/

கூடலூர் அருகே காட்டு யானை கூட்டத்தால் தென்னந்தோப்பு நாசம்

கூடலூர் அருகே நாயக்கர்தொழு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காட்டு யானைகள் புகுந்து தென்னந்தோப்பை புதன்கிழமை நாசம் செய்தது. பாதிக்கப்பட்ட விவசாயி நிவாரணம்

News image
Updated On :8 ஜூலை 2015, 2:59 pm

அறிவழகன்

கூடலூர் அருகே நாயக்கர்தொழு பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காட்டு யானைகள் புகுந்து தென்னந்தோப்பை புதன்கிழமை நாசம் செய்தது. பாதிக்கப்பட்ட விவசாயி நிவாரணம் வழங்குவதோடு வனப்பகுதியை சுற்றி அகழி, மற்றும் சூரிய மின்வேலி அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம் கூடலூர்- சுருளியாறு மின்நிலையம் சாலையில் உள்ளது நாயக்கர் தொழு. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை போன்ற தோட்ட விவசாயமும் மற்றும் புளி, இலவம், கடலை, மொச்சை, எள்ளு போன்ற பயிர்கள் மானாவாரியாகவும் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் நிறைந்த இப்பகுதியை அடுத்து மேகமலை வன விலங்கு சரணாலய எல்லை துவங்குகிறது. வனப்பகுயின் அடிவாரப்பகுதியான இந்த விளைநிலங்களில் அடிக்கடி யானை, கரடி, மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகள் இரவு பகல் என்று பாராமல் காவலுக்கு ஆள் அமர்த்தி வன விலங்குகள் நுழையாமல் இருக்க சத்தம் போட்டும் தாரை, தப்பட்டம் அடித்தும் பாதுகாத்து வருகின்றனர். நாயக்கர் தொழு பகுதியில் கேரள மாநிலம் பாலாவைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இத்தோட்டத்தை கூடலூரைச் சேர்ந்த விவசாயி ஜக்கையன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். புதன்கிழமை  வனப்பகுதியிலிருந்து அகழியைக்கடந்து இத்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம் தென்னை மரங்களை சாய்த்து குருத்துகளையும் தென்னஞ் சோகைகளையும் தின்று சேதப்படுத்தி உள்ளது. சுமார் 35 மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம் விவசாயிகள் அதிக சத்தம் எழுப்பியதால் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இந்த சேதம் குறித்து விவசாயி ஜக்கையன் வனத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், அகழி பெயரளவில் மட்டுமே உள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி தோட்டத்திற்குள் நுழைந்து விவசாயத்தை பாழ்படுத்தி விடுகின்றன. யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மீண்டும் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை சீரமைக்க வேண்டும், மேலும் சூரிய மின்வேலி தடுப்புகள் அமைக்க வனத்துறை முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளை அச்சுறுத்தம் வனத்துறை

இப்பகுதியில் இதுபோல் ஒருசில இடங்களில் வனவிலங்குகளால் விவசாயம் சேதப்படுத்தப்பட்டள்ளது. இதுகுறித்து வனத்துறையிடம் புகார் செய்யும் விவசாயிகளிடம்,  இதுகுறித்து பத்திரிக்கைகளிடமோ, தொலைக்காட்சியிலோ தகவல் கொடுக்கவேண்டாம். நாங்களே உங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருகிறோம். மீறி பத்திரிக்கைகளுக்கு தகவல் தந்தால் உங்களுக்கு இழப்பீடு கிடைக்காது என வனத்துறை அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.