6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அங்கன்வாடிகளை முன்பருவ கல்வி மையங்களாக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

அங்கன்வாடிகளை முன்பருவக் கல்வி மையங்களாக மாற்ற வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை

News image
Updated On :8 ஜனவரி 2015, 3:24 pm

முத்துகுமார்

அங்கன்வாடிகளை முன்பருவக் கல்வி மையங்களாக மாற்ற வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னையில் உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் அலுவலகத்தில் இளங்கோ என்பவர் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கிய அம்சமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் விளங்குகிறது. அந்த ஆணையத்தில் உள்ள அதிகாரியின் தவறான செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. இந்த நிலையில் தமிழக அரசின் மௌன நிலை சரியானதல்ல. உடனடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலச்சீர்திருத்த அவசர சட்டத்தால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டத்தின் படி அரசுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தினால் அதுதொடர்பாக நில உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆனால், இந்த புதிய சட்டத்திருத்தத்தால் நில உரிமையாளர்களின் அனுமதியின்றி நிலத்தை எடுக்கும் நிலை உருவாகும். மேலும், அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகள் வரை அரசுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படாவிட்டால் நிலஉரிமையாளரிடம் மீண்டும் வழங்கப்பட்டுவிடும். அந்த உரிமையும் இந்த சட்டத்திருத்தத்தால் மறுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். நிலம் எடுக்கும்போது சமூக பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறதா என்ற ஆய்வு நடத்தி செயல்பட வேண்டியது அவசியம். அந்த நிலை தொடர வழிவகை செய்ய வேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துவிட்டபோதிலும் அதற்கான பலனை இந்திய மக்கள் அடையவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. திருநெல்வேலியில் கந்துவட்டி, கௌரவ கொலைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேநதிரமோடி தலைமையிலான அரசு தாராளமய, தனியார் மைய அரசாகவும், இந்துத்துவா அரசாகவும் செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். கூடங்குளத்தில் 3 ஆவது மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைக்கக்கூடாது. இதை ஏற்கெனவே எதிர்த்துள்ளோம். அதுதொடர்பான அடுத்தக்கட்ட போராட்டங்களை ஆலோசித்து நடத்துவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டியக்கமாகவே செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இம் மாதம் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.

மிஸ்ட் கால் மூலம் கட்சியில் இணைவது போன்றவை நாடகம். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. 2015 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 98 ஒன்றியங்களில் மட்டுமே மத்திய அரசின் 100 நாள் வேலைஉறுதித்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனை மாற்றி அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளால் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில மொழியைப் பயிற்றுவிக்க சிறப்பு ஏற்பாடுகள் தேவை. அதேபோல அங்கன்வாடி மையங்களை முன்பருவக் கல்வி-1, முன்பருவக் கல்வி-2 (கே.ஜி. வகுப்புகள்) மையங்களாக மாற்றினால், அங்கிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இதுவரை எங்கள் கட்சியில் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. எங்களது அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 16 முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநிலக்குழுக் கூட்டத்தி்ல ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்றார் அவர்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.