சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை 3 ஆவது நாளாக

News image
Updated On :27 ஜூன் 2015, 11:54 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை 3 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 20, பாபநாசம் கீழ் அணை 12, சேர்வலாறு அணை 15, மணிமுத்தாறு அணை 1.2, கடனாநதி அணை 4, ராமநதி அணை 12, கருப்பாநதி அணை 6, குண்டாறு அணை 18.1, அடவிநயினார் அணை 25, கொடுமுடியாறு அணை 5, செங்கோட்டை 21, ஆய்க்குடி 3.2, ஆலங்குளம் 1.6, அம்பாசமுத்திரம் 4, ராதாபுரம் 4, சேரன்மகாதேவி 1.2, கன்னடியன் அணைக்கட்டு 3, சிவகிரி 2, சங்கரன்கோவில் 1.

2,800 கனஅடி நீர்வரத்து: நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,800 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து 1055 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 2.20 அடி உயர்ந்து 73.25 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,800 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 6.62 அடி உயர்ந்து 85.69 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,098 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் பெருங்கால் பாசனத்துக்கு 75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 85.50 அடியாக இருந்தது.

கடனாநதி அணைக்கு விநாடிக்கு 151 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு 60 கனஅடி திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 1.90 அடி உயர்ந்து 57.20 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 60.57 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 2.50 உயர்ந்து 52.50 அடியாக இருந்தது.

கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 124 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 64.64 அடியாக இருந்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் 18.36 அடியாக இருந்தது.

ஒரே நாளில் 8 அடி உயர்வு:

அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 126 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 73 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.56 அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து வெள்ளம்: கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 173 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 48.50 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் ஓரிரு நாளில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதியிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் சனிக்கிழமை 3 ஆவது நாளாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருந்தது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண்கள் குளிக்கும் பகுதியில் குளிக்க வனத்துறை அனுமதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.