பழனியில் இடைப்பாடி பக்தர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிப்பு
பழனி மலைக்கோயில் வளாகத்தில் புதன்கிழமை இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் காவடிக்குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது


பழனி மலைக்கோயில் வளாகத்தில் புதன்கிழமை இடைப்பாடி பருவதராஜகுல மகாஜனங்கள் காவடிக்குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெள்ளித்தேர், திருக்கல்யாணம் மற்றும் தைப்பூசத் தேர், தெப்பத்தேர் என பத்து நாட்கள் விழாவாக நடைபெற்று 20ம் தேதி நிறைவு பெற்றது. தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றபின் இடைப்பாடி ஶ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடி வருவது பிரசித்தி பெற்றதாகும்.
ஒரேநாளில் பழனியே திணறும் அளவுக்கு பல லட்சம் பக்தர்கள் பழனி கோயிலுக்கு வந்து செல்வது காணக் கண்கொள்ளா காட்சியாகும். காரைக்குடியில் இருந்து வரும் நகரத்தார், நாட்டார் காவடி போல இந்த பக்தர்கள் கூட்டமும் பழனிக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும். கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி, சின்னமணலி, எடப்பாடி, புதுப்பேட்டை மற்றும் கா.புதூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழைய இடைப்பாடி ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோயிலில் பூஜா திரவியங்கள் நிறைந்த காவடியுடன் நகர்வலம் வந்து முத்திரை நிறைத்து காவடியுடன் பழனிக்கு புறப்பாடு செய்தனர். இவர்களுடன் ஈரோடு வரும் போது சேலம் அம்மாபேட்டை, சின்ன சீரகாம்பட்டி, பரமத்தி வேலூரை சேர்ந்த இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் தைப்பூசக் காவடிகளும் சேரும்.
இவர்கள் அனைவரும் ஜனவரி 22ம் தேதி புதன்கிழமை பழனியை அடுத்த மானூர் பாலாற்றங்கரைக்கு வந்தடைகின்ற. இங்கு கும்பகோணத்தை சேர்ந்த பருவதராஜகுல மக்களும் இங்கு வந்து சேர்கின்றனர். பின்னர் ஆற்றின் கரையில் காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திவிட்டு 10 மணிக்கு மேல் பழனிக்கு பட்டிணப்பிரவேசம் செய்கின்றனர். பால்காவடி, இளநீர் காவடி, கரும்புக்காவடி, சேவல்காவடி, மயில்காவடி, சர்க்கரைகாவடி என பல்வேறு காவடிகள் எடுத்துவரப்பட்டு மலையில் காவடிகள் முத்திரை செலுத்தி காலபூஜைகள், தங்கத்தேர் புறப்பாடு, அன்னதானம் ஆகியவற்றை உபயமாக செய்கின்றனர்.
இந்த காவடிக் குழுக்கு மட்டுமே ஒருநாள் இரவு மலைக்கோயிலில் தங்கும் உரிமை பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் திருக்கோயிலுக்கு ஏற்படும் மின்செலவு, சுகாதார செலவு தொகைகளை காவடிக்குழுக்கள் செலுத்தி விடுகிறது. பின் காவடிகளுடன் பக்தர்கள் தங்கள் ஊருக்கு மீண்டும் பாதயாத்திரையாக செல்கின்றனர். இரு குழுக்களாக வரும் இவர்களுக்காக இடைப்பாடி பருவதராஜகுல பழனியாண்டவர் காவடி பொதுக்கமிட்டி சார்பில் மலைக்கோயிலிலும், பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் மண்டபத்திலும் புதன்கிழமை சுமார் 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயாரித்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக மலைக்கோயில் சுமார் 16 டன் மலைவாழை, ஆயிரம் கிலோ பேரீட்சை, 300 கிலோ கற்கண்டு, ஏழாயிரம் கிலோ கரும்புசர்க்கரை, 150 கிலோ தேன், 150 கிலோ நெய் மற்றும் 10 கிலோ ஏலக்காய் ஆகியன கொண்டு பணிகள் நடைபெற்றுள்ளது. மலைவாழை உரிக்கப்பட்டு சில்வர் அண்டாக்களில் போடப்பட்டு சரியான விகிதத்தில் மற்றவை கொட்டப்பட்டு கலக்கிய பின் பஞ்சாமிர்தம் தயார் செய்யப்பட்டு டப்பாக்களில் நிரப்பப்படுகிறது.
இவை உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின் காவடிக் கூட்டத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து ஊர்த்தலைவர் கிருஷ்ணன், காவடி நிர்வாகஸ்தர் மணி மற்றும் ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது, இப்போது தயார் செய்யப்பட்டுள்ள பஞ்சாமிர்தம் கைபடாத வரை குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வரை கெடாது.
காவடிக்குழுக்களுக்கு பிரித்த பின் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும். மேலும், 50 ஆயிரம் கிலோ அரிசியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...