/

நிரம்பிவரும் வீராணம்ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி இன்றைய நிலவரப்படி 46.40 அடியை (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) எட்டியுள்ளது. வீராணம்ஏரி நிரம்பி வருவதாலும், ஏரியிலிருந்து ஆக.27-ம் தேதி பாசனத்திற்கு நீர்

News image
Updated On :25 ஆகஸ்ட் 2013, 1:31 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி இன்றைய நிலவரப்படி 46.40 அடியை (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) எட்டியுள்ளது. வீராணம்ஏரி நிரம்பி வருவதாலும், ஏரியிலிருந்து ஆக.27-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டியை நீரை தராததாலும் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த மூன்று மாதகாலமாக ஏரி, குளங்கள், ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் வறண்டு போயின. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி முற்றிலும் வறண்டு போனது. இதனால் ஏப்ரல் 27-ம் தேதி முதல் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் நீர் திறக்கப்பட்டு கீழணையிலிருந்து வடவாறு மூலமாக வீராணத்திற்கு நீர் அனுப்பட்டது. வறண்டு போய் இருந்த வீராணம்ஏரி நிரம்பியதால் மீண்டும் சென்னை குடிநீருக்கு ஆக.17-ம் தேதி முதல் நீர் அனுப்பும் பணி தொடங்கியது. தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 46.40 அடியை (1197 மில்லியன் கனஅடி) எட்டியது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 (1465 மில்லியன் கனஅடி) அடியாகும். வீராணம்ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 77 கனஅடி அனுப்பப்படுகிறது. ஏரியியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 71 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் சம்பா சாகுபடிக்கு ஆக.27-ம் தேதி நீரை திறக்க உத்தரவிட்டுள்ளதால், சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.