வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமைப் பொறியாளர் ஜாமீன் மனு நிராகரிப்பு

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் மனு மீது அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2015, 7:38 am

ஷேக் அப்துல்காதர்

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் மனு மீது அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது. வரும் 13ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என முதன்மை நீதிபதி எம். நசீர்அகம்மது அறிவித்தார்.

திருநெல்வேலி வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளராக பணி செய்து வந்த முத்துக்குமாரசாமி, அத்துறையில் காலியாக உள்ள 7 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிப். 20 இல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து ஆரம்ப கட்டத்தில் ரயில்வே போலீஸார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வேளாண் அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்களின் நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதால் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து தற்கொலை தூண்டுதல், கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி குற்றவியல் நடுவர் மன்றத்தில் இம்மாதம் 5 ஆம் தேதி ஆஜர் செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரை இம்மாதம் 17 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதாகி சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில், ஜாமீன் கேட்டு திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை புதன்கிழமை
திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி எம். நசீர்அகம்மது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தலைமைப் பொறியாளர் செந்தில் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர் வெங்கடேஷமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்திலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என். சிவலிங்கமுத்து, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு முதல் கட்ட விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விவரங்கள் தெரிவிக்க வேண்டியது இருப்பதால் செந்திலுக்கு ஜாமீன் அளிக்க ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளுமாறு செந்தில் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில் காவல் அவகாசம் கேட்டதால், ஜாமீன் மனு மீதான விசாரணையை இம்மாதம் 13 ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) நீதிபதி நசீர்அகம்மது ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.