/

அனுமதியின்றி வாகன பேரணி புறப்பட்ட விவசாயிகள் 100 பேர் கைது

மழை நீரை தேக்க கொள்ளிடத்தில் கதவணை கட்டக்கோரி போலீஸார் அனுமதியின்றி காட்டுமன்னார்கோயிலில் இன்று இருசக்கர வாகனப் பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் 100

News image
Updated On :26 ஜூலை 2013, 9:53 am

G.Sundararaj

மழை நீரை தேக்க கொள்ளிடத்தில் கதவணை கட்டக்கோரி போலீஸார் அனுமதியின்றி காட்டுமன்னார்கோயிலில் இன்று இருசக்கர வாகனப் பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரைக்கு மேல்பகுதியில் மழைநீரை தேக்க 7 இடங்களில் கதவணை அமைக்க கோரி கொள்ளிட்டம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோயிலிருந்து கடலூர் வரையிலான விவசாயிகள் பங்கேற்கும் இருசக்கர வாகன பேரணி காட்டுமன்னார்கோயில் பஸ்நிலையத்தில் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் இன்று காலை புறப்பட்டனர். பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்ததை மீறி புறப்பட்ட விவசாயிகள் 100 பேரை காட்டுமன்னார்கோயில் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தெரிவித்தது: நிலத்தடி நீர் மட்டம் உயரவும், மழை நீரை தேக்கவும்,  கொள்ளிடம் ஆற்றில் நளம்புத்தூர், மாதிரவேலூர், ம.புளியங்குடி, சித்தமல்லி, எய்யலூர், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் பாசன வசதிக்கும் கதவணை கட்ட வேண்டும். மேலும் ஜெயங்கொண்டப்பட்டினம், நானல்படுகையில் கடல்நீர் உட்புகாமல் இருக்க படுக்கை அணை கட்டப்பட வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரைக்கு மேல் 7 இடத்தில் மழை நீரை தேக்க கதவணைகள் கட்ட வேண்டும். நெய்வேலி மின்சாரத்திலிருந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திகாட்டுமன்னார்கோயிலிருந்து கடலூர் வரை இருசக்கர வாகன பேரணியாக புறப்பட்டோம். ஆனால் எங்களது நியாயமான கோரிக்கைக்கான பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்து எங்களை கைது செய்துள்ளனர் என பி.விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.