சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் என்கிற ஸ்ரீசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமை இரவு (ஏப்.4)கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்றது. பங்குனி உற்சவ தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் கோயிலில் காலை 4 மணிக்கே ஸ்ரீ நடராஜர் சன்னதி திறந்து 7 மணிக்குள் பகல் இரண்டாம் கால பூஜை வரை நடைபெற்றது. பின்னர் கீழசன்னதி நிலையிலிருந்து ஸ்ரீசுப்பிரமணியர் தேரில் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கீழசன்னதி நிலையை அடைந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
உற்சவத்தை முன்னிட்டு மாலை நடராஜர் கோயிலில் உள்ள தேவசபையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை காலை பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீபாண்டியநாயகம் கோயிலில் ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத மயில்மீது அமர்ந்துள்ள ஸ்ரீசண்முகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தீர்த்தவாரி உத்ஸவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே ஸ்ரீ பாண்டியநாயகம் கோயில் திருப்பணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. பின்னர் நடராஜர் கோயிலை அரசு இந்து அறநிலையத்துறை ஏற்று நிர்வாக அதிகாரியை நியமித்தது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது திருப்பணிகள் நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் திருப்பணி நின்று போனது.
தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்களை கோயிலை நிர்வகிக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அண்மையில் கடந்த ஜன.24-ம் தேதி நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மடம் சார்பில் ஸ்ரீபாண்டியநாயகம் கோயில் ரூ.4 கோடி செலவில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்படும் என தெரிவித்தார். விரைவில் திருப்பணி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது