விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

விருதுநகர் அருகே ரூ.1.50 கோடியில் அனைத்து வசதியுடன் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை
விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?
Updated on
1 min read

விருதுநகர் அருகே ரூ.1.50 கோடியில் அனைத்து வசதியுடன் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கோட்டையூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள குருசாமி திருக்கோயில் தென்மாவட்ட அளவில் பிரசித்த பெற்ற திருத்தலம் ஆகும். அதனால், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் அனைத்தும் திருத்தலம் எதிரேயுள்ள சாலையில் நிறுத்தி ஆள்களை இறக்கி ஏற்றிச் செல்வது வழக்கமாகும்.

அதேபோல், திருத்தலத்தில் முக்கியமான விசேஷ நாள்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாடு செய்வதற்காக டிராக்டர், லாரி மற்றும் வாகனம் போன்றவைகள் மூலம் நூற்றுக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் சிரமப்படும் சூழ்நிலையிருந்தது.

இதைக் கருத்திற்கொண்டு இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற  கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் அக்கோரிக்கையை ஏற்று புதிதாக அனைத்து வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு 2013-14 நிதியாண்டில் கிராமப்புற அபிவிருத்திட்டம் மூலம் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தது. அதைத் தொடர்ந்து இப்பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதில், ஒரே நேரத்தில் 20 பேருந்துகள் வரையில் நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் பொருள்கள் வைப்பறை, வணிக வளாகம், சுகாதார வளாகம், குளியலறை, ஆண், பெண் பக்தர்கள் உடைமாற்றும் தனித்தனி அறைகளும், அதற்கருகே பக்தர்கள் வரும் வாடகை வாகனங்கள், லாரிகள் ஆகியவை நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பேருந்து நிலைய பணிகள் முடிந்து 6 மாதம் ஆகிறது. இதுவரையில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படாமலே உள்ளது. அதனால், காலதாமதம் செய்யாமல் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி கூறுகையில்,    இப்பேருந்து நிலையப்பணிகள் அனைத்தும் முடிந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் தொடங்குவது குறித்து அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com