மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட 11 பேர் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நாகை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான து. முனுசாமியிடம் 2 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் விவரம் :
திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூர் புதுத்தெருவைச் சேர்ந்த சி. ஆறுமுகம்(61). கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி முடுக்குத் தெருவைச் சேர்ந்த மு. சம்சுதீன்(53). தனியார் எலக்ட்ரீஷியன்.
மயிலாடுதுறையில்... மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் 9 பேர் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் விவரம் : கடலூர் மாவட்டம், பண்ட்ருட்டி, நெல்லிக்குப்பம், பாரதியார் தெருவைச் சேர்ந்த பா. ஜெயப்பிரகாஷ்(35). கடலூர் மாவட்டம், பண்ட்ருட்டி, நெல்லிக்குப்பம் பிரதான சாலையைச் சேர்ந்த அ. ரகுராம்(33). நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்துக்குள்பட்ட இளையமதுக்கூடம், கீழத்தெருவைச் சேர்ந்த அ. ரேவதி(34). இவர், பாமக வேட்பாளர் மனைவி க. அகோரத்தின் மனைவி. தரங்கம்பாடி வட்டம், நரசிங்கநத்தம், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மு. நாகராஜ்(39). நன்னிலம் வட்டம், திருமாளம், பண்டாரவாடை, கீழத்தெருவைச் சேர்ந்த ப. ஆறுமுகம்(39). விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர், மயிலாடுதுறை கலைஞர் நகரைச் சேர்ந்த ஜெ. குமாரவேல்(25). இவருக்கான மாற்று வேட்பாளராக அக்கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் பெ. சந்திரசேகர்(42). வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான சனிக்கிழமை சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத் தாக்கல் செய்தவர்களில் பலர், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்.
வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தங்கள் முகவர்களை அதிக எண்ணிக்கையில் இடம் பெறச் செய்யவும், கார் அனுமதி உள்ளிட்டவைகளை அதிகளவில் பெறும் நடவடிக்கையாக இந்த முயற்சிற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பதிலியாக 2 பேர் மனுத் தாக்கல் மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர் அலி மற்றும் மாற்று வேட்பாளர் தமிமும் அன்சாரி ஆகியோருக்கு பதிலியாக 2 பேர் சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்
செ. ஹைதர் அலிக்கு பதிலியாக மயிலாடுதுறை, நெ.2 கடலங்குடியைச் சேர்ந்த அப்துல்ஜபார் மகன் முகமது அன்சாரி(30), தமிமும் அன்சாரிக்கு பதிலியாக மயிலாடுதுறை அரங்கங்குடியைச் சேர்ந்த முகமது அலி மகன் நஸ்ருல்லா(29) ஆகியோர் சனிக்கிழமை மயிலாடுதுறை சார் ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினியிடம் மனுத்தாக்கல் செய்தனர்.