88. உயர்ஜாதி மிருகம்

நான் கண்ணீரை வெறுக்கிறேன். துயரங்களில் இருந்து விலகிவிட விரும்புகிறேன். துயரங்களின் பிறப்பிடம் உறவுகள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உறவுகளை விட்டு வந்தேன்.
88. உயர்ஜாதி மிருகம்

முதல் முதலில் அவரை நான் பார்த்தபோது இந்த மனிதர் இன்னும் சற்று அழகாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஓர் அழகனாக உருப்பெறத் தொடங்கி, என்ன காரணத்தாலோ பாதியில் கைவிடப்பட்ட படைப்பாகத் தெரிந்தார். அவர் உயரமாகவும் இல்லை. குள்ளமும் இல்லை. ஒல்லியாகவோ, இரட்டை நாடி சரீரம் கொண்டவராகவோ இல்லை. விழிகள் கூர்மையாக இருந்தன. ஆனால் கண்ணின் கீழ்ப்புறம் படிந்திருந்த நிழலில் விழுந்து ஒளி மங்குவதுபோலத் தோன்றியது. தாடி வைத்திருந்தார். அது இல்லாதிருந்தால் இன்னும் சற்று அழகாகத் தெரிவாரோ என்று நினைக்கும்படியாகவே அதுவும் இருந்தது. அவர் அணிந்திருந்த காவி ஜிப்பா அவருக்கு நன்றாக இல்லை. கச்சம் வைத்துக் காவி வேட்டி உடுத்தி இருந்தார். அது அவருக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை என்று நினைத்தேன். அவரது தோற்றத்துக்கும் குரலுக்கும்கூடப் பொருத்தமில்லை. கிட்டத்தட்ட பெண் குரல் அவருக்கு. பேசும்போது நெஞ்சில் உருண்டையாக ஏதோ ஏறி ஏறி இறங்கியது தெரிந்தது. இவை அனைத்தையும் மீறி அவர் ஓர் ஆளுமைதான் என்று பார்த்த கணத்தில் தோன்றியது.

நீங்கள் யார் என்று கேட்டேன். தன்னை அவர் ஒரு சன்னியாசி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தோற்றத்திலேயே அது தெரிந்தது என்றபோதும் அவர் வாயால் அதைக் கேட்க விரும்பினேன். அவர் இருந்த அந்த அறையில் தெய்வீகமான எந்தப் பொருளோ, புகைப்படங்களோ இல்லை. சுவரில் ஆணி அடித்து இரண்டு காவி ஜிப்பாக்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு சிறிய கணக்குப் பிள்ளை மேசை இருந்தது. அதன் மீது அவரது மூக்குக் கண்ணாடி மடக்கப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. அருகே ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாடா கட்டிலில் ஒரு தலையணையும் போர்வையும் இருந்தன.

மிஞ்சினால் அவருக்கு அப்போது அறுபது வயதுதான் இருக்கும். அந்த வயதுக்கு அவர் இன்னமும் திடகாத்திரமாக இருந்திருக்கலாம் என்று பட்டது. எழுபது வயதுக்காரரைப் போலத்தான் நடந்தார். வார்த்தைக்கு வார்த்தை நிறைய இடைவெளி விட்டே பேசினார். என்னிடம், ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டார். நான் என்னைக் குறித்து சுருக்கமான ஓர் அறிமுகத்தைச் சொல்லி, சிறிது நேரம் அங்கே படுத்துத் தூங்க அனுமதி கிடைக்குமா என்று கேட்டேன்.

இரு என்று சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார். இரண்டு வாழைப்பழங்களை எடுத்து வந்து கொடுத்து, ‘நீ பசியோடு இருக்கிறாய். இப்படிப் படுத்தால் தூங்க முடியாது. இதைச் சாப்பிட்டுவிட்டுப் படு’ என்று சொன்னார். நான் பதில் சொல்லாமல் அதை வாங்கி உண்டேன். அவரே தனது தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதையும் வாங்கிக் குடித்தேன். ‘சிறுநீர் கழிக்க வேண்டுமா?’ என்று கேட்டார். பிறகு உள் அறையோடு ஒட்டியிருந்த பாத்ரூம் வரை அழைத்துச் சென்று விளக்கைப் போட்டார். நான் முடித்துவிட்டு வந்ததும் தன் கட்டிலைக் காட்டி படுத்துக்கொள்ளச் சொன்னார்.

எனக்குத் தயக்கமாக இருந்தது. ‘பரவாயில்லை படு’ என்று சொன்னார்.

‘நீங்கள் எங்கே படுப்பீர்கள்?’

‘நீ உறங்கி எழுந்ததும் நான் தூங்கிக்கொள்கிறேன். நீ படு’ என்றார். எனக்கு அது விநோதமாகப் பட்டது. முந்தைய நாள் மாலை முதல் நான் இடைவிடாமல் நடந்துகொண்டே இருந்திருக்கிறேன். உண்மையிலேயே ஒதுங்க இடமின்றித்தான் திரிந்தேன். ஓரிடத்தில் அமர்வதைக் காட்டிலும் நடந்துகொண்டிருந்தால் குளிரின் வீரியம் சற்றுக் குறைவதாகத் தோன்றியதால்தான் அப்படிச் செய்தேன். ஆனால் அந்த அதிகாலைப் பொழுதில் எனக்கு அந்தத் துறவியின் இருப்பிடத்தில் அப்படியொரு வரவேற்பும் வசதியும் வாய்க்கும் என்று அனுபவிக்க நேர்ந்தபோதுகூட நம்ப முடியவில்லை. ஏனோ எனக்குப் படுக்க வேண்டாம் என்று தோன்றியது. நான் அந்தக் கட்டிலில் அமர்ந்துகொண்டு அவரையும் இழுத்து உட்காரவைத்தேன். ‘எனக்குத் தூக்கம் வரவில்லை’ என்று சொன்னேன்.

‘நீ மிகவும் களைப்பாக இருக்கிறாய். தூக்கம் வரும்’ என்று அவர் சொன்னார்.

‘ஆனால் வயதில் மூத்தவரான உங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு என்னால் உறங்க முடியாது’.

‘அப்படி நினைக்காதே. பொதுவாக எனக்கு இரவில் உறக்கம் வருவதில்லை. நான் பகலில்தான் தூங்குவேன். நீ வரும்போது நான் விழித்திருந்தேனா இல்லையா?’

‘எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லுங்கள். யாரோ திருடன் நுழைந்துவிட்டதாகத்தானே நினைத்தீர்கள்?’

அவர் சிரித்தார். ‘மடிகேரியில் உள்ள திருடர்களுக்கு இந்த ஆசிரமத்தை நன்றாகத் தெரியும். மாலை ஏழு மணிக்கு வந்தால் சப்பாத்தியும் சப்ஜியும் இங்கே கிடைக்கும் என்று தெரிந்து வருவார்கள். இங்குள்ளவர்களை வெட்டிப் போட்டாலும் அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது’.

அவருக்குச் சிறிது தமிழ் தெரிந்திருந்தது. இளம் வயதில் வேலூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஆசிரியப் பணி செய்திருப்பதாகச் சொன்னார்.

‘இப்போது என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சும்மாதான் இருக்கிறேன்’ என்று பதில் சொன்னார். அந்தப் பதில் எனக்குப் பிடித்திருந்தது. அதை அவர் சிரித்துக்கொண்டே சொன்னது இன்னமும் பிடித்தது. அந்த டீக்கடைக்காரன் கேட்டதைப் போலவே அவரும் நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்தவனா என்று கேட்டார்.

‘இல்லை. எனக்கு என் வீட்டை மிகவும் பிடிக்கும். அப்பா, அம்மா, சகோதரர்கள், என் தாய்மாமா இவர்கள் அனைவரும் எனக்கு உயிருக்கு நிகர். அதனால்தான் விட்டு விலகிவிட்டேன்’.

‘கடவுளைப் பார்க்க வேண்டுமா உனக்கு?’

‘ஐயோ வேண்டாம்’ என்று அலறினேன்.

‘பிறகு?’

‘நான் ஓடி வந்ததன் காரணம் கேட்கிறீர்களா? உண்மையிலேயே அதற்கொரு காரணம் கிடையாது. ஓடிப்போன என் அண்ணனைத் தேடிப் போனேன். ஏனோ திரும்ப வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது’.

‘உன் படிப்பு, எதிர்காலம் பற்றி யோசித்தாயா?’

‘ஏன்? படித்தால் போகிறது. அதற்கென்ன?’

‘இல்லை. உன்னைப் பற்றி உன் பெற்றோருக்குச் சில கனவுகள் இருக்கும்’.

‘ஆம். இருக்கும். இருக்கிறது’.

‘நீ இப்படி விட்டுவிட்டு வந்தது அவர்களுக்குப் பெரிய துயரத்தைக் கொடுக்கும்’.

‘சந்தேகமில்லை ஐயா’.

‘உனக்கு அந்த வருத்தம் இருக்கிறதா?’

நான் சற்றும் யோசிக்கவில்லை. ‘நிச்சயமாக இருக்கிறது’ என்று சொன்னேன். ‘அதை நினைவூட்டாதீர்கள். கதறி அழுதுவிடுவேன்’.

‘பிறகு ஏன் ஓடி வந்தாய்?’

‘அப்படியொரு கதறல் வாழ்நாளில் இனி எப்போதும் என்னிடம் இருந்து எழக் கூடாது என்பதால்தான். நான் கண்ணீரை வெறுக்கிறேன். துயரங்களில் இருந்து விலகிவிட விரும்புகிறேன். துயரங்களின் பிறப்பிடம் உறவுகள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உறவுகளை விட்டு வந்தேன்’ என்று சொன்னேன்.

‘அப்பா! என்ன சுயநலம்!’

அந்தச் சொல் என்னை உறுத்தியது. அது சுயநலம்தானா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை என்று தோன்றியது. ஒருவிதத்தில் அது என் வீட்டார் நலன் கருதி நான் எடுத்த முடிவு என்றுகூடத் தோன்றியது. அண்ணா விலகிச் சென்றபோது அப்பாவும் அம்மாவும் அழுத அழுகை எனக்கு நினைவிருக்கிறது. வினய் விட்டுச் சென்றபோது அந்தத் துயரம் இன்னும் பல மடங்கு வீட்டில் அதிகரித்ததைக் கண்டேன். அப்போது கண்ணீர் அவ்வளவு இல்லை. ஆனால் துயரம் இருந்தது. மிக நிச்சயமாக இருந்தது. மௌனத்தின் விஷச் சாறில் ஊறப்போட்ட துயரம். அப்பா, அம்மா, மாமா, வினோத் அனைவருமே அவரவர் கதவுகளை இழுத்துப் பூட்டிக்கொண்டு உள்ளுக்குள் எதையோ உருட்டிக்கொண்டிருந்தார்கள். கடமை போல வீட்டில் இருப்பார்கள். கடமை போலச் சாப்பிடுவார்கள். கடமை போலவே உறங்கி எழுந்து வேலையைப் பார்ப்பார்கள். அம்மாவின் சமையல் ருசி அக்காலங்களில் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. உணவில் உப்பு, காரம் சரியாக இருக்குமே தவிர ருசி என்ற ஒன்று படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போனது. ஆனால் வீட்டில் யாரும் அது குறித்துப் பேசியதில்லை. ‘டேஸ்டாவே இல்லம்மா’ என்று நான் சொன்னபோதெல்லாம் அம்மா பதில் சொல்லாமல் எழுந்து போய்விடுவாள்.

துயரம்தான். தாங்க முடியாத இழப்புத்தான். யார் இல்லை என்றது? ஆனால் ஒரு துயரம் கொண்டாடப்படத்தக்கதா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது. சந்தோஷங்களைப் போலவே துக்கத்தையும் கொண்டாடும் மனோபாவம் மனித குலத்துக்கு எப்படியோ ஒட்டிக்கொண்டுவிட்டது. எந்த மிருகமும் மரணத்துக்காகவோ, சக மிருகம் விட்டுப் பிரிவதற்கோ இப்படி துக்கம் கொண்டாடிக்கொண்டிருப்பதில்லை. மனிதன் எந்த விதத்தில் மிருகத்தினும் மேம்பட்டுவிட்டான்?

இதை நான் அவரிடம் கேட்டபோது, ‘மிருகம் துக்கம் அனுஷ்டிப்பதில்லை என்று உனக்கு யார் சொன்னது? மிருகங்களில் உயர்ஜாதி மிருகம் மனிதன்தான்’ என்று சொன்னார்.

‘அப்படியா? நான் ஒரு மிருகமாக இருக்க விரும்பவில்லை’.

‘சரி இரு. நாற்பத்தொன்பதைக் கேட்டுச் சொல்கிறேன். ஒன்று நீ செத்துப் போய்விட வேண்டும். அல்லது தேவதையாகிவிட வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com