16. சாங்கியத்தின் 25 தத்துவங்கள்

சாங்கிய தரிசனம் பிரகிருதி புருஷ வாதம் என்றும், பிரகிருதி பரிணாம வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் எனப்படும் அறிவோனையும்

சாங்கியத்தின் 25 தத்துவங்கள்

சாங்கிய தரிசனம், பிரகிருதி புருஷ வாதம் என்றும்; பிரகிருதி, பரிணாம வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் எனப்படும் அறிவோனையும், அதனால் அறிந்துகொள்ளப்படுகிற பேரியற்கையான பிரகிருதியையும் பற்றிக் கூறுகின்ற கோட்பாடு என்பதால் பிரகிருதி புருஷ வாதம் என்று பெயர். பிரகிருதியில் இருந்து மஹத் உள்ளிட்ட மேலும் 23 விஷயங்கள் பரிணாமம் அடைவதை, அதாவது மாற்றமடைந்து வெளிப்படுவதைக் கூறுவதால் பிரகிருதி பரிணாம வாதம் என்று இதற்குப் பெயர். பரிணாமம் என்றால் முந்தைய நிலையில் இருந்து படிப்படியாக அடைகின்ற முன்னேற்றம், வளர்ச்சி நிலை என்று பொருள். இதைத்தான் ஆங்கிலத்தில் எவல்யூஷன் என்கிறார்கள். ஆக, டார்வினுக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எவல்யூஷன் தியரியை சாங்கியம் கூறியுள்ளது. ஆயினும் இது கூறுவது பேரண்டப் பரிணாமம் (காஸ்மிக் எவல்யூஷன்) ஆகும். அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் இருக்கிறது என்று நமது முன்னோர்கள் கூறுவதைப் பொருத்திப்பார்த்தால், உயிர்களும் இதுபோலவே பரிணாமம் அடைந்திருக்கின்றன என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

சாங்கிய தத்துவத்தை, ரமண மகரிஷிகள் மிக எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளார். “சாங்கிய தத்துவம், ஒருவித இருமைக் கோட்பாடு (துவைதம்). அதில், புருஷன் என்பது பிரக்ஞை, ஒப்புவமை கூற இயலாத பேரறிவு. பிரகிருதி என்பது பொருண்மை, உணர்வற்றது, பகுத்தறிவற்றது, உயிர்ப்பற்றது. பிர என்றால் முன்னர் என்றும் கிருதி என்றால் படைப்பு (உருவாக்கம்) என்றும் பொருள். பிரகிருதி என்பது ஆங்கிலத்தில் புரோகிரியேட் (PROCREATE) எனப்படும் சொல்லைப்போல் ஒலிக்கிறது அல்லவா? இதன் பொருளும் அதேதான். அதாவது, பிரசவிப்பதற்கான நிலை (படைப்பதற்கான நிலை) என்பதே இதன் அர்த்தம். பிரசவம் என்பது குழந்தையை ஈனுவதற்கான தயார் நிலை என்பதைப்போல, பிரகிருதி என்பது உடனடியாகப் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கான தயார் நிலையை உணர்த்துகிறது” என்கிறார் ரமண மகரிஷி.

பிரகிருதியே, பேரண்டத் தொடக்கத்துக்கு மூலகாரணம். இந்தப் பிரகிருதியில் இருந்து மஹத் தொடங்கி மண் ஈறாக மேலும் 23 படைப்புகள் வெளிப்படுகின்றன. இந்த இருபத்திநான்கோடு புருஷனையும் சேர்த்தால் 25 தத்துவங்களாகும். இனி, அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

1. பிரகிருதி

மூலப் பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படும் வெளிப்படா பேரியற்கையின் வெளிப்பட்ட தோற்றமே பிரகிருதி ஆகும். பிரதானத்துக்குத் தோற்றுவாய் இல்லை. அதுவே தோற்றுவாய். இயற்கை என்பது இயல்பாக உள்ளது, இருப்பது என்று பொருள்படும். ஆகையால், பிரகிருதி இல்லாமல் இருந்து திடீரென தோன்றவில்லை. அது ஏற்கெனவே இருக்கிறது. ஒரு பிரளயத்தின்போது ஒடுங்கியிருந்து மீண்டும் வெளிப்படுகிறது. இவ்வாறான மூலப்பிரகிருதி எனப்படும் இருப்பே உலகின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுவதால், சாங்கியம் சத்காரியவாதம் எனப்படுகிறது.

உலகின் தோற்றமும் ஒடுக்கமும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒடுங்கியிருக்கும் பேரியற்கை மூலப் பிரகிருதி அல்லது பிரதானம் எனப்படுகிறது. அது வெளிப்படுகையில், பிரகிருதி அதாவது பிரசவிக்கும் நிலையைப் பெறுகிறது. தான்தோன்றியாக உள்ள இந்தப் பிரகிருதி, தான் தோற்றுவாயாக இருந்து மஹத் உள்ளிட்டவற்றைத் தோற்றுவிக்கிறது.

இந்தப் பிரகிருதியானது முக்குணக் கூட்டாகும். சத்வம், ரஜஸ், தமஸ் என்பவையே அந்த முக்குணங்கள். சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையான சுருங்குவது, முடங்குவது. புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் இந்தப் பிரகிருதி சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதேநேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணையும் புருஷன் (ஆன்மா), பின்னர் அந்தப் பிரகிருதியின் துணைகொண்டே முக்தியையும் (விடுதலையையும்) பெறுகிறது.

2. மஹத்

பிரகிருதியில் இருந்து முதலில் வெளிப்படுவது மஹத். இதற்குப் பெரியது, மான் என்றும் பெயர். உயிரினங்களில் இதுவே புத்தியாக விளங்குகிறது. இதனைத் தமிழில் பேருணர்வு என்றும் கூறலாம். பிரகிருதியோடு புருஷனைத் தொடர்புபடுத்துவது இதுவே. இந்திரியங்கள் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இதிலிருந்தே பிறக்கின்றன. உறுதி, அறிவு, ஆற்றல், பண்புகள் இவையெல்லாம் மஹத்தின் தன்மையே. மகிழ்ச்சி, வேதனை, மயக்கம் (மாயை) ஆகியவை மஹத் எனப்படும் புத்தியோடு தொடர்புடையவை. இவை முறையே ஒளியூட்டுதல், செயல்படவைத்தல், தடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக உள்ளன. மகிழ்ச்சி அல்லது ஒளியூட்டுதல், சத்வமாகவும்; வேதனை அல்லது செயல்படவைத்தல், ரஜஸாகவும்; மாயை அல்லது தடுத்தல், தமஸாகவும் உள்ளன. இவற்றின் அடிப்படையில் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உயிரினங்களில் தோன்றுகின்றன. சத்வ குணம், புருஷன் விடுதலை (முக்தி) பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது; தமோ குணம், அறியாமையைத் தருகிறது; ரஜோ குணம், இவை இரண்டின் மேலீட்டால் செயல்படுகிறது.

3. அகங்காரம்

பிரகிருதியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றும் இரண்டாவது விஷயம் அகங்காரம். இதற்குத் தன்னுணர்வு என்று பொருள். அகம் என்றால் நான் என்று பொருள், கார என்றால் தன்மை என்று பொருள். ஆக, அகங்காரம் என்பது எல்லா உயிரினங்களிலும் உள்ள நான் என்ற சுய உணர்வைக் குறிக்கிறது. வெளி உலகத்தில் இருந்தும், பிற விஷயங்களில் இருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் காட்டும் உணர்வுதான் அகங்காரம். நான் இப்படிப்பட்டவன்(ள்), என்னால் இதனைச் செய்ய முடியும், எல்லாமே எனக்காக இருக்கின்றன, என்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற எண்ணம் இருக்கிறதே அதுதான் அகங்காரம். இந்த அகங்காரமானது, சுய அபிமானம் கொண்டது. தான் என்ற பற்று உடையது. இந்த அகங்காரத்தில் இருந்தே மனம், 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5 தன்மாத்திரைகள் என 16 விஷயங்கள் தோன்றுகின்றன.

4. மனஸ்

தமிழில் மனம் என்கிறோமே அதுதான் மனஸ். எண்ணம், சிந்தனை ஆகியவற்றை உருவாக்குவதாகவும், அவற்றின் தொகுப்பாகவும் இந்த மனம் உள்ளது. மனம் என்பது ஒரு சிந்தனைக் கருவி. எந்த உயிரினத்திலும் வெளியில் தெரியாமல் உள்ளுக்குள் இது இருப்பதால், இதற்கு அந்தகரணம் அதாவது உட்கருவி என்றும் பெயர் உண்டு. புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்றும் ஒரே அந்தகரணத்தின் மூன்று வடிவங்கள் என்றும் கூறப்படுவதுண்டு. அகங்காரத்தின் ஒட்டுமொத்த சத்வ குணத்தில் இருந்து மனம் தோன்றுகிறது. இது ஒரே நேரத்தில் உணர்வுக் கருவியாகவும், செயல் கருவியாகவும் விளங்குகிறது. உணர்வுக் கருவி என்றால் ஒன்றை உணர்ந்துகொள்வதற்கு மட்டுமே பயன்படுவது. உதாரணத்துக்கு, கேட்கப் பயன்படும் செவியும், பார்க்கப் பயன்படும் கண்ணும் உணர்வுக் கருவிகள். பொருள்களைக் கையாளப் பயன்படும் கரங்களும், நடக்கப் பயன்படும் கால்களும் செயல் கருவிகள். உணர்வுக் கருவிகளைக் கொண்டு உணர்ந்துகொள்வதாலும், செயல் கருவிகளைத் தூண்டி செயல்படச் செய்வதாலும் மனம் ஒருசேர உணர்வு-செயல் கருவியாக விளங்குகிறது.

5 – 9. பஞ்ச ஞானேந்திரியங்கள்

அகங்காரத்தின் சத்வ குணத்தில் இருந்து மனம் தவிர மேலும் 10 இந்திரியங்களும் தோன்றுகின்றன. இவை பஞ்ச ஞானேந்திரியங்களும் (ஐந்து உணர்வுக் கருவிகளும்) பஞ்ச கர்மேந்திரியங்களும் (ஐந்து செயல் கருவிகளும்) ஆகும். அகங்காரத்தின் சத்வ குணமானது, செயல்படும் வடிவமான ரஜோ குணத்தின் கூட்டால் இவற்றைத் தோற்றுவிப்பதாக சாங்கிய காரிகை (சாங்கிய காரிகா) கூறுகிறது. ஏனெனில் சத்வமும், தமஸும் தனியாக இயங்க இயலாது. செயல்படும் ரஜோ குணத்தின் கூட்டின் மூலமே இரண்டும் இயங்கி பரிணமிப்பதாக சாங்கிய காரிகை விளக்கம் தருகிறது.

இனி, பஞ்ச ஞானேந்திரியங்கள் எவை என்று பார்ப்போம். ஐம்புலன்கள் என்று சொல்கிறோம் அல்லவா? அவைதாம் பஞ்ச ஞானந்திரியங்கள். இவை ஒவ்வொன்றும் ஓர் உணர்வை நமக்குத் தருகின்றன. அவை - காண்பதற்குப் பயன்படும் கண் (சக்ஷு), கேட்பதற்குப் பயன்படும் செவி (ஸ்ரோத்ரம்), முகர்வதற்குப் பயன்படும் மூக்கு (க்ராண), சுவை அறியப் பயன்படும் நாக்கு (ரஸனா), தொடு உணர்வை அறியப் பயன்படும் தோல் (த்வக்) ஆகியவை ஆகும்.

10 – 14. பஞ்ச கர்மேந்திரியங்கள்

அகங்காரம் ஒன்றாக இருப்பினும், சத்வம் உள்ளிட்ட முக்குணங்களின் மாறுபாடு காரணமாக, வெவ்வேறு விதமான விஷயங்களை அது பிரசவிக்கிறது. அந்த வகையில், இரண்டு விதமான பரிணாமங்கள் தோன்றுவதாக சாங்கிய காரிகை கூறுகிறது. ஒன்று வைக்ருத பரிணாமம், மற்றொன்று பூதாதி பரிணாமம். வைக்ருதம் என்பது அகங்காரத்தின் சத்வ குண மேலீட்டால் ஏற்படுகின்ற மாற்றம் அல்லது வளர்ச்சி. பூதாதி என்பது அகங்காரத்தின் தமோ குண மேலீட்டால் ஏற்படுகின்ற மாற்றம் அல்லது வளர்ச்சி. இவை இரண்டுமே அகங்காரத்தின் ரஜோ குண மேலீட்டால் ஏற்படும் தைஜஸம் என்ற வடிவின் காரணமாகப் பரிணமிக்கின்றன என்று விளக்கம் தருகிறது. அந்தவகையில், வைக்ருத பரிணாமத்தில் அகங்காரத்தில் இருந்து மனம் உள்ளிட்ட பதினொன்றும், பூதாதி பரிணாமத்தில் 5 தன்மைத்திரைகளும் தோன்றுகின்றன.

இதில் வைக்ருத பரிணாமத்தில் தோன்றும் மனம் மற்றும் 5 ஞானேந்திரியங்களைப் பற்றி ஏற்கெனவே கண்டோம். இனி, மீதமுள்ள பஞ்ச கர்மேந்திரியங்களைக் காண்போம். கர்மேந்திரியங்கள் என்பவை செயல் கருவிகள். அவை - பேச உதவும் வாய் (வாக்), பொருள்களைக் கையாள உதவும் கை (பாணி), நடமாட உதவும் கால் (பாத), மலஜலம் வெளியேற்ற உதவும் அங்கம் (பாயு), உற்பத்திக் கருவி அதாவது பிறப்புறுப்பு (உபஸ்த) ஆகியவையாம்.

15 - 19. பஞ்ச தன்மாத்ரா

அகங்காரத்தின் தமோ குணத்தில் இருந்து பூதாதி பரிணாமத்தால் ஏற்படுபவை பஞ்ச தன்மாத்திரா (ஐந்து தன்மாத்திரைகள்). தன்மாத்திரை என்றால் உட்பொருள், உணர்வுக்கூறு, அடிப்படைக்கூறு என்று பொருள். அதனால், தமிழில் இதனை அடிப்படை ஐங்கூறுகள் எனலாம். பூதாதி என்றால் பூதங்களுக்கு முதன்மையானது என்று பொருள். ஆகையால், 5 தன்மாத்திரைகளும் ஐம்பெரும்பூதங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக விளங்குகின்றன. அந்த 5 தன்மாத்திரைகள், முறையே சப்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு அல்லது தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை) ஆகியவையாம். இந்த 5 தன்மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் உள்ளன.

20 – 24. பஞ்ச மகாபூதங்கள்

“பிரகிருதி பஞ்சபூதானி” என்ற வாக்கியம் உண்டு. பிரகிருதி எனப்படும் பேரியற்கையானது பஞ்ச பூதங்களின் வடிவில் உள்ளது என்று இதற்குப் பொருள். வெளிப்பட்டுள்ள இயற்கை, நமக்கு வெளிப்படையாகத் தெரிவது இந்தப் பஞ்ச பூதங்களின் வடிவில்தான். தமிழில் இதனை ஐம்பெரும் பூதங்கள் என்றழைப்பர்.

அடிப்படை ஐங்கூறுகள் எனப்படும் பஞ்ச தன்மாத்திரைகளில் இருந்துதான் இந்த ஐந்து பூதங்களும், அதாவது ஐவகை இயற்கை வடிவங்களும் தோன்றின. ஓசை எனப்படும் சப்தத்தில் (நாதத்தில்) இருந்து வெளி எனப்படும் ஆகாயம் தோன்றியது. ஆகாயமே மற்ற பூதங்களுக்கான இருப்பிடமாக விரிந்து பொருள் சார்ந்த உலகம் தோன்றியது. இதனை ஆன்மிகவாதிகள் நாதத்தில் இருந்து உலகம் தோன்றியதாகக் கூறுவர். சிவபெருமானை ‘நாத பிந்து கலாதி நமோநமோ’ என்று வழிபடுவதும் இதன் அடிப்படையில்தான். இன்றைய விஞ்ஞானிகளும் பிக்பேங் (Bigbang) எனப்படும் பெருவெடிப்பின் மூலமே பேரண்டம் தோன்றியதாகக் கூறுகின்றனர். இதைத்தான், இந்திய ஆன்மிகத்தின் ஆதித் தத்துவமான சாங்கியம் அன்றே மொழிந்திருக்கிறது.

பின்னர் ஓசை என்ற தன்மாத்திரையோடு, ஊறு அதாவது தொடு உணர்வு என்ற தன்மாத்திரையும் இணைந்து காற்று எனப்படும் வாயு தோன்றியது. பின்னர், இவை இரண்டுடன் வடிவம் என்ற மூன்றாவது தன்மாத்திரையும் இணைந்து தீ (அக்னி) எனப்படும் தேயு தோன்றியது. இந்த மூன்றுடன் சுவை எனப்படும் நான்காவது தன்மாத்திரையும் சேர்ந்து நீர் எனப்படும் ஆப உருவானது. இறுதியில் ஓசை, ஊறு, வடிவம், சுவை ஆகிய நான்கு தன்மாத்திரைகளுடன் மணம் என்ற ஐந்தாவது தன்மாத்திரையும் சேர்ந்து மண், நிலம் எனப்படும் பிருத்வி உருவானது.

பிரகிருதி மற்றும் அதில் இருந்து கிளைத்த மேலும் 23 விஷயங்களைச் சேர்த்து, இதுவரை 24 தத்துவங்களைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பிரகிருதியின் தோற்றம், பிறிதொன்றின் அனுபவத்துக்காக என்று சுட்டப்படும் 25-வது தத்துவமாகிய புருஷன் குறித்து அடுத்த வாரம் காண்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com