ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகம்: சிதம்பரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னேற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா ஆகியோர் சிதம்பரத்தில்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னேற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா ஆகியோர் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே.1-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜசபை மற்றும் நான்கு ராஜகோபுரங்களும் மகாகும்பாபிஷகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மே 2-ம் தேதி தேர்த்திருவிழாவும், 3-ம் தேதி அதிகாலை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் தரிசனம் மற்றும் சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சி நடைபெறுகிறது. மேற்கண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேகம் விழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா ஆகியோர் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் புறவழிச்சாலையில் சி.பரமேஸ்வரநல்லூர் ஊராட்சி பகுதியில் பிரம்மராயர் கோயில் அருகே அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்துமிடமான அண்ணா கலையரங்கம், நான்குவீதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு அதற்குண்டான பணிகளை ஆய்வு செய்தனர். ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சிதம்பரம் உதவிஆட்சியர் (பொறுப்பு) தினேஷ், கடலூர் கோட்டாட்சியர் ஷர்மிளா, சுகாதாரத்துறை இணைஇயக்குநர் ஜவகர்பாபு, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஏடிஎஸ்பிக்கன் திருமலைசாமி, ராமசாமி, சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், வட்டார போக்குவரத்துதுறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடன் சென்றனர்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதாவது:
நடராஜர் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குரித்து ஆய்வு செய்தோம். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புறவழிச்சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. வேணுகோபால்பிள்ளைத்தெரு, விழல்கட்டிபிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். சிதம்பரம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்துறையினர் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடராஜர் கோயில் உள்ளிட்ட இடங்களில் சிசி கேமராக்களா பொருத்தப்படும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன் ஏ.ராதிகா, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள், பொதுதீட்சிதர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...