சுடச்சுட

  
  Tirumoolanathar_Perangiyur

   

  ‘வாழைபோல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்..’ என்ற தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளைக் கேட்டிருப்போம். ஆனால், தன்னையே முழுவதும் ஏதாவது ஒரு செயலுக்காகத் தியாகம் செய்தால் அதனால் கிடைப்பதென்ன? தன் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு புனிதச் செயலுக்காக ஈடுபட்டுக் கிடந்தால் ஒருவேளை புகழ் கிடைக்கலாம். ஆனால், பிறர் அதனை நினைவில் கொள்வார்களா. இதனால் என்ன பயன் என்று கேள்விகள் எழக்கூடும். இதற்கு வரலாற்றின் வண்ணங்களில் ஏதாவது பக்கங்கள் இருக்கிறதா?

  அரசன் அல்லது தலைவன் மீது ஈடுபட்டு அவனுக்காகத் தன் இன்னுயிரையும் ஈடுசெய்யும் வீரர்கள் பலர் உண்டு. தெய்வத்துக்கான திருப்பணிகளில் ஈடுபட்டு அதற்காக வாழ்க்கையை ஈந்த ஒருவருக்கு ஊரார் செய்த செயலை ஒரு கல்வெட்டு எடுத்தியம்புகிறது. திருக்கோயிலூர் அருகில் உள்ள பேரங்கியூர் என்னும் ஊரில் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு இராசகேசரியின் 6-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. இது முதலாம் இராசராச சோழனின் காலத்தியதாகக் கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டு பொ.நூ. 991-ஐ சேர்ந்தது. இந்தக் கல்வெட்டு, திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த பெரிங்கூர், அதாவது இன்றைய பேரங்கியூரைச் சேர்ந்த பெருங்குறி சபையார், அதாவது அவ்வூரை ஆளும் மன்றத்தால் வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றிய குறிப்பை இந்தக் கல்வெட்டு தருகிறது.

  சபையார், அவ்வூர் ஆலயத்தில் ஸ்ரீகார்யத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தியாகம் செய்த கணபதி நம்பி ஆரூரன் என்பவனுக்காக அவ்வூர் பெருமானுக்கு விளக்கெரிக்கவும், ஒரு தவசி உண்ணவும் செய்த நிலக்கொடையைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. எப்படி எதற்காகத் தன்னைத் தியாகம் செய்தான் அந்தத் திருவுடையவன் என்பது கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அவனை நினைவுறுத்துவதற்காகவும் அவன் மேலுலகில் பெரும் நற்பயன் ஈட்ட வேண்டியும், ஊரார் தானம் செய்திருப்பது தெளிவாகிறது.

  கோவிராஜகேஸரிபன்மர்க்கு யாண்டு 6-ஆவது திருமுனைப்பாடி நாட்டுப் பெரிங்கூர் பெருங்குறி பெருமக்களோம் இவ்வூர், ஸ்ரீமூலஸ்தானத்து பெருமாநடிகளுக்கு ஸ்ரீகார்யம் செய்கின்ற கணவதி நம்பி ஆரூரன் தேவருடைய ஸ்ரீகார்யத்துக்காகத் தன்னை ஆன்மத்யாகம் செய்த இவனுக்காக தேவர்க்கு சந்த்ராதித்தவத் ஒரு நந்தாவிளக்கெரிப்பதற்கு வைத்த இறையிலியாக தேவர்க்கு செய்துகுடுத்த னிலமாவது..

  இவ்விதம் கல்வெட்டு செல்கிறது. அதாவது, ஸ்ரீகார்யம் செய்யும் கணபதி நம்பி ஆரூரன் என்பான் தேவருக்காக ஆன்ம தியாகம், அதாவது தன்னையே தியாகம் செய்தமையால், ஊர்ச்சபையார் அவன் நற்பேறு பெறுவதற்காகத் தினமும் விளக்கெரிக்கவும் ஒரு தவசி உண்ணவும் நிலத்தைத் தானமாக வழங்கிய செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

  ஆக, இறைவனுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் உள்ளமும், அதனை உணர்ந்து அவனுடைய நற்பேற்றுக்காக ஊரார் கொடை அளிப்பதுமாக வரலாற்றின் வண்ணங்கள் மிளிர்கின்றன. இன்று கோயிலுக்காக இல்லாமல் போனாலும் ஊருக்காகத் தன்னையே தருகின்றவர்களுக்கு ஊரார் நன்றி பாராட்டினால், பலரும் இதுபோன்ற ஆன்ம தியாகம் செய்யவில்லையென்றாலும், தன்னலம் பாராமல் தியாகம் செய்வர் என்பதில் ஐயமில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai