டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தனியார் நிதி நிறுவனத்தில் வைத்த 9 பவுன் செயினை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில், தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்ட 9 பவுன் செயின் காணாமல் போய்விட்டதாகக் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை

News image
Updated On :5 டிசம்பர் 2014, 2:09 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில், தனியார் நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்ட 9 பவுன் செயின் காணாமல் போய்விட்டதாகக் கூறியதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் மா.முனீஸ்வரன் (41). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாஜி சாலையில் உள்ள பி.ஆர்.பி. வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தனது மற்றும் மனைவி பெர்ஸியா மாணிக்கத்தின் நகைகளை 22.11.12-ம் தேதி வியாபார தேவைக்காக அடமானமாக வைத்து ரூ.3.91 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.

நகைக் கடனுக்கான வட்டியை 23.2.13 முதல் 10.3.13-ம் தேதி வரை உரிய காலத்தில் அலுவலகத்தில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் 25.9.13-ம் தேதி கடன் எண் 1227-க்குரிய 72.4 கிராம் எடையுள்ள இரட்டைவடை தங்க செயினை அசல் மற்றும் வட்டித் தொகை செலுத்தி நகையை மீட்டுக் கொள்வதற்காக நிதி நிறுவனத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு பணியிலிருந்த எஸ்.சிவக்குமார் (40), டி.சிவக்குமார் (52), எஸ்.சுரேஷ் (40), முத்துப்பாண்டி (35) ஆகியோர், குறிப்பிட்ட நகையை மதுரையில் உள்ள தங்களது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளார்கள். அசல், வட்டியைச் செலுத்தினாலும் 6 மாதம் கழித்துதான் நகையைத் திருப்ப இயலும் என்ற பொய்யான காரணத்தைக் கூறி நகையை அபகரிக்க முயற்சித்தார்களாம்.ஏனைய நகைகளுக்கு வட்டியைச் செலுத்த செல்லும் போதெல்லாம், குறிப்பிட்ட செயினை தொடர்ந்து கேட்டுள்ளார்கள். மதுரையிலிருந்து செயின் வரவில்லை என்றே கூறி வந்துள்ளார்கள். முனீஸ்வரனும் அவரது மனைவி பெர்ஸியா மாணிக்கமும் 18.10.2014-ம் தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள இவர்களின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த மண்டல மேலாளர் குருபுத்திரனிடம் விவரம் கேட்டுள்ளார்கள். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையிலிருந்து குறிப்பிட்ட செயின் தங்களுக்கு வரவேயில்லை. நகை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

19.10.14-ம் தேதி இரவு நிறுவனத்தின் எஸ்.சிவக்குமார், முனீஸ்வரன் வீட்டிற்கு வந்து குறிப்பிட்ட நகை காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த முனீஸ்வரனும் அவரது மனைவியும் போலீஸில் புகார் கொடுக்கப்போவதாக் கூறியுள்ளார்கள். அதற்கு சிவக்குமார், எங்கள் நிறுவனம் பெரிய நிறுவனம். எதையும் சமாளித்துவிடுவோம் என்று கூறி முனீஸ்வரனை மிரட்டியுள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் 27.10.14-ம் தேதி முனீஸ்வரன் புகார் கொடுத்துள்ளார்.

காவல் நிலைய சார்பு ஆய்வாளர், முனீஸ்வரனை அழைத்து செயினுக்குரிய அசல் மற்றும் வட்டியை செலுத்தக் கூறியுள்ளார். அதற்கு முனீஸ்வரன் ஒப்புக்கொண்ட நிலையில், நிதி நிறுவனத்தினர் காவல் நிலையத்தில் குறிப்பிட செயினை ஆஜர் செய்ய மறுத்துவிட்டார்கள். 18.11.14-ம் தேதி இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்யப்பட்ட நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முனீஸ்வரன் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி கவிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகாருக்கு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.