மற்றவர்களுக்கும் தமிழை தெரிந்து கொள்ள வைக்க வேண்டும்: துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பேச்சு
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 83 வருடங்களை கடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


தமிழ் மொழியை வளர்க்க வேண்டுமென்றால், மற்றவர்களுக்கும் தமிழை தெரிந்து கொள்ள வைக்க வேண்டும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மையம், உலகத்தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) மற்றும் கணி தமிழ்சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 11-வது உலகத்தமிழ் இணைய மாநாடு தொடக்க விழா பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது.
துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 83 வருடங்களை கடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக்காகவும், தமிழ் இசையையும் வளர்த்த பல்கலைக்கழகம். தமிழ் மொழிக்கு இடையூறு வரும் போதெல்லாம் போராடி வெற்றி பெற்றவர்கள் இப்பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள். பல்கலைக்கழகம் சிக்கலான நேரத்திலும் இந்த மாநாட்டை நடத்துவதற்கு காரணம் தமிழ்மொழியின் மீதான ஆர்வத்தின் காரணமாகும். தற்போது தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளில் புகுந்து வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் புகுத்துவது இன்றியமையாததாகும். இந்த இன்றியமையாமையை தமிழ் ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.
விழாவில் உத்தமம் அமைப்பு தலைவர் மு.மணிவண்ணன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியது: சென்னையில் 1991-ம் ஆண்டு உலகத் தமிழ் தகவல் தொழில்நுடப் மன்றம் தொடங்கப்பட்டு, தற்போது 11-வது மாநாட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது. மாநாட்டின் நோக்கம் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது குறித்தும், வணிக சந்தையாக்குவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தென்னிந்திய திராவிட மொழிகளில் பண்டைய இலக்கியம் உள்ள தமிழில்தான். தமிழ்நூல்கள், கல்வெட்டு ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்ரை கணினி இணைய மூலம் மக்களுக்கு சென்றடைய மென்பொருள்களை உருவாக்குவதுதான் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பேச்சு மொழியாகவும், கல்வெட்டு மொழியாகவும் தமிழ் மொழி இருந்துள்ளது. எனவே தமிழர்கள் தமிழ் மென்பொருள்களை அதிகம் வாங்கி ஆதரிக்க வேண்டும். மாநாட்டில் கணினி தமிழ் மென்பொருள் உருவாக்கி கொடுப்பவர்களில் தேர்வு செய்து சிறந்த மென்பொருள் உருவாக்கிய 3 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
மாநாட்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த முனைவர் சிவபிள்ளை வாழ்த்துரையாற்றுகையில் ஐரோப்பா இருக்கும் வரையும், தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் இருக்கும். இங்கிலாந்தில் 327 மொழிகள் பேசப்படுகிறது. அதில் ஒன்று பயிற்சி கொடுக்கும் மொழியில் தமிழ் 6-வது மொழியாக உள்ளது என்றார். மலேசியாவைச் சேர்ந்த செ.ம.இளந்தமிழ் பேசுகையில் மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் உள்ளன. அதில் 1 லட்சத்து 3 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். அதில் 60 பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் தமிழ் தொழில்நுட்பம் பயிற்சி பெறுகின்றனர் என குறிப்பிட்டார்.மாநாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குநர் முனைவர் மா.கணேசன் வரவேற்றார். மாநாட்டு மலரை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் வெளியிட அதனை முதல் பிரதியை பல்கலைக்கழக முன்னாள் மொழியியல் துறைத்தலைவர் சை.வே.சண்முகம் பெற்றுக்கொண்டார். சென்னை அடோப் நிறுவனம் இயக்குநர் மோகன் கோபாலகிருஷ்ணன் மையக் கருத்துரையாற்றினார்.
தமிழறிஞர்கள் சிவபிள்ளை (இங்கிலாந்து), செ.ம.இளந்தமிழ் (மலேசியா), ச,மணியம் (சிங்கப்பூர்), முகுந்த் சுப்பிரமணியன் (ஆஸ்திரேலியா), சிவ அனுராஜ் (இலங்கை), மைசூர் இந்திய மொழியியல் நடுவண் நிறுவன இயக்குநர் முனைவர் இல.ராமமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜா நன்றி கூறினார். மாநாட்டில் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆர்.கே.சிவக்குமார், வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பத்ரிசேஷாத்திரி, கணி தமிழ்ச்சங்கத் தலைவர் கிழக்கு பதிப்பகம் வள்ளி ஆனந்தன், மக்கள் அரங்கம் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூர் உதவிப் பேராசிரியர் மு.இளங்கோவன், பேராசிரியர் காமாட்சிநாதன், பேராசிரியர் அரங்க.பாரி, பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தமிழ் மென்பொருள் கண்காட்சி கூடத்தை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் திறந்து வைத்து கண்காட்சி ஸ்டால்களை பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...