47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகூர் சந்தனக் கூடு அலங்கார வளைவுக்கு தீ வைத்த 3 பேர் கைது

நாகையில் தயாராகிக் கொண்டிருந்த நாகூர் தர்காவின் சந்தனக் கூடு அலங்கார வளைவுக்கு தீ வைத்ததாக நாகை மற்றும் நாகூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 11:33 am

சங்கர்

நாகையில் தயாராகிக் கொண்டிருந்த நாகூர் தர்காவின் சந்தனக் கூடு அலங்கார வளைவுக்கு தீ வைத்ததாக நாகை மற்றும் நாகூர் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகூர் தர்காவின் சந்தனக் கூடு ஊர்வலம் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.  இதையொட்டி, நாகை ஜமாத் சார்பில், நாகை அபிராமி அம்மன் திருவாசல் அருகே உள்ள கூட்டடியில், சந்தனக்கூடு அலங்கார வாகனம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அலங்கார வளைவுகளுடன் கூடிய சந்தனக்கூடு மற்றும் அதற்கான வாகனத்தை சீரமைத்து, ஊர்வலத்துக்குத் தயார்ப்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

கடந்த வியாழக்கிழமை அலங்கார வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தத் தொழிலாளர்கள், இரவு 10 மணிக்கு தொழில் கூடத்தைப் பூட்டி விட்டுச் சென்றனர்.அவர்கள், மீண்டும்  வெள்ளிக்கிழமை அதிகாலை பணிக்குத் திரும்பிய போது,  சந்தனக்கூடு தயாரிப்புக் கூடத்திலிருந்து புகை வெளியேறியுள்ளது.  இதைக் கண்ட ஊழியர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதில், சந்தனக் கூட்டின் அலங்கார வளைவுகள், வாகன சக்கரம் ஆகியவற்றில் லேசான சேதம் ஏற்பட்டது. சேதம் குறைவாக இருந்தாலும், நாகூர் ஆண்டவர் மீதான  ஆன்மிகப்பற்று அடிப்படையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நாகை ஜமாத் தலைவர் லாசா மரைக்காயர் அளித்த புகாரின் பேரில் நாகை நகர காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில், நாகை, கடசல்காரத்தெரு, ஷேக்தாவூது மகன் முகமது அஸ்கின்(31), கமாலியா பள்ளித் தெரு சிக்கந்தர் மகன் முகமது அப்துல்காதர்(31), நாகூர் செம்மரக்கடைத் தெருவைச் சேர்ந்த இக்பால் மகன் முஸ்தபா கமால்(30) ஆகியோர் சந்தனக் கூட்டுக்குத் தீ வைத்ததாகத் தெரியவந்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தனக் கூடு ஊர்வலம் இஸ்லாம் மதக் கோட்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்ற அடிப்படையில், சந்தனக் கூட்டுக்கு தீ வைக்கும் செயல் நிகழ்த்தப்பட்டதாகவும்,  இதே கொள்கைக் கொண்ட அமைப்புகளைச் சேர்ந்த மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நாகை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.