ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி
ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் என். ரங்கசாமி கூறியுள்ளார்.


ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் என். ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. கலை பண்பாட்டுத்துறை செயலாளர் இரா. முத்தம்மா வரவேற்றார். பேரவைத் தலைவர் வா. சபாபதி தலைமை தாங்கினார். கல்வி அமைச்சர் தி.தியாகராஜன் நோக்கவுரை ஆற்றினார். எம்.எல்.ஏக்கள் க.லட்சுமி நாராயணன், வி.பாலன் வாழ்த்திப் பேசினர்.
75 பேருக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி முதல்வர் ரங்கசாமி சிறப்புரை ஆற்றியதாவது: கலைஞர்கள் தங்களைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் மக்களை மகிழ்விக்கக் கூடியவர்கள். புதுவை மாநிலத்தில் தொன்று தொட்டு பல்வேறு சிறந்த கலைஞர்கள் இருந்து வருகின்றனர். நலிந்த கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற கருத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விருதுகள் பெறுவதற்காக அதிகம் பேர் விண்ணப்பிப்பர். ஆனால் அவர்களைத் தேர்வு செய்வது பெரிதல்ல. சிறந்த கலைஞர்கள் விருதுக்கு விண்ணப்பிக்காமல் வெளியில் இருப்பர். அவர்களை தேடிக்கண்டுபிடித்து விருதுகளை வழங்க வேண்டும். இயல், இசை, நாடகம் மூலம் தமிழ் மொழியை கலைஞர்கள் வளர்த்து வருகின்றனர். கலைஞர்களுக்கு என்றும் ஊக்கம் அளிப்பது அரசின் கடமையாகும்.
புதுவையில் மேலும், மேலும் கலைஞர்கள் உருவாகவும், கலைகள் அழியாமலும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஜவஹர் சிறுவர் இல்லம், பாரதியார் பல்கலைக்கூடங்கள் மூலம் பலர் உருவாக்கப்படுகின்றனர். கல்வியோடு, விளையாட்டு, கலைகளிலும் குழந்தைகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடம் உள்ளது. குழந்தைகளும் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.
அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் கலைமாமணி விருதுகளை ஆண்டுதோறும் தவறாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் ரங்கசாமி. கலைபண்பாட்டுத்துறை இயக்குநர் ராகினி நன்றி கூறினார். விழாவின் ஒரு பகுதியாக பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...