பேரிடர்கள் எவ்வகையில் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

பேரிடர்கள் எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
Updated on
1 min read

பேரிடர்கள் எந்த வகையில் வந்தாலும் அதை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.     இந்த முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் தொடங்கி வைத்து பேசுகையில், 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இம்முகாமை மருத்துவத்துறை, ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இயற்கை பேரிடர்களான எதிர்பாராமல் ஏற்படும் சுனாமி, நிலநடுக்கம், மழையால் வெள்ளப்பெருக்கு, கட்டடங்களில் தீவிபத்தை தவிர்த்தல் போன்ற சமயங்களில் மருத்துவர்கள் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்தும், அவசர கால நடவடிக்கை குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது.

இம்மாவட்டத்தில் சதுரகிரி மலையில் அண்மையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்து  காப்பாற்றியதன் மூலம் பேரிடம் மேலாண்மை குறித்து அலுவலர்கள் அறிந்து வைத்திருப்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது.பேரிடர் என்பது நாம் எதிர்பார்க்கும் வகையிலோ அல்லது ஒரே வகையாகவோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் பேரிடர் எவ்வகையில் வந்தாலும் அதை எதிர் கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்கவும், இழப்பில் இருந்து மக்களை காப்பாற்றவும் இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, இணை இயக்குநர் கதிரேசன், சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் பழனிச்சாமி(விருதுநகர்), கலு.சிவலிங்கம்(சிவகாசி), உதவி திட்ட அலுவலர் மருத்துவர் ரூபன்ராஜ், மாவட்ட தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பங்கேற்ற பல்வேறு துறை அலுவலர்களுக்கு சென்னை தொழில் நுட்ப சுகாதார அலுவலர் மருத்துவர் ஆர்.மோகன்குமார், பேரிடர் மேலாண்மை ஆலோசகர் ஹரிபாலாஜி ஆகியோர் பேரிடர் காலங்களில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சி அளித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com