இலக்கியம் காட்டும் திருப்பூர்

தமிழ்நாடானது சேர , சோழ , பாண்டிய என மூவேந்தர்களால் ஆளப்பட்டு இருந்தாலும் , கொங்கு நாடு தனி நாடாகவே இருந்து வந்துள்ளதை
இலக்கியம் காட்டும் திருப்பூர்


கொங்கு நாடு 
                       தமிழ்நாடானது சேர , சோழ , பாண்டிய என மூவேந்தர்களால் ஆளப்பட்டு இருந்தாலும் , கொங்கு நாடு தனி நாடாகவே இருந்து வந்துள்ளதை காண முடிகிறது.


சங்க இலக்கியங்களில் ,
               கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே – புறநானூறு 373
               கொங்கர் குடகட லோட்டிய ஞான்றை - புறநானூறு 160
              ஆகெழு கொங்கர்  -பதிற்றுப்பத்து 22  
என்றும் ,

   சமய இலக்கியமான பெரியபுராணத்தில் .,
                 சோலையணி திருப்பாண்டிக் சொடுமுடி 
                 யணைத்தனர் கொங்கில் –ஏயர்கோன் 85
என்று கொங்குநாடு தனிநாடாகவே சுட்டப்பட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது.

கொங்கு நாட்டுப் பிரிவுகள் ;
                  கொங்கு நாட்டின் எல்லையாகக் கொங்கு மண்டலச் சதகம்
        வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு , 
                  குடக்கு பொருப்பு வெள்ளிக் குன்று 
                  கிடக்கும் களித்தண்டலை மேவு காவிரிசூழ்                           
                  நாட்டுக்குளித் தண்டலையளவு  கொங்கு 
என்று கூறுகிறது. இத்தகைய கொங்கு மண்டலம் 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது .அவ்வாறான 24 நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் பொங்கலுார் நாட்டில் இருந்த ஒரு ஊர் தான் திருப்பூர் .

அலகுமலைக் குறவஞ்சி;
                தமிழில் பல்வேறு இலக்கிய வகைகள் உள்ளன , அவற்றில் 96 வகையான சிற்றிலக்கிய வகைகளே 12 ம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆளுமை பெற்றன. அவ்வாறான சிற்றிலக்கியத்தில் ஒன்றே குறவஞ்சி எனப்படுவது. அத்தகைய குறவஞ்சியில் ஒன்றுதான் அலகுமலைக்குறவஞ்சி .இதனை பொங்கலுார் நாட்டின் தலைநகரான, கொடுவாய்  எனும் ஊரில் வாழ்ந்த பிரமயண நாவலர் என்பவரின் மகனான சின்னதம்பி நாவலர் இயற்றியுள்ளார். அவர் இந் நுாலை இயற்றிய காலத்தைக் குறிப்பிடும்போது கலியுக சகாப்தம் 4854-ல்    ( கி.பி 1753 )  அரங்கேற்றியதாக குறிப்பிடுவதால் இன்றைய ஆண்டிற்கு ( கி.பி 2019 ) 267 ஆண்டுகளுக்கு முன்னர் என்று தெரிய வருகிறது .

அலகுமலைக் குறவஞ்சி ;
   பொங்கலுார் நாட்டில் ஓர் ஊராக உள்ள அழகுமலையில் இருந்து அருள்பாலித்து வருகின்ற தமிழ்க் கடவுளான முருகனுக்கு அலகுமலையாண்டவர் என்று பெயர். அதுபோன்றே அழகுமலைக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்   பொங்கலுார் நாட்டையாண்ட வேளாளரில் கொடுவாயில் வாழ்ந்த ஓதாளர் குலத்தைச் சேர்ந்த  பெரிய பெருமாள் .இந்த நூல் ஓதாளரைச் சிறப்பித்துக் கூறுவதால் ஓதாளர் குறவஞ்சி என்றும் கூறப்படுகிறது. இதனை ஓலைச்சுவடியில் இருந்து 1963 ஆம் ஆண்டு அச்சு நுாலாக்கியவர் பழனிச்சாமி புலவர் ஆவார்.

அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் ;
    அலகுமலைக் குறவஞ்சியில் திருப்பூர் என்று தற்போது குறிப்பிடப்படும் நகரம் அக்காலத்தில் திருப்பையூர் என்று சுட்டப்பட்டிருக்கிறது. அதனை கீழ்க்காணும் வரிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1   பொங்கலுார் நாட்டில் உள்ள ஊர்களாக குறிப்பிடப்படுபவற்றில்
     பொங்கலுர் கொடுவாய் புத்தரசை உபாயனூர்
     பொன்குன்றை செம்மாபுரம்
     புகழ்பெருந்தாபுரி திருப்பையூ ருடனேநற்
     புவிபெரும் பிள்ளை நகரும்
     …  என்றும் 

2   பொங்கலூர் நாட்டின் கண் உள்ள சிவாலயங்களைக் குறிக்கும் போது          
தென்பெருந்தையில் பாண்டிலிங்கேசர் 
திருப்பையூர் விஸ்வநாதமயேசர் 
என்றும்

3   அலகுமலையாண்டவர் கீழ்க்காணும் ஊர்களுக்கு எல்லாம் பவனி செல்கின்றார். அவ்வாறு செல்லும் ஊர்களாக ,
               பொங்கலுர் கொடுவாய் புத்தரசை யுபாயனூர்
                      தங்குன் றாபுரம் தழைத்தசெம் மாபுரம்
               பெருந்தை திருப்பையூர் பெரும்பிள்ளை நகரம்
…  என்றும் 

4   குறத்தி தான் பெற்ற பரிசுகளாக குறவனிடத்து கூறும் இடத்தில்
              கைக்கணை யாழிதந்த தாரடி சிங்கி
               பனங்காடை பொன்னையனும் பொருளந்தைக் காங்கேயனும்
                பரிந்து திருப்பையூரார் தந்தது சிங்கா.
    என்று கணையாழி பெற்றதையும் ,
                 செம்பொன்கச் சேதடி சிங்கி மகிழ்ந்து
                 திருப்பையூர் வாழ் கொங்கவணிகன் விஸ்வமால்
                 குருசாமி தந்த வரிசைதான் சிங்கா.
என்று பொன்னாலான மார்பு கச்சையைப் பெற்றதைப் பற்றியும் குறத்தி கூறுவதாகக் கூறுகிறார்.

5   பொங்கலூர் நாட்டு ஊர்த்தலைவர்களைக் குறிப்பிடும் பொழுது , அவர்களில் பெரும்பாலோனோர் வேளாளர்களாகவே உள்ளனர். ஆனால் திருப்பூரான திருப்பையூரில் மட்டும். வாணிகம் செய்யும் செட்டிமாரே ஊர்த்தலைவராக இருந்துள்ளனர் என்பதை ,
                   திருப்பையூர் தனில்வாழ் செம்மைசேர் கொங்கச் 
                    செட்டியே யந்நகர் திகழ்வுறு தலைவன்
என்று குறிப்பிடுகிறார்.

இதன் வாயிலாக திருப்பூர் என்று தற்காலத்தில் சுட்டப்பெறும் ஊரானது   270 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பையூர் என்று சுட்டப்பட்டு  , வணிகர்கள் அதிகம் வசித்த ஊராக விளங்கி அவ்வணிகனையே ஊர் தலைவனாகவும் கொண்ட ஒரு ஊராக விளங்கி வந்துள்ளதை இந்த அலகுமலைக் குறவஞ்சி மூலம் அறியமுடிகிறது.

     இது குறித்து தொல்லியல் அறிஞர் திரு..ர பூங்குன்றன் அவர்களிடம் கேட்ட பொழுது சங்க காலத்தில் திருப்பையூர் என்ற பெயரில் ஓர் ஊர் குறிப்பிடப்படுகிறது .அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எனவே திருப்பூரான திருப்பையூர் ஒரு சங்ககால ஊராக இருக்குமோ ? என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எழுகிறது . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com