எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்

செளதி அரேபியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு  கொண்டுவர நடவடிக்கை எடுக்க கடந்த மூன்றரை மாதமாக ஆட்சியரகத்துக்கு அலைகிறார் அவரது மனைவி.

News image
Updated On :10 ஜனவரி 2014, 6:29 am

செல்வ முத்துகுமாரசாமி

செளதி அரேபியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு  கொண்டுவர நடவடிக்கை எடுக்க கடந்த மூன்றரை மாதமாக ஆட்சியரகத்துக்கு அலைகிறார் அவரது மனைவி.

காரைக்கால் மஸ்தான்பள்ளி வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (33). இவரது மனைவி சுமதி. தம்பதிக்கு 10-ம் வகுப்பு, 3-ம் வகுப்பில் பயிலும் இரு  மகன்கள் உள்ளனர். பழனிச்சாமி கட்டடம் கட்டுமானத் தொழிலாளியாக பட்டீஸ்வரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் மூலம் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு செளதி அரேபியா சென்றுள்ளார்.

அங்கு சக தொழிலாளர்களுடன் அறையில் தங்கி பணிக்கு சென்றுவந்தார். அடிக்கடி குடும்பத்தாருடன் அலைபேசியில் பேசிவந்துள்ளார். மாதம்தோறும் ரூ.20 ஆயிரம் அளவுக்கு குடும்பத்திற்கு பணம் அனுப்பிவந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி, பழனிச்சாமி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரிழந்துவிட்டதாக, காரைக்காலில் உள்ள அவரது மனைவி சுமதிக்கு செளதி அரேபியாவிலிருந்து தகவல் கிடைத்தது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரை அணுகி சுமதி தகவல் தெரிவித்து, கணவரின்  சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார.

இந்த நிலையில், 26.9.2013 தேதியிட்டு ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலர், காரைக்கால் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் பழனிச்சாமி உயிரிழந்ததை உறுதி செய்து, இவரது சடலம் இந்தியா கொண்டுவர, அவரது குடும்பத்தாரிடமிருந்து முத்திரைத்தாளில் விண்ணப்பம் எழுதி அனுப்ப கோரப்பட்டிருந்தது.

இதன்படி நோட்டரி வழக்குரைஞர் மூலம் கடிதம் தயாரித்து அனுப்பியுள்ளார் சுமதி. ஆனால் கடந்த மூன்றரை மாதங்களாக கணவரின்  சடலம் காரைக்கால் வந்து சேரவில்லை. இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் அ.முத்தம்மாவை, சுமதி அடிக்கடி அணுகி வலியுறுத்திவருகிறார். மேலும் மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி உள்ளிட்டோரிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் சுமதி, காரைக்கால் ஆட்சியரை சந்திக்க வெள்ளிக்கிழமை வந்தார். அப்போது அவர் கூறியது : கணவரின் சடலம் காரைக்காலுக்கு கொண்டுவர செளதியில் உள்ள இந்திய தூதரகம் கோரியபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம் முறைப்படியான கோரிக்கை வைக்கப்பட்டுவிட்டது.

சடலத்தை அனுப்பும்படி கணவர் பணியாற்றி அர்கன் கம்பெனி நிர்வாகத்தினரிடம் போனில் பேசினேன். தொடக்க நிலையில் அதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும், அவரது இறப்புக்குப் பிறகு கிடைக்ககூடிய சலுகைகளை தருவதாகவும் கூறிய நிறுவனத்தினர், தற்போது பேசும்போது தொடர்பை துண்டித்துவிடுகின்றனர். காரைக்கால் ஆட்சியர் தவிர வேறு எந்த வழியும் எனக்குத் தெரியவில்லை. ஆட்சியரை சந்திக்கவும் முடிவதில்லை. என்ன செய்வதென்றே வழி தெரியாது,

குடும்பம் நடத்த வருமானம் இன்றி, வருமானம் ஈட்டித்தந்தவரை இழந்து தவிக்கிறேன். புதுச்சேரி அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்தவேண்டும். செளதியில் உள்ள இந்திய தூதரகம் சடலத்தை அனுப்பவும்,  எங்கள் குடும்பத்திற்கு சேரவேண்டிய உதவிகளை பெற்றுத்தரவும் அதற்கான கடமையாற்றவில்லையென்பதே வேதனையை கூடுதலாக்குகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.