/

சென்னை-பழனி தென்பழனி பாதயாத்திரைக்குழுவின் 1008 கூண்டுக்காவடி

சென்னையில் இருந்து பழனிக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வந்த பக்தர்கள் 1008 அலகுடன் கூண்டுக்காவடி, எலுமிச்சை காவடி என ஏராளமான காவடிகளை எடுத்து வந்து

News image
Updated On :8 பிப்ரவரி 2014, 10:52 am

என்.​ அங்​கு​பாபு

சென்னையில் இருந்து பழனிக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வந்த பக்தர்கள் 1008 அலகுடன் கூண்டுக்காவடி, எலுமிச்சை காவடி என ஏராளமான காவடிகளை எடுத்து வந்து முருகனுக்கு நேர்ச்சை செலுத்தினர்.

    பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவுபெற்ற நிலையிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்த வண்ணம் உள்ளனர்.  சனிக்கிழமை சென்னையில் இருந்து பழனிக்கு 480 கி.மீ தூரம் தென்பழனி பாதயாத்திரை குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து தங்கள் நேர்ச்சையை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு செலுத்தினர். 

காலை 7 மணிக்கு சண்முகநதியில் நீராடிய பக்தர்களில் நூற்றுக்கணக்கானோர் கன்னம், நாக்கில் அலகு குத்திக்கொண்டதோடு, பால்காவடி, மயில்பீலி காவடி என நேர்ச்சைகள் மேற்கொண்டனர். ராயபுரம், திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பயணத்தை மேற்கொண்டு பிப்.8 நிறைவு செய்துள்ளதாக குழுவின் குருசாமி பழனிச்சாமி, வழிநடை முகப்பிரிடன் பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.  பக்தர் கந்தன் என்பவர் மொட்டையடித்து தலை, உடல் என பல பகுதிகளிலும் 1008 அலகுகள் குத்தி பஞ்சாரக் கூண்டுக்காவடி எடுத்தார்.  கூண்டுக்காவடி மேலே ஐம்பொன்னாலான சிவன், ஐயப்பன், பார்வதி, விநாயகர், முருகன் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

  பக்தர் பார்த்திபன் என்பவர் உடலில் 51 இடங்களில் கொக்கியால் எலுமிச்சையை குத்தி நேர்ச்சை மேற்கொண்டார்.  அலகுகுத்தும் பணிகளை மூலக்கொத்தளத்தை சேர்ந்த சுவாமிகள் கந்தன், கணேசன் ஆகியோர் மேற்கொண்டனர்.  சண்முகநதியில் இருந்து பழனி அடிவாரம் வந்த இவர்கள் கிரிவீதியை சுற்றி மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் நேர்ச்சை நிறைவு செய்தனர். 1008 கூண்டுக்காவடியை கண்ட பலரும் பரவசமடைந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.