திருநெல்வேலி மாவட்டத்தில் 102 டிகிரி என்ற அளவில் வெப்பம் நிலவுகிறது. அணைகளின் நீர்இருப்பு குறைந்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழை கைக்கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
ஜூன் 16 இல் பாபநாசம், சேர்வலாறு அணைகளிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து சில தினங்கள் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்வரத்து உயர்ந்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழை இல்லை. கடும் வெப்பம் நிலவி வருவதாகவும், இதனால் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்படுவதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் 102 என்ற டிகிரி அளவில் வெப்பம் நீடித்து வருவதால் அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.
சனிக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 591.43 கனஅடியும், மணிமு்த்தாறு அணைக்கு விநாடிக்கு 244 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 46.88 கனஅடியும் நீர்வரத்து காணப்படுகிறது. பிற அணைகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
பாசனம், குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 904.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 300 கனஅடியும், பெருங்கால் மதகு பாசனத்திற்கு 75 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 85.40 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 95.60 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 85.70 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 59.80 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 61.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 69.23 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 30.83 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 85.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.47 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52.50 அடியாகவும் இருந்தது.
எதிர்பார்ப்பில் விவசாயிகள்:
தாமிரவருணி வடிநிலப் பாசனத்தில் கார் பருவ சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அணைகளிலிருந்து தினமும் 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்இருப்பு வேகமாக குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்தால்தான், செப்டம்பர் மாதம் வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது. நிகழ் பருவத்தில் தென்மேற்கு பருவ மழை கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.