எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழக மீனவர்களை காப்பாற்றிட கடற்படைக் கப்பல்கள் தீவிர ரோந்து: மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தகவல்

தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய கடல் பகுதியில் கடற்படைக் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜூன் 2013, 3:38 pm

செல்வ முத்துகுமாரசாமி

தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய கடல் பகுதியில் கடற்படைக் கப்பல்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் வி.நாராயணசாமி காரைக்காலில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி : ராமேசுவரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இவர்களை மீட்க இலங்கை தூதரக அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மத்திய அரசின் முயற்சிக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தரும் என நம்புகிறோம். தமிழக, புதுவை மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க, இந்திய கடற்படைக் கப்பல்கள் பல, இந்திய எல்லையில் தீவிரமான ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொடரும் இந்த பிரச்னைக்கு இருநாட்டு மீனவர்களும் பேசி சமூக தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய அரசு 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்பந்தம் செய்து அளித்தது. இதனை மீட்க தமிழக முதல்வர்  பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கான முடிவை பிரதமர் எடுப்பார். காவிரி நிதி நீர் ஆணையம் அமைக்கும் முன்  அமைக்கப்பட்ட காவிரி கண்காணிப்புக் குழு, கர்நாடகத்திடம் காவிரி நீர் குறித்த கணக்குகளை கோரியுள்ளது. ஆணையத்தை மத்திய அரசு அமைப்பது உறுதி. கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்போது, தமிழகம் புதுவைக்குரிய தண்ணீரை தராமல் புறக்கணிக்கக்கூடாது.

வறட்சியையொட்டி நிவாரணம் பெற தமிழக  அரசு மத்திய அரசை முறையாக அணுகியுள்ளது. ஆனால் புதுவை அரசு இதுவரை மத்திய அரசிடம் நிவாரணம் வேண்டி, பாதி்ப்பு குறிப்புகளுடன் அணுகவில்லை. புதுவை மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வேளாண் அமைச்சர் சரத்பவாரை நான் சந்தி்த்துப் பேசியபோது, புதுச்சேரி அரசிடம் இருந்து எந்த கோரிக்கையும் குறி்ப்புகளுடன் வரவில்லை என கூறியதோடு, அவரே புதுச்சேரி முதல்வரை தொடர்புகொண்டு கடிதம் கோரியுள்ளார். அந்த அளவிற்கு ரங்கசாமி மக்கள் நலனில் அலட்சியமாக உள்ளார்.

மத்திய அரசு எல்லா மாநிலங்களையும் சமமாகவே பார்க்கிறது. ஆளும்கட்சி, எதிர்கட்சி மாநிலங்கள் என பாரபட்சம் கிடையாது. தமிழக முதல்வர் மத்திய அரசு தமிழகத்தை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. இதுபோன்று பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை தரம் உயர்த்த ஓ.என்.ஜி.சி. நிர்வாகத் தலைமையுடன் பேசியுள்ளேன். ரூ.100 கோடி தரும்படி கோரியுள்ளேன். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. காரைக்காலில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. காரைக்காலில் மின் உற்பத்தி நிலையம் இருப்பதால், வெளிநாட்டிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்து கூடுதல் மின்சாரம் தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழி பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, சர்வே பணி முடிந்து அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவடைந்தால் காரைக்கால் - புதுச்சேரி ஒன்றரை மணி நேரத்தில் கடக்கமுடியும்.

நாட்டில் புதிதாக 80 இடத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியினர் தஞ்சாவூர் அல்லது புதுச்சேரியில் பாஸ்போர்ட் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் இருந்து சென்னை, எர்ணாகுளம் விரைவு ரயில்கள், திருச்சி, தஞ்சாவூருக்கு பயணிகள் ரயில்கள்  இயக்கப்படுகிறது. மேலும் காரைக்கால் - பெங்களூர் மற்றும் காரைக்கால் - மும்பை புதிய ரயில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் காரைக்காலில் இருந்து 8 ரயில்கள் இயக்கப்படும். காரைக்கால் - பேரளம் புதிய அகல ரயில்பாதைக்கு ரூ.78 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது பயன்பாட்டுக்கு வரும்போது காரைக்காலில் இருந்து நான்கரை மணி நேரத்தில் சென்னையை சென்றடையமுடியும்.

புதுச்சேரியில் மின்கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோன்று வாட் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் என்றார் நாராயணசாமி. பேட்டியின்போது புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.வைத்திலிங்கம், பிரதேச காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.