கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 20-ல் தை அமாவாசை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தை அமாவாசை விழா செவ்வாய்கிழமை (ஜன. 20) நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தை அமாவாசை விழா செவ்வாய்கிழமை (ஜன. 20) நடைபெற உள்ளது.

இந்தியாவில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை அமாவாசை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 20ஆம் தேதி இவ்விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, உசபூஜை, நிவேத்ய பூஜை, ஸ்ரீபலி, உச்சிகால பூஜை உள்ளிட்டவை சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பனம் செய்வார்கள். இதற்காக அதிகாலை 4.30 மணிக்கு வடக்கு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில் நடை பிற்பகல் 1 மணி வரை திறந்திருக்கும்.

பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், இரவு 10 மணிக்கு திரிவேணி சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு ஆகியவை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர் அம்மன் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வருதல் நடைபெறும். தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாளபூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் இரா.ஞானசேகர், கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்கர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com