

மாணவ, மாணவிகள் அனைவரும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் எளிதாக வெற்ற பெற முடியும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பிச்சுமணி தெரிவித்தார்.
விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் கல்வியியல் கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். இக்கல்லூரியின் செயலாளர் பி.சி.எஸ்.கோவிந்தராஜபெருமாள் முன்னிலை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில், சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பிச்சுமணி பங்கேற்று பேசியதாவது:
இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவுத்திறன்களை பெற்று விளங்குகின்றனர். அதனால், ஆசிரியர்களும் தங்களது துறைச்சார்ந்த அறிவு, தகவல் தொடர்பு உள்ளிட்ட திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.21-வது நூற்றாண்டில் பல்வேறு துறைகளில் தொழிற்நுட்பம் வளர்ச்சி மாற்றங்களை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மடிக்கணினி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதிகமான செய்திகளை தெரிந்து வைத்துள்ளனர். அதனால், ஆசிரியர்கள் வாழ்நாள் கற்றுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். பல்வேறு புதுமைகளை படைக்க மாணவர்களை ஊக்கவிக்க வேண்டும்.
மேலும், நல்ல ஆசிரியராக இருக்க வேண்டும் என்றால், பண்பு நலன், நேரம் தவறாமையுடன், இடர்பாடுகளை தாங்கும் சக்தியை பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு அறிவூட்டுகின்றவர்களாக மட்டுமே இருக்காமல், சிந்தனையை தூண்டும் வகையில் கற்பிக்க வேண்டும். ஒழுக்கமுள்ள ஆசிரியர்கள் தான் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க முடியும். மேலும், நேர்மை எங்கு உள்ளதோ, அங்குதான் வளர்ச்சி உருவாகும் என்பதை உணர்ந்து வருங்கால ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.
மாணவர்கள் நம்பிக்கையுடன் சமூகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், சரியான சிந்தனையுடன் திறமையாக திட்டமிட்டு தன்னம்பிக்கையுடனும், ஓழுக்கத்தோடும் வளமான எதிர்காலத்தை பட்டதாரிகள் அமைத்துக் கொள்ளவும் முன்வர வேண்டும். தங்களது முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்று விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றியை எளிதாக பெறலாம் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) பிச்சுமணி கேட்டுக் கொண்டார். அதையடுத்து, நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு கல்வியியல் துறை பட்டங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் எம்.டி.குமரன், கல்லூரி பொருளாளர் திரவியராஜன், செந்திக்குமார நாடார் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.