கூடங்குளம் அணுஉலை விஸ்தரிப்புக்கு ஆதரவளிப்போம்: இல.கணேசன்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக அணுஉலைகள் அமைப்பது உள்ளிட்ட விஸ்தரிப்புப் பணிகளுக்கு தமிழக பா.ஜ.க. தனது ஆதரவைத் தெரிவிக்கும். அதே நேரத்தில் அங்கு உற்பத்தியாகும்


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதலாக அணுஉலைகள் அமைப்பது உள்ளிட்ட விஸ்தரிப்புப் பணிகளுக்கு தமிழக பா.ஜ.க. தனது ஆதரவைத் தெரிவிக்கும். அதே நேரத்தில் அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு அதிகளவு கொடுக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் இல.கணேசன்.திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்க தகுதியில்லாத அரசு, மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல். இதற்கு பொதுமக்கள் பதிலளிக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தேசிய கட்சியான காங்கிரஸையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால் பா.ஜ.க. மீது மக்களிடையே நம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின்பு பா.ஜ.க.வினரிடையே எழுச்சி அதிகமாக உள்ளது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தைரியத்தோடு சந்திப்போம். தேர்தல் கூட்டணியில் கட்சிகள் சேருவதும், விலகுவதும் இயல்பான ஒன்றாகும். ம.தி.மு.க.வின் விலகலும் அப்படித்தான். இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நாடுதழுவியதாகும்.
பாரதி பிறந்த மண்ணில் ஜாதிய மோதல்கள் என்பது தவறானதாகும். இதுபோன்ற மோதல்களைத் தடுக்க சமுதாயத் தலைவர்கள் முன்வர வேண்டும். கட்சித் தலைவர்கள் முன்வந்தால் வாக்குவங்கிக்காக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இலங்கைப் பிரச்னையைப் பொருத்தமட்டில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாரபட்சமின்றி மிகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகத்தில் வேலைஉறுதியளிப்புத் திட்டம் (100 நாள் வேலைதிட்டம்), மகளிர் சுயஉதவிக்குழு கலைப்பு என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது தவறானதாகும். கிராமப்புற வேலைஉறுதியளிப்புத் திட்டம் தொடரும். அதே நேரத்தில் அதனால் விவசாயம் பாதிக்காத வகையில் சிறு சிறு தேவையான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளும். மகளிர் சுயஉதவிக் குழுக்களும் கலைக்கப்பட மாட்டாது.கூடங்குளம் அணு உலையைப் பொருத்தமட்டில் பொதுமக்களின் அச்சம் மட்டுமே பேசப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அச்சம் இல்லாத அம்சம் எதிலுமே இல்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் அணுஉலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட விஸ்தரிப்புப் பணிகளுக்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு அளிக்கும். அதே நேரத்தில் அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் அதிகளவை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வரிவசூல் மையங்களில் சாமானியர்கள் பாதிக்கப்படாமல், சரக்கு வாகனங்களுக்கு மட்டும் கட்டணங்களை வசூலிக்கக் கோரியுள்ளோம். அதுகுறித்து அரசு பரிசீலிக்கும். மதமாற்ற தடைச்சட்டம் என்பதை பா.ஜ.க. முதலில் கொண்டு வரவில்லை. பிற கட்சிகளின் இரட்டை வேடத்தைத் தொடர்ந்து, நாங்கள் சட்டம் கொண்டு வர தயார் என்ற சவாலைதான் விடுத்துள்ளோம்.
நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது சாத்தியப்படும் திட்டம் தான். அதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்வதோடு நிதிகளையும் ஒதுக்கி வருகிறது. தமிழகத்தில் நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரியிருப்பதை வரவேற்கிறேன்.கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கும் மூல காரணமாக மதுபோதையை காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மதுவை அரசே விற்பதால் குற்றங்களுக்கு அரசுதான் பொறுப்பு என்றாகிவிடுகிறது. ஆகவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தும் என்றார் அவர்.
பேட்டியின்போது பா.ஜ.க. நிர்வாகி ராஜேஷ் கண்ணன், மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மகளிரணி நிர்வாகி அனித்தா உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...