இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கடந்து போகின்றன. தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த 6,381 ஏக்கர் நிலங்கள் இலங்கை ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது.இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை.தற்போது இலங்கை ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமான ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகின்றன.மேலும் தமிழர்கள் வழிபட்டு வந்த சுமார் 2,500 கோயில்களும், 400 கிறிஸ்துவ தேவாலயங்களும் இடிக்கப்பட்டு, சிங்கள வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டு விட்டன.