கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே தாலிச் செயினை கழற்றி கொடுக்காததால், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம், காஞ்சிரவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி மகள் சௌமியா (22). இவருக்கும் கோயிக்கத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜேஷ் (25) என்பவருக்கும் இடையே இரு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம். திருமணத்தின் போது பெற்றோர் சௌமியாவுக்கு 17.5 பவுன் தங்க நகைகள், ராஜேஷுக்கு 8.5 பவுன் மாப்பிள்ளை செயின் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக வழங்கினராம். இத் தம்பதியருக்கு 1 வயதில் ஷானிபிரீத்தி என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே சௌமியாவின் நகைகளை ராஜேஷ் விற்றாராம். தாலிச் செயின் மட்டுமே மிச்சமிருந்ததாம். ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம்.
மேலும் இத் தம்பதியர் சௌமியாவின் தாய் வீட்டில் வசித்து வந்தனராம். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 6 மாதமாக ராஜேஷ் அவரது கோயிக்கதோப்பு பகுதியிலுள்ள அவரது குடும்ப வீட்டிலும், சௌமியா தனது குழந்தையுடன் காஞ்சிரவிளையில் உள்ள தாய் வீட்டிலும் தனித்தனியாக வசித்து வந்தனராம். இந்த நிலையில் அப்பகுதியினர் தம்பதியரிடையே பேசி இருவரையும் சேர்த்து வைத்தனராம். இதையடுத்து ராஜேஷ் அவரது மனைவி வீட்டில் தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் சௌமியா, அவரது தாய் சரஸ்வதி, சித்தி சாந்தி, அத்தை மேபல்சுகந்தி உள்ளிட்டோர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது அங்கிருந்த ராஜேஷ் கடனை அடைக்க என சௌமியாவிடம் தாலிச்செயினை கேட்டாராம். அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து சௌமியாவை தாக்கி அவரது கழுத்தை அறுத்துவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 7.5 பவுன் தாலிச் செயின், குழந்தையிடமிருந்து தலா ஒருபவுன் எடையுள்ள செயின், மற்றும் அரைஞாண் உள்ளிட்டவற்றை எடுத்துவிட்டு, வெளியே சென்றாராம். ரத்த வெள்ளத்தில் மிதந்த சௌமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறிது நேரத்துக்குப் பின் நித்திரவிளை காவல் நிலையம் சென்ற ராஜேஷ், அங்கிருந்த போலீஸாரிடம் மர்ம நபர்கள் தனது மனைவியை தாக்கி நகைகளை பறித்துச் சென்றதாக தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், ராஜேஷ் அவரது மனைவியை அரிவாள் மனையால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, வீட்டின் அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்த அரிவாள்மனை மற்றும் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றினர். குளச்சல் (பொறுப்பு) டிஎஸ்பி சங்கரேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரஸ்வதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.