நெல்லை: தேர்தல் விரோதத்தில் அரசு பேருந்து நடத்துனர் கொலை
திருநெல்வேலி அருகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் அரசு பேருந்து நடத்துநர் ந. கிருஷ்ணன் என்ற அண்ணாத்துரை (45) திங்கள்கிழமை வெட்டிக் கொலை


திருநெல்வேலி அருகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் அரசு பேருந்து நடத்துநர் ந. கிருஷ்ணன் என்ற அண்ணாத்துரை (45) திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி அருகே மானூர் அடுத்துள்ள சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் பொன்னுசாமி. இவரது மனைவி ஜெயராணி, 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதையடுத்து ஊராட்சித் தலைவியின் கணவர் பொன்னுசாமி தரப்பினருக்கும், கம்மாளங்குளம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் தரப்பினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இந்த மோதல் காரணமாக கடந்த 2.8.2013 இல் ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக கடந்த 9.5.2014 இல் ஊராட்சித் தலைவியின் கணவர் பொன்னுசாமி கொலை செய்யப்பட்டார்.
ஜெயராணிக்கு பொன்னுசாமியின் சகோதரரான அரசு பேருந்து நடத்துனராக பணி செய்து வந்த கிருஷ்ணன் என்ற அண்ணாத்துரை உதவியாக இருந்து வந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை அங்குள்ள டீக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த கிருஷ்ணனை, அங்கு வந்த சிலர் அரிவாளால் சரிமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர்.இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், சம்பவ இடத்திலே இறந்தார். தகவலறிந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிருஷ்ணனின் உடலை தர மறுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தாழையூத்து டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். போலீஸாரின் பேச்சுவார்த்தையை அடுத்து கிருஷ்ணன் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் தொடர்பான விரோதத்தில் கம்மாளங்குளத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் கிருஷ்ணனை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...