/

கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை நடத்த பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என, பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.திருநெல்வேலியில் இன்று அவர்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 5:01 pm IST

தமிழகத்தில் கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என, பா.ஜ.க. மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.திருநெல்வேலியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசு கடந்த 2007-ம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. ஏழை இந்து மாணவர்களுக்கும் இந்த கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ.க. போராடி வருகிறது. ஜூலை போராட்டம் என்ற பெயரில் இந்த போராட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.இதன் நிறைவாக அடுத்த மாதம் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் கோவையில் இளந்தாமரை போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

இந்த கல்வித் உதவித் தொகையில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் வழங்கி வருகிறது. எனவே, இந்த கல்வி உதவித் தொகையை ஏழை இந்து மாணவர்களுக்கும் நீட்டிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.ஆடிட்டர் ரமேஷ் கொலை, பெங்களூர் குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு சம்பவங்களுக்கு பின்னணியில் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தீவிரமாக செயல்பட்டிருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இந்த விசயத்தில் ஒரு கொலை அல்லது சில கொலைகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த நாட்டுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கருத வேண்டும். இந்த விசயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்தி்ருப்பது உணவு பாதுகாப்பு சட்டம் அல்ல. காங்கிரஸ் பாதுகாப்பு சட்டம்.  உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையான விவாதத்திற்கு பிறகு தான் முடிவெடுக்க முடியும். எனவே, மத்திய அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது.உணவு பாதுகாப்பு சட்டமாக இருந்தாலும் சரி, இலங்கை பிரச்னையாக இருந்தாலும் சரி எந்த விசயத்திலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவாக பேச வேண்டும். இரட்டை அர்த்தத்தோடு பேசுவது தப்பிப்பதற்கான வழி.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கடற்கரை தாது மணல் கொள்ளை குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். நாட்டின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மட்டுமின்றி கடற்கரை தாது கொள்ளை எங்கே நடந்தாலும் அதனை தடுக்க வேண்டும். தாது மணல் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். விதிகளை மீறி நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். தவறுகளை தட்டிகேட்கும் கடமை அரசுக்கு உள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பிரமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதால் எந்த பயனும் இருக்காது. ஏனென்றால் பிரதமர் சொல்லுவதை இலங்கை அரசு கேட்காது. அந்த அளவுக்கு சக்தி இல்லாதவர் பிரதமர். இலங்கைக்கு சரியான பாடம் கற்பிக்கும் அளவுக்கு கடுமையான நடவடிக்கை தேவை.நடிகர் விஜய் நடித்த தலைவா படத்தை திரையிடவிடாமல் தடுப்பது சரியல்ல. படத்தை திரையிட தேவையான  பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.பேட்டியின் போது கட்சியின் மாநில செயலர் பழனிவேல்சாமி, கோட்ட செயலர் அன்புராஜ், மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.