் என்றால் பரம்பரை என்று பொருள். இவர்கள் அனைவரும் கயிலாய (கைலாஸ) மலையிலேயே வாழ்ந்ததால், அகச் சந்தான ஆசார்யர்கள் எனப்படுகின்றனர்.

  கி.பி. 11-ம் நூற்றாண்டில் ராமானுஜர் தோன்றிய பின்னர், விசிஷ்டாத்வைதம் சார்ந்த வைஷ்ணவத்தின் வளர்ச்சி அதிகரித்து சைவம் சற்று தளர்ந்தபோது, தத்துவ ரீதியில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் அதற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தி மக்களிடையே செல்வாக்குபெறச் செய்தவர், கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்கண்டார். வேதங்கள் மற்றும் ரௌரவம் உள்ளிட்ட சிவாகமங்களின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தை இவர் மீண்டும் நிறுவினார். வேத, ஆகமக் கருத்துகளைத் தூய தமிழில் சிவஞானபோதம் என்ற நூலாக மெய்கண்டார் படைத்தார். (பரஞ்சோதி முனிவர், கைலாஸ மலையிலிருந்து பொதிகை மலைக்கு ஆகாய மார்க்கத்தில் சென்றபோது, சிறுகுழந்தையாக இருந்த இவருக்கு சிவஞானத்தை போதித்ததாகக் கூறப்படுகிறது). இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம், இவர் அந்தணர் அல்லர். வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். விருதாசலத்துக்கு அருகே திருபெண்ணாகடத்தில் வாழ்ந்துவந்த அச்சுதக் களப்பாளர் என்ற மிகச் சிறந்த சிவபக்தரின் மகனாகப் பிறந்தவர். தனது குலகுருவும் சகலாகம பண்டிதர் என்று புகழப்படும் வேதியருமான அருள்நந்தி (அருணந்தி) சிவாசாரியரைத் தனது சீடராகப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

  அருள்நந்தி சிவாசாரியர், சிவஞானபோதத்தின் வழிநூலாக, சிவஞான சித்தியார் என்ற அற்புத நூலைப் படைத்துள்ளார். இந்த நூலின் சிறப்பம்சம் - மற்ற தத்துவ, மதக் கருத்துகளை எடுத்துக்கூறி அவற்றையெல்லாம் எதிர்வாதம் செய்து நிராகரித்துவிட்டு, பின்னர் சைவ சித்தாந்தத்தை எடுத்துக்கூறி நிறுவுவதாகும். நாத்திகம் பேசும் லோகாயதம்; சௌத்திராந்திகம், யோகாசாரம் உள்ளிட்ட பௌத்த தத்துவப் பிரிவுகள்; நிகண்டவாதம் எனப்படும் சமணம், பட்டாசாரியம் எனப்படும் மீமாம்சை, சுத்த பிரும்மவாதம், மாயாவாதம் எனப்படும் சங்கரரின் அத்வைதம், சாங்கியம், பாஞ்சராத்ரம் எனப்படும் வைஷ்ணவம் உள்ளிட்டவற்றின் கருத்துகளைக் கூறி, அதற்கு மறுதலையும் (மறுப்பும்) கூறும் பகுதி பரபக்கம் ஆகும். இதன் தொடர்ச்சியாக சைவ சித்தாந்தம் குறித்து எடுத்துரைக்கும் பகுதி சுபக்கம் ஆகும். இருபா இருபது என்னும் சைவ சித்தாந்த நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

  இந்த அருள்நந்தி சிவாசாரியரின் சீடர், வேதியரான மறைஞான சம்பந்தர். இவர் நூல் எதுவும் படைக்கவில்லை. எனினும் இவரது சீடரும் தில்லைவாழ் அந்தணர் மரபைச் சேர்ந்தவருமான உமாபதி சிவாசாரியர் சித்தாந்த அட்டகம் என்று சிறப்பித்துக் கூறப்படும் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, சங்கற்ப நிராகரணம் உள்ளிட்ட 8 நூல்களையும், சேக்கிழார் புராணம், சிவநாமக் கலிவெண்பா உள்ளிட்ட பிற நூல்களையும் இயற்றியுள்ளார். மெய்கண்டார், அருள்நந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியர் ஆகிய நால்வரும் புறச் சந்தான ஆசாரியர்கள் எனவும் சந்தானக் குரவர் நால்வர் என்றும் போற்றப்படுகின்றனர்.

  சைவ சித்தாந்தத்தைத் தெளிவுற அறிவதற்கு மெய்கண்ட சாத்திரம் என்ற நூல் மிகவும் பயன்தரும். இந்த நூலில், மெய்கண்டாரின் சிவஞான போதம், அருள்நந்தி சிவாசாரியரின் சிவஞான சித்தியார், இருபா இருபது, உமாபதி சிவாசாரியரின் சித்தாந்த அட்டகம் எனப்படும் 8 நூல்கள் ஆகியவற்றுடன் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருவுந்தியார், அவரது சீடரான திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியார், மெய்கண்டரின் மற்றொரு சீடரான திருவதிகை மனவாசகம் கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் ஆக மொத்தம் 14 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் நீலகண்ட சிவாசாரியர், பிரும்மசூத்திரத்துக்கு எழுதிய பாஷ்யமும் சைவ சித்தாந்தத்துக்கு துணை நிற்கிறது.

  பிரத்யட்சம் (நேரடியாக உணர்தல்), அனுமானம் (ஊகம்), ஆப்த வசனம் (வேதம், ஆகமம்) ஆகிய மூன்றையும் உண்மையை நிரூபிப்பதற்கான பிரமாணங்களாக (ஆதாரங்களாக) சைவ சித்தாந்தம் எடுத்துக்கொள்கிறது. இதன் அடிப்படைக் கோட்பாடு, பதி எனப்படும் இறைவன், பசு எனப்படும் உயிர்கள், பாசம் எனப்படும் கட்டுக்கள் ஆகிய மூன்றாகும்.

  சிவபெருமானே மேலான உண்மை, பரமாத்மா, பரம்பொருள். அவருக்கு மேலோ, இணையோ யாருமில்லை. அவர் எங்கும் நிறைந்திருப்பவர், எல்லாம் அறிந்திருப்பவர், சுதந்திரமானவர். உலகாகவும், உயிரினங்களாகவும் இருக்கின்ற பசுவுக்கு அவரே பதி, அதாவது தலைவர். ஆகையால் அவர் பசுபதி. உலகமும் உயிரினங்களும் அவரது சக்தியால் (ஆற்றலால்) உருவாக்கப்பட்டு, காப்பாற்றப்படுகின்றன. தீயோடு அதன் வெப்பம் இணைந்திருப்பதைப்போல, சூரியனோடு ஒளி இணைந்திருப்பதைப்போல சிவனோடு சக்தி நீக்கமற இணைந்திருக்கிறது. (இதனை மகாகவி காளிதாசர், சொல்லையும் அதன் பொருளையும்போல சிவனும், சக்தியும் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதாக வர்ணிக்கிறார்). உலகைப் படைத்த நிமித்த காரணராகவும், துணைக் காரணராகவும், பொருள் காரணராகவும் அவரே விளங்குகிறார். ஒரு மண்பானை செய்ய களிமண் பொருள் காரணமாகவும், களிமண்ணைச் சுற்றும் இயந்திரமான திரிகை துணைக் காரணமாகவும், அதனைத் தயாரிக்கும் குயவர் நிமித்த (செயல்படுத்தும்) காரணமாகவும் இருப்பதைப்போல, இந்த உலகின் தோற்றத்துக்கு சிவபெருமானே முக்காரணமாகவும் திகழ்கிறார்.

  ஆக்கல், படைத்தல், அழித்தல் (மறுஉருவாக்கம் செய்தல்) ஆகிய மூன்றோடு மறைத்தல் (ஜீவாத்மாவுக்கு குறிப்பிட்ட பக்குவம் வரும்வரை அல்லது பக்குவம் பெறுவதற்காக உண்மையை அறியவிடாமல் உலக விஷயங்களைக் கொண்டு மறைத்தல்), அருளல் (இறுதி நிலையாகிய முக்திப் பேற்றை, அதாவது சிவத்துவத்தை அருளுதல்) ஆகிய ஐந்து தொழில்களை சிவபெருமான் புரிகிறார். சிவன், அறிவு எனப்படும் சித் ஆக உள்ளார். அதேநேரத்தில், அன்பாகவும் இயக்கமாகவும் அவரே உள்ளார். இதுவே, முறையே அவரது ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என மூவகை ஆற்றலாக வெளிப்படுகிறது. சிவனது அன்புக்கு, ஆலகால விஷத்தை அவர் அருந்தி, உலகையும் உயிரினங்களையும் காப்பாற்றியதே மிகப்பெரிய சான்று.

  சிவன் நிர்குணன் என்று கூறப்படுவதற்கு அவர் குணங்கள் அற்றவர் என்று பொருள் அல்ல. மாறுவதும் அழிவதுமான இயல்புகளை உடைய சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்று பொருள். அவர் மாறாத உண்மையாகிய சத் ஆகவும், அனைத்தும் அறிந்தவராகவும் அனைத்தையும் அறியச் செய்பவராகவும் விளங்குகின்ற பேரறிவாகிய சித் ஆகவும், என்றும் மாறாத இயல்பான மகிழ்ச்சியாகிய ஆனந்தமாகவும் திகழ்கிறார். அதுவே சச்சிதானந்தம் (சத் சித் ஆனந்தம்). அனைத்துவித நற்குணங்களும் நிரம்பப்பெற்ற அவர் அஷ்டகுண மூர்த்தி (எண்குணத்தான்) ஆக விளங்குகிறார். அந்த எட்டு குணங்களாவன – அனைத்தும் அறிந்தவர் (சர்வக்ஞர்), அனைத்து ஆற்றல்களும் கொண்டவர் (சர்வசக்திமான்), அனைத்திலும் ஊடுருவி இருப்பவர், அதாவது எங்கும் நிறைந்திருப்பவர் (சர்வவியாபி), அனைத்து உயிர்கள் மீதும் எல்லையற்ற கருணையுடன் நன்மைகளைச் செய்பவர் (சங்கரர்), எவ்வித வரையறைக்கும் கட்டுப்படாத சுதந்திரமயமானவர் (சர்வஸ்வதந்திரர்), நிலைத்த ஞானமுடையவர் (நித்யர்), குறைகளோ தோஷங்களோ அற்றவர் (நிர்மலர்), எப்போதும் ஆனந்தமுடையவர் (நித்யானந்தர்).

  பசு என்பது உயிர்கள் எனப்படும் ஆன்மாக்கள். இவை ஒருவகையில் பதியாகிய சிவனை ஒத்தவை என்றபோதிலும், சிவனாகவே ஆகிவிடுவதில்லை. பசுக்கள் எனப்படும் ஆன்மாக்கள் அனைத்திலும் சிவத்தன்மை உள்ளது (அபேதம்). ஆயினும் வேறு வகையில் சிவனிடமிருந்து பசுக்கள் வேறுபட்டவையாக உள்ளன (பேதம்). பதியைப் போலவே பசுக்களும் நித்தியமானவை, அறிவுள்ளவை. இருப்பினும், பசுக்கள் மாற்றம் பெறுபவை, முழுமையான சுதந்திரமற்றவை, முழுமையான அறிவு இல்லாதவை. அவற்றின் அறிவு பாசத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இந்தப் பாசத்தின் காரணமாக இன்ப-துன்ப உணர்வுகளும் அவற்றின்பாற்பட்டு செயல்புரிபவையாகவும் அந்தச் செயல்களுக்கேற்ப பயன்களை அனுபவிப்பவையாகவும் பசுக்கள் இருக்கின்றன. இந்தப் பாசத்தைக் கட்டறுத்து, பதியோடு பசுக்கள் இணைவதே முக்தி எனப்படும்.

  பசுக்களைக் கட்டுப்படுத்தும் பாசம் மூவகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை. இவற்றுக்கு மும்மலம் என்றும் பெயர். இந்த மும்மலங்களும் பசுக்களின் அறிவையும், ஆற்றலையும் மறைத்து, பசுக்களை அறியாமையில் கிடத்தி, பதியுடன் இணையவிடாமல் தடுக்கின்றன. இதில் முதலாவதான ஆணவ மலம், ஆத்மாக்களின் அதாவது பசுக்களின் இயல்பான மலம் (சஹஜ மலம்). எந்தவொரு ஆன்மாவுக்கும் அதன் தோற்றத்திலேயே இது இணைந்திருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட தானாக பசுவைச் சுருக்கி, நான், நீ, அவர் என்ற பேதத்துக்குக் காரணமாக இருக்கிறது. ஸத் (நிலையான உண்மை) ஆகிய சிவத்தை அனுபவிக்கவிடாமல், அஸத்தாகிய உலகியல் பேதமாகத் தன்னை பாவித்து அதன்படியான அனுபவங்களைத் தருவது இந்த ஆணவம்தான். கைவல்ய முக்தி எனப்படும் சிவனோடு ஐக்கியமாகும் விடுதலை கிடைக்கும்வரை இந்த ஆணவ மலம் நீடிக்கும். இரண்டாவது மலம் கன்மம். தான் என்ற ஆணவத்துக்கு உட்பட்டு செய்கின்ற அனைத்துச் செயல்களுமே பசுவை பாதிக்கும். வினைப் பயன்களால் கட்டப்படுவதே கன்ம மலம்.

  மூன்றாவதாக உள்ள மலம் மாயை. இது, ஆதிசங்கரர் கூறுகின்ற மாயையில் இருந்து வேறுபட்டது. இது, பதியாகிய சிவபெருமானின் கருவி. பசுக்கள் பக்குவப்பட்டு உண்மையை உணர்ந்து சிவத்தோடு ஐக்கியமடைகின்ற வரையில் அதற்கான தூண்டுதலாக பல்வேறு அனுபவத்தைத் தருகின்ற கருவியாக விளங்குகிறது. பசுக்களை அவற்றின் விருப்பங்களாலும், அறியாமையாலும் உணர்வுச் சாதனங்களோடு கட்டிவைப்பது இந்த மாயைதான்.

  இது சுத்த மாயை, அசுத்த மாயை என்று இருவகைப்படும். இவை இரண்டும் நித்தியமானவை, அழிவில்லாதவை. அதேநேரத்தில், அசுத்த மாயையில் இருந்து பிரகிருதி மாயை எனப்படும் மூன்றாவது மாயை உருவாகிறது. இது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழியக்கூடியது. சுத்த மாயை என்பது பொருள்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பது. எங்கும் வியாபித்திருக்கும் இது மயக்கம் இல்லாமல் சுத்தமாய் இருப்பது. அசுத்த மாயை என்பது பிரளய காலத்தில் ஆன்மாக்களின் கர்மங்களுக்கு உறைவிடமாகவும், பின்னர் மறுபடி தோன்றும் பிரபஞ்சத்தில் ஆன்மாக்களுக்கு அதன் வினைப் பயன்களுக்கு ஏற்ப வாழ்க்கை அனுபவத்தைத் தருவதற்கு முதற் காரணமாகவும் விளங்குவது. இது ஆன்மாக்களுக்கு மயக்கத்தை தருகின்ற விதத்தில் இருப்பதால் அசுத்த மாயை எனப்படுகிறது.

  இந்த அசுத்த மாயையில் இருந்து 24 தத்துவங்கள் கொண்ட பிரகிருதி மாயை தோன்றுகிறது. காற்று, நீர், ஆகாயம், தீ, நிலம் ஆகிய பஞ்ச பூதங்கள்; அவற்றின் தன்மாத்திரை குணங்களான தொடுஉணர்வு, சுவை, ஒலி, ஒளி, மணம்; 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் 4 அந்தகரணங்கள் (உள்ளுறுப்புகள்) ஆகியவையே அந்த 24 தத்துவங்கள். இந்த 24 தத்துவங்களைக் கொண்டு, தூய்மையற்ற ஆன்மாக்களுக்கான உடல்கள், உறுப்புகள், உலகங்கள், அவற்றுக்கான அனுபவங்கள் ஆகியவற்றை பதியாகிய சிவபெருமான் படைத்து, அவை தூய்மை பெற்று விடுதலை அடைவதற்கான வாய்ப்பைத் தருகிறார்.

  பசுக்களை முக்தியின் பாதையில் திருப்புவதற்கான பாச ஞானத்தையும், பசு ஞானத்தையும் இந்த மாயையே தருகிறது. பசுக்களுக்கு நல்வினை, தீவினைகளை அறிவுறுத்தி தீவினைகளைக் களைந்து, நல்வினைகள் மூலம் பக்குவப்படுவதற்கும் இந்த மாயையே உதவுகிறது. இருப்பினும் முக்தி பெற இந்த பாச ஞானமும் (கட்டுகள் குறித்த விழிப்புணர்வு), பசு ஞானமும் (ஆன்மா குறித்த விழிப்புணர்வு) மாத்திரம் போதாது, பதி ஞானமும் (இறைவன் குறித்த விழிப்புணர்வு) தேவை. இந்த பதி ஞானம், அவனருளால் அவன் தாள் வணங்குவதன் மூலமே கிடைக்கும். மேலும் அவனருள் பெற்ற குருவைச் சரணடைந்து குருவருள் மூலமாகவும் திருவருள் பெறலாம்.

  சைவ சித்தாந்தத்தின்படி ஒரு ஜீவாத்மா, நான்கு வழிமுறைகளில் முக்தி நிலை அடைகிறது. அவை சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம் மற்றும் ஞான பாதம். இதில் எந்தப் பாதை ஒருவருக்கு உகந்தது என்பதை குரு தீர்மானிப்பார். இல்லையேல், குருவுக்கெல்லாம் குருவாகிய சிவபெருமான் தீர்மானிப்பார்.

  சிவ ஆலயங்களில் துப்புரவு செய்தல், பிரசாதங்களைச் சமைத்தல், அபிஷேகத்துக்கு நீர் கொண்டுவருதல், பூஜைக்கு மலர்களைப் பறித்துவருதல் என சிவபெருமானுக்கு ஒரு தொண்டனாக உழவாரப் பணிகளைச் செய்தல் சரியை ஆகும். இதற்கு தாஸ மார்க்கம், அதாவது தொண்டு வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுபவர் அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர்.

  சிவபெருமானின் விக்ரகங்களை ஆராதித்தல், அவர் குறித்த பக்திப் பாடல்களைப் பாடுதல், சிவ மந்திரங்களை உச்சரித்தல், சிவ கதைகளை உபன்யாசமாகக் கூறுதல் என சிவனுக்கு ஒரு நல்ல மகனைப்போல பணிவிடை செய்தல் கிரியை ஆகும். இதற்கு சத்புத்திர மார்க்கம் அதாவது நற்பிள்ளை வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகக் காட்டப்படுவர் பிள்ளைப் பெருமான் என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர்.

  சிவனை நினைத்து தியானித்தல், யோகாசனங்களைச் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் தியானப் பொருளாகிய சிவனும் தானும் ஒன்றே எனக் கருதுதல், ஓர் உற்ற நண்பனைப்போல சிவபெருமானை எப்போதும் கருதுதல் யோகம் ஆகும். இதற்கு சக மார்க்கம், அதாவது நட்பு வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

  ஞான நூல்களைப் படித்தும், கேட்டும், சிந்தித்தும் சிவன் குறித்து ஞானம் வரப்பெற்று, சிவனோடு ஐக்கியமாகுதல் ஞானம் ஆகும். இது சிவனோடு நேரடித் தொடர்புகொண்டு உண்மையை விளங்கச் செய்வதால் இதற்கு ஸத் மார்க்கம் (சன்மார்க்கம்), அதாவது உண்மை வழி என்றும் பெயர். இதனை (சிவனின் நேரடி) சீட மார்க்கம் என்றும் கூறுவார்கள். இதற்கு உதாரணமாக விளங்குபவர் மாணிக்கவாசக சுவாமிகள்.

  இந்த நான்கு வழிமுறைகளில் சரியை மூலம் சிவ லோகத்தை அடையும் பாக்கியம் கிடைப்பதால் அதனை சாலோகம் என்றும், கிரியை மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமான இடம் கிடைப்பதால் அதனை சாமீபம் என்றும், யோகம் மூலம் ஏறத்தாழ சிவனுக்கு இணையான பதம் கிடைப்பதால் அதனை சாரூபம் என்றும், இறுதியான ஞானத்தின் மூலம் சிவனோடு ஐக்கியமடைவதால் அதனை சாயுஜ்யம் என்றும் அழைப்பர்.

  இவ்வாறு முக்தியடையும் ஜீவாத்மா, சிவனாகவே ஆகிவிடுவதில்லை. சிவத்தின் ஓர் அங்கமாகத் துலங்கி, அனைத்துவித கட்டுகளில் இருந்தும் விடுபட்டு, சிவனைப்போல எல்லையற்ற ஆனந்தத்தில் திளைக்கிறது. இருப்பினும், சிவனுக்குரிய படைப்பு முதலிய ஐந்தொழில்களின் ஆற்றல், முக்தியடைந்த பசுக்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆக விசிஷ்டாத்வைதமாகவும், அபேத பேதவாதமாகவுமே சைவ சித்தாந்தம் திகழ்கிறது.

  சைவம், வேத வழிக்கு உட்பட்டதாகவும் வேத நெறிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் பரந்துபட்டுத் திகழ்கின்ற தன்மை கொண்டது. சிவனின் ஆற்றலாகவும் இணையாகவும் வர்ணிக்கப்படும் சக்தியை மையமாகக் கொண்டு, பெரும்பாலும் வேத வழிகளுக்கு அப்பாற்பட்ட அவைதீக தத்துவமாகவும் வெகுஜன சமயமாகவும் திகழ்வது தாந்திரீக மார்க்கம் எனப்படும் தந்திரம். பாரதத்தில் தோன்றிய அனைத்து மதங்களிலுமே தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தந்திரம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

   

  kattana sevai