புதுச்சேரி: கடந்த 2015-16-ல் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அரசு மருத்துவக்கல்லூரியில் நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காமராஜர் மருத்துவக் கல்லூரி சங்கத்தால் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மறறும் மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் நிர்வாகம் செய்யப்படுகிறது. இதில் மருத்துவக்கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், மனிதவளம் மறறும் சுகாதார வசதிகள் போதிய அளவில் உள்ளதா என செயலாக்கத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன.
மருத்துவக்கல்லூரிக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.433 கோடியில் வெறும் ரூ.265 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டது. இதனால் 33 உள்கட்டமைப்பு பணிகளில் 23 பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டன.
எம்சிஐ அங்கீகாரம் பெறுவதற்காக படுக்கைகள் எண்ணிக்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டது. அரசு பொது மருத்துவமனையில் இருந்து படுக்கைகளை மருத்துவக்கல்லூரிக்கு இடம் மாற்றி கணக்கு காட்டப்பட்டது.
80 சதவீதம் இருக்க வேண்டிய உள்நோயாளிகள் எண்ணிக்கை போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 2011-16 காலக்கட்டத்தில் 56 முதல் 72 சதவீதம் என குறைந்து விட்டது. இதனால் நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
மருந்துகள் இருப்பு இல்லை
மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய 348 இன்றிமையாத மருந்துகளில் வெறும் 145 மருந்துகள் மட்டுமே இருந்தன. அவற்றில் சராசரியாக 100 மருந்துகள் இருப்பில் இல்லாதது.
விதிகளை மீறி 778 தகுதி இல்லா பணியாளர்கள் நியமனம்
அரசின் உரிய அனுமதி இல்லாமல் 778 தகுதியில்லாத பல்நோக்குப் பணியாளர்கள் (எம்டிஎஸ்) மருத்துவக்கல்லூரியில் நியமிக்கப்பட்டனர். மொத்த ஊழியர்கள் தேவை 399 மட்டுமே என்ற நிலையில் தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டதால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து உருவாக வாய்ப்பு உள்ள வகையில் அவர்களை அறுவை சிகிச்சை கூடங்கள், படுக்கைகள் ஆய்வகங்கள் போன்ற இடங்களில் பணியில் ஈடுபடுத்தினர் என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.