காங்கிரஸ் வாக்கு வங்கியை நிரூபித்த தென்மாவட்டத் தொகுதிகள்
தமிழகத்தில் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வழங்கி வரும் தென்மாவட்ட மக்கள் தற்போதையே தேர்தலிலும் மதிப்பிற்குரிய வாக்குகளை


தமிழகத்தில் எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை வழங்கி வரும் தென்மாவட்ட மக்கள் தற்போதையே தேர்தலிலும் மதிப்பிற்குரிய வாக்குகளை வழங்கி வாக்கு வங்கியை நிரூபித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் காலக்கட்டத்திலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான வாக்கு வங்கிகளே இருந்து வருகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காமராஜர் வெற்றி, தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற டென்னிஸ் என அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப் பலம் இருந்து கொண்டே இருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் அதிமுக அதிக தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளை பெற்று வந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த தாக்கம் நடைபெற்று முடிந்த மக்களவைத் தொகுதி தேர்தலிலும் வெளிப்பட்டுள்ளது என்றே கூறலாம். வேட்பு மனுத்தாக்கல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எச். வசந்தகுமார் கன்னியாகுமரித் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழக அளவில் வைப்புத் தொகையை பெற்றவர், காங்கிரஸ் வேட்பாளர்களில் முதலிடத்தைப் பிடித்தவர் என்ற பெயரை வசந்தகுமார் பெற்றுள்ளார். இதேபோல, வெளியூர்காரர் என்ற விமர்சனத்துடன் தென்காசி தொகுதியில் களமிறங்கிய ஜெயக்குமாரும் 58 ஆயிரத்து 963 வாக்குளை பெற்றுள்ளார்.
கடந்த முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எஸ். ராமசுப்பு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 62,863 வாக்குகளை பெற்றுள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் 63 ஆயிரத்து 80 வாக்குகளை பெற்று மாநில அளவில் அதிக வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவீ சண்முகம் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 14 ஆயிரத்து 184 வாக்குகளையும், ஒட்டப்பிடாரத்தில் 12 ஆயிரத்து 873 வாக்குகளையும், ஸ்ரீவைகுண்டத்தில் 12 ஆயிரத்து 82 வாக்குகளையும், திருச்செந்தூரில் 11 ஆயிரத்து 28 வாக்குகளையும், விளாத்திக்குளத்தில் 7435 வாக்குகளையும், கோவில்பட்டியில் 5 ஆயிரத்து 335 வாக்குகளையும், 143 அஞ்சல் வாக்குகளையம் அவர் பெற்றுள்ளார்.
மாநில அளவில் ஏறத்தாழ 4.5 சதவிகித வாக்குகளை பெற காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் கிடைத்த வாக்குகள் உறுதுணையாக இருந்துள்ளன என்றே கூறலாம்.
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் தென் மாவட்டங்களில் தங்களுக்குள்ள வாக்கு வங்கியை நிரூபித்துள்ளதாகவே காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...