/

சிதம்பரத்தில் ஸ்டீல் கார்பரேஷன் உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கி ரூ.3 லட்சம் வழிபறி: 3 பேர் கைது

சிதம்பரம் எம்.ஐ.நகரில் வசிப்பவர் முகமதுபாரி (57). சிதம்பரம் சின்னகாஜியார்தெருவில் திருச்சி ஸ்டீல் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  நேற்று(செவ்வாய்க்கிழமை)

News image
Updated On :3 ஏப்ரல் 2013, 9:53 am

G.Sundararaj

சிதம்பரத்தில்  ஸ்டீல் கார்பரேஷன் உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கி ரூ.3 லட்சத்தை மர்மஆசாமிகள் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக மூன்று பேரை நகர போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 62 ரூபாயை கைப்பற்றினர்.

சிதம்பரம் எம்.ஐ.நகரில் வசிப்பவர் முகமதுபாரி (57). சிதம்பரம் சின்னகாஜியார்தெருவில் திருச்சி ஸ்டீல் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு கடையை பூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது பைசல்மஹால் திருமண மண்டபம் அருகே கடலூர் சாலையில் மர்மஆசாமிகள் வழிமறித்து உருட்டு கட்டையால் தலையில் தாக்கி, அவரது கையிலிருந்து ரூ.3 லட்சம் ரொக்கத்துடனான பையை பிடு்ங்கிச் சென்றனர். காயமுற்ற முகமதுபாரி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, ஏஎஸ்பி எம்.துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். வழிபறி குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எம்.ஐ.நகரைச் சேர்ந்த எஸ்.பாஸ்கர் (24), அவரது தம்பி மணிகண்டன் (22), தில்லைஅம்மன்நகரைச் சேர்ந்த பி.அசோக்குமார் (23), பிள்ளையார் மணி என்கிற மணிகண்டன் (24) ஆகிய நால்வரும் சேர்ந்து வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது. நகர போலீஸார் எஸ்.பாஸ்கர், பி.அசோக்குமார், எஸ்.மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்தனர். மற்றொரு பிள்ளையார் மணி என்கிற மணிகண்டனை தேடி வருகின்றனர். பாஸ்கர் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் இருந்த வழிபறி செய்த பணம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 620 ரூபாயை போலீஸார் கைப்பற்றினர். மேலும் பையிலிருந்த கேஸ் பாஸ் புத்தகம், ரேஷன்கார்டு, கடை சாவி, பத்திரம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். எம்.ஐ.நகரில் வசிக்கும் பாஸ்கர் கடன் பிரச்சனையால் அப்பகுதியில் வசிக்கும் முகமதுபாரியிடம் பணத்தை பறிக்க தனது தம்பி மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கடந்த 10 தினங்களாக பின்தொடர்ந்து சென்று செவ்வாய்க்கிழமை இரவு வழிபறியில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.