டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குடிமன்னர்களின் அட்டகாசத்தில் குமுறும் மக்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும், பல்வேறு கடைகள் உள்ள பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில் அந்த மதுபான கடைக்கு வந்து மது

News image
Updated On :29 அக்டோபர் 2013, 10:04 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் பொதுமக்கள் அதிகம் நடமாடும், பல்வேறு கடைகள் உள்ள பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வரும் நிலையில் அந்த மதுபான கடைக்கு வந்து மது அருந்திச் செல்லும் குடிமன்னர்கள் செய்யும் அட்டகாசத்தில் அப்பகுதி மக்களும், மாணவர்களும், கடைக்காரர்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியானது கவரப்பேட்டை-சத்தியவேடு நெடுஞ்சாலையில் உள்ளது. பூவலம்பேடு பகுதியில் பேருந்து நிலையம் எதிரில் பல்வேறு கடைகள், வங்கி, மின்வாரிய அலுவலகம் உள்ள பகுதியில் தமிழக அரசின் மதுபான கடை உள்ளது.இந்த மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள கடை வாசல்களில் அமர்ந்து மது அருந்துவதும், போதையின் உச்சத்தில் ஒருவருக்கொருவர் தகராறு செய்வதுமாக, அங்கேயே சிறுநீர் கழிப்பதுமாக குடிமன்னர்கள் செய்யும் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மேற்கண்ட மதுபான கடையானது ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வருவதால் அருகில் உள்ள கடைக்காரர்கள் பெரிதும் அவதிப்படுவதோடு, இந்த மதுபானக் கடைக்கு அருகில் கடை வைத்திருந்தவர் குடிமன்னர்களின் அட்டகாசத்தால் கடையை மூடிவிட்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த மதுபான கடை உள்ள பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில் பூவலம்பேட்டில் இருந்து தேர்வாய், பெரியபுலியூர், வாணியமல்லி, பாஞ்சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்களும் இங்கே தான் கூடுவார்கள். இப்படி இங்கே கூடும் பொதுமக்களும், பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த மதுபானக் கடையில் மது அருந்தி செல்லும் குடிமன்னர்களால் தொல்லைப்படுத்தப்படுவதும், அவர்களின் அட்டகாசத்தால் அவதிப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக இந்த மதுபானக் கடையில் இருந்து இரண்டாவது கடையாக உள்ள பெண்கள் அழகு நிலையத்திற்கு வரும் பெண்களும், இந்த மதுபான கடைக்கு நேரெதிரே உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வரும் மகளிர் குழுவினரும் மதுபிரியர்களின் அட்டகாசத்தை சகிக்க முடியாமல் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் இந்த மதுபானக் கடையை அகற்ற போராட்டம் நடத்தும் முடிவில் உள்ளனர்.

இப்படி நெடுஞ்சாலையில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள வங்கி, மின்சார வாரிய அலுவலகம், பல்வேறு கடைகள் உள்ள வணிக வளாகம் உள்ள இடத்தில் அரசின் மதுபானக் கடை செயல்படுவது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இடையூறாய் அமைவதால் இந்த மதுபானக் கடையை அகற்றி வேறு இடத்தில் வைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.