சிதம்பரம் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பிறகும் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் அரசு பஸ் நேற்று(சனிக்கிழமை) இரவு புறப்பட்டது. சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் பிரம்மராயர்சுவாமி கோயில் அருகே எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்மநபர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கிவிட்டு தலைமறைவாயினர். இதில் பஸ்ஸின் முன்புறக்கண்ணாடி உடைபட்டது. இதுகுறித்து ராசிபுரம் தாலுக்காவைச் சேர்ந்த பஸ் டிரைவர் ரத்தினம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.