விருதுநகர் மாவட்டத்தில் விபத்தினால் மான்களின் உயிரிழப்பை கட்டுப்படுத்தும் வகையில் சாலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒளிரும் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை உள்ளிட்டவைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மண்டல வனப்பாதுகாவலர் அஜிஸ் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய மலை அடிவார பகுதி சாலையோரங்களில் மான்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மலைப்பகுதியில் போதுமான இரை மற்றும் தண்ணீர் வசதி ஆகியவை இல்லாததால் சாலையைக் கடந்து தோட்டப்பகுதிகளுக்கு சென்று வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே மலைப்பகுதிகளில் இருந்து விளைநிலங்களுக்குள் வருவதை தடுப்பதற்காக அடிவாரப்பகுதியில் ஆழ்குழாய் அமைத்து, தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதேபோல், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிருகங்கள் தண்ணீர் அருந்துவதற்காக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த மாவட்டத்தில் மதுரை-செங்கோட்டை சாலையில் உள்ள கிருஷ்ணன்கோயில், லட்சுமியாபுரம், சேத்தூர் ஆகிய பகுதிகளிலும், அதேபோல் விருதுநகர்-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பட்டம்புதூர், மருளூத்து, வாய்ப்பூட்டான்பட்டி, கூமாபட்டி-பிளவக்கல் அணை சாலை, வத்திராயிருப்பு-தாணிப்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரங்களில் இரை மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து தோட்டப்பகுதிகளுக்குள் செல்கிறது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதில், விருதுநகர்-மருளூத்து, பட்டம்புதூர் கிராமங்களில் 4 வழிச்சாலையில் அடிக்கடி அடையாளம் தெரியாத வாகன விபத்துக்களில் மான்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே இப்பகுதியில் மான்களின் உயிரிழப்பை கட்டுப்படுத்தும் வகையில் மருளூத்து கண்மாய் பகுதியில் ஆய்வு செய்து, அதிகமாக இருப்பது தெரியவந்தால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று சாலைகளில் முக்கிய இடங்களில் வேகத்தடை மற்றும் சாலை தடுப்புகள், இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான எச்சரிக்கை பலகைகளும் விரைவில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக விருதுநகர் மண்டல வனப்பாதுகாவலர் அஜிஸ் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.