மூன்று தொகுதி தேர்தல்: நாளைக்குள் துணை ராணுவம் வருகை - ராஜேஷ் லக்கானி தகவல்

மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 12 துணை ராணுவப் படையினர் புதன்கிழமைக்குள் (நவ.9) பணியில் ஈடுபட உள்ளனர்.
மூன்று தொகுதி தேர்தல்: நாளைக்குள் துணை ராணுவம் வருகை - ராஜேஷ் லக்கானி தகவல்
Updated on
2 min read

சென்னை, 

மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 12 துணை ராணுவப் படையினர் புதன்கிழமைக்குள் (நவ.9) பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த துணை ராணுவப் படையினர் அனைவரும் வாக்குப் பதிவு தினம் வரை (நவ. 19) தங்களது பணியைத் தொடர்வர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அளித்த தகவல்:-

மூன்று தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 12 துணை ராணுவப் படையினர் வரவுள்ளனர். அவர்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து 3 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 2 கம்பெனிகளும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 5 கம்பெனிகளும், தெலங்கானா ஆயுதப்படை 2 கம்பெனிகளும் அடங்கும்.

இந்த ஒவ்வொரு கம்பெனியிலும் சுமார் 72 முதல் 80 பேர் வரை அடங்கியிருப்பர்.
இதுவரை பறிமுதல் எவ்வளவு: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை ரொக்கப் பணமோ, இதர பரிசுப் பொருள்களோ பறிமுதல் செய்யப்படவில்லை.

தஞ்சாவூரில் ரூ.70.22 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அந்தப் பணம் விடுவிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில், இதுவரை ரூ.88 லட்சத்து 19 ஆயிரத்து 190 ரொக்கப் பணமும், 43 ஆயிரத்து 200 மில்லிலிட்டர் மதுபானமும், 41 கிலோ வெள்ளி, 3.25 கிலோ கிராம் தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

ரொக்கப் பணத்தில் ரூ.12 லட்சத்து 19 ஆயிரத்து 950-க்கான உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டதால் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டது. இப்போது, ரூ.75 லட்சத்து 99 ஆயிரத்து 240 ரொக்கப் பணமும், 3.25 கிலோ கிராம் தங்கமும் தேர்தல் துறை வசமுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்: மூன்று தொகுதி சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. வாக்குப் பதிவின் போது, வாக்குப் பதிவு சதவீதத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஐ.வி.ஆர்.எஸ்., முறை பயன்படுத்தப்படும்.

அதாவது, வாக்குச் சாவடிகளில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே நேரத்தில் கணினி வழியே அழைப்பு அனுப்பப்படும். அவர்கள் தங்களது பதிலை செல்லிடப்பேசி வழியே தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பர்.

இதன்மூலம், உடனுக்குடன் வாக்குப் பதிவு சதவீதத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலக அலுவலர்கள் அறிந்து கொள்ள இயலும். மற்றொரு தொழில்நுட்ப வசதியாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு சதவீதமும் கணினி வழியே அறியப்பட உள்ளது.

இதன்மூலம், வேட்பாளர்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெற தகுதி படைத்தவர்களா இல்லையா என்பதை விரைந்தும், துல்லியமாகவும் கணக்கிட இயலும். இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளது என்றார் ராஜேஷ் லக்கானி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com