டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எண்ணெய் படலத்தை அகற்றுவதில் தொடரும் தொய்வு புதிய அனுபவத்தால் திணறும் அதிகாரிகள்

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :31 ஜனவரி 2017, 3:52 pm

முகவை க.சிவக்குமார்

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருள் எண்ணெய் எர்ணாவூர்  பாரதியார் நகர் அருகே

கடற்கரையில் படர்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் இந்திய கடலோரக் காவல் படையின் சிறப்புக் குழுவினர் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இதில் சுமார் 4 டன் வரை எண்ணெய் படலம் அகற்றப்பட்டது. இன்னும் சுமார் 20 டன்வரை எண்ணெய் படலம் இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.  

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை எரிவாயு ஏற்றிக் கொண்டு விசாகபட்டனம் நோக்கிச் சென்ற எம்.டி.பிடபுள்யூ  மாப்பிள் என்ற கப்பலும், வாகன எண்ணெய் ஏற்றிக் கொண்டு மும்பையிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நோக்கி வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் துறைமுகத்தின் நுழைவுக் கால்வாயில் மோதிக் கொண்டன.  டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. 

கரை சேர்ந்த எண்ணெய் படலம் : : 

இந்நிலையில் சேதமான கப்பலிலிருந்து வெளியேறிய எரிபொருள் எண்ணெய் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரையிலும், கடல்நீரிலும் கருமை நிறத்தில் சுமார் ஒரு அடி உயர தடிமன் கொண்ட படலமாகப் பரவியிருந்தது. கடல் நீரில் சுமார் 400 சதுர மீட்டர் பரப்பளவிற்கு படர்ந்திருந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி கடலோரக் காவல்படையினர் தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடக்கத்தில் எண்ணெயை உரிஞ்சும் கருவிகள் மூலம் அகற்ற முயற்சிக்கப்பட்டது. ஆனால் 

பெரிய கற்களால் ஆன சுவர், கடல் அலை, மிதமிஞ்சிய தடிமன் படலம் போன்ற காரணங்களால் இக்கருவி மூலம் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தோல்வியடைந்தது. இதனையடுத்து காவல் துறை, தீயணைப்புத் துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை கோரப்பட்டது. ஆனால் இதில் குறிப்பிடும்படியான தொழில்நுட்பங்கள் பெற முடியவில்லை. இதனையடுத்து ஆள்களைக் கொண்டு வாளிகள் மூலம் அகற்றும் பணி தொடங்கியது. திங்கள்கிழமை சுமார் 4 டன் அளவிற்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டது. 

கழிவு நீர் அகற்றல் வாரிய லாரிகள்: 

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இப்பணி தொடர்ந்து நடைபெற்றது. சென்னை கழிவு நீர் அகற்றல் வாரியத்தைச் சேர்ந்த கழிவுநீரை உரிஞ்சம்  நவீன கருவிகள் அடங்கிய 3 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. மறுபுறம் ஆள்களைக் கொண்டு வாளிகள் மூலம் எண்ணெய் அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் உரிஞ்சியெடுக்கும் கருவிகள் மூலம் எண்ணெயை அகற்றுவது என்பது போதிய வெற்றியைப் பெறவில்லை. காரணம் உரிஞ்சும்போது கடல்நீரும் அதிக அளவில் வருவதால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் ரசாயன பொடிகளைத் தூவி எண்ணெய் படத்தை திடப்படுத்தும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 

    செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 10 டன் அளவிற்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எண்ணெய்க் கழிவுகளை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரிகளை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளேயே படிந்துள்ளது. இதனை வெப்பப்படுத்தினால் மட்டுமே இவற்றை வெளியேற்ற இயலும். இதனையடுத்து மீனவர்களை அதிக அளவில் பயன்படுத்தி எண்ணெய் படலத்தை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. 

எண்ணெய் படலத்தின் எடை 100 டன்னுக்கும் மேல் இருக்கலாம்?

   ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்தைப் பார்த்த கடலோரக் காவல் படை அதிகாரிகள் எண்ணெய் படலத்தின் மொத்த எடை 4 டன்வரை இருக்கலாம் எனக் கூறினர். ஆனால் இதுவரை இவர்களே சுமார் 20 டன் எடை அளவிற்கு எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் நேரில் பார்த்தபோது ஞாயிற்றுக்கிழமை பார்த்ததற்கும் செவ்வாய்க்கிழமை மாலை பார்ப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. காரணம் அதிக தடிமன் கொண்ட எண்ணெய் படலம் ஒரு போர்வை போல் அடர்ந்து பரந்துள்ளது. எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுரபி போல் எண்ணெய் படலத்தின் அளவு சிறிதும் குறைவதாகக் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்போது கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தின் அளவு சுமார் 100 டன்னும் மேலாக இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. 

தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை:

      இந்நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இப்பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துறைமுக, கடலோரக் காவல்படை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்த்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விபத்துக்கான காரணம், எண்ணெய் படலத்தை அகற்றுவதில் மேற்கொள்ள வேண்டிய 

தொழில்நுட்பங்கள், இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

   எண்ணெய் படலத்தை அகற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால் அனைத்து துறை அதிகாரிகளும் திணறி வருகிறார்கள் என்பதே இப்பிரச்னையில் இறுதி நிலவரமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.