/

முதல்வரின் நேரடி பார்வையில் உள்ளது கடலூர் மாவட்டம்: அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் உள்ள மாவட்டமாகும். எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒடோடி வந்து உதவி செய்து வரும் முதல்வராக

News image
Updated On :17 ஜூலை 2013, 12:35 pm

G.Sundararaj

கடலூர் மாவட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் உள்ள மாவட்டமாகும். எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒடோடி வந்து உதவி செய்து வரும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சிதம்பரம் வடக்குமெயின்ரோடு பைசல் மஹாலில் மண்டபத்தில் வேளாண்மை துறை சார்பில் நெல் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லா வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.விழாவில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அவர் பேசியதாவது:

கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடியினை 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அதிகரிக்கும் வகையில் முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் உணவு உற்பத்தி இரண்டு மடங்காக உயர்த்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் 2011-12ல் இலக்கான 75 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி, 150 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. நவீன கரும்பு சாகுபடி, உயரிய ரக பயிர் உற்பத்தி செய்யும் திட்டம், தோட்டக்கலைத் துறையில் காய்கறிக்கள், பழங்கள், மலர் சாகுபடி இரட்டிப்பு மடங்காக உயர்த்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. அதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை அறிவித்து மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவதாயிகள் தங்கள் வயலுக்கு நீரினை விரைவாகவும், விரையும் இன்றி எடுத்துச் செல்ல ரூ.173 லட்சத்திற்கு ஹெடிபிஇ பைப்புகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு குறுவை சிறப்பு சாகுபடி சிறப்பு திட்டத்திற்கு ரூ.85.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 21500 விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளை கைப்பிடுத்தும் தூக்கிவிடும் அரசாகவும், ஊக்குவிக்கும் அரசாகவும் முதல்வர் ஜெயலலிதா அரசு உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் முன்னிலை வகித்துப் பேசினார். வேளாண் இணை இயக்குநர் எம்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு சுற்றுலா வாரியக்கழகத் தலைவர் ஏ.அருண்மொழிதேவன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாக.முருகுமாறன், செல்விராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியை மக்கள்-தொடர்பு அதிகாரி கு.தமிழ்செல்வராஜன் தொகுத்து வழங்கினார். விழாவில் ஒன்றியத் தலைவர்கள் கே.ஏ.பாண்டியன் (குமராட்சி), வி.ஆர்.ஜெயபாலன் (கீரப்பாளையம்), கே.அசோகன் (பரங்கிப்பேட்டை), சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் தோப்பு கே.சுந்தர், சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பா.மில்லர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரங்கிபேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.