திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த சோதனை இரண்டாவது நாளாக இன்று திங்கள்கிழமை தொடர்வது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவிலிருந்து ஜூலை 25-ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிலையத்தில் கிரவுண்ட ஹேன்ட்லிங் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் 3 பேர், பயணி ஒருவர், தங்கத்தைப் பெற்றுக் கொள்ள வந்திருந்தவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1,000க்கும் அதிகமான ஆமைக் குஞ்சுகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் விமான நிலையத்தில் விட்டுச் சென்றார். வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகளை, வெளிநாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பாம்பு, தேள், ஓணான், பல்லி உள்ளிட்ட பல்வேறு வகையிலான உயிரினங்கள் நூற்றுக்கணக்கில் கடத்தி வரப்பட்டது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு விமான நிலையத்திற்கு 3 கார்களில் வந்த அதிகாரிகள் குழு விமான நிலைய சுங்கத்துறை பகுதிக்குள் நுழைந்தனர். வனத்துறை அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் என பலரும் நினைத்திருந்த நிலையில், சிறிது நேரத்துக்கு பின்னர் தான், வந்திருந்தது சிபிஐ அதிகாரிகள் என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது.
அப்போது, சிங்கப்பூர் விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகள் முடித்து வெளியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் சிபிஐ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகள், பயணிகள் போர்வையில் இருந்த வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் இரவு வரை சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டது. துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஆய்வாளர்கள் 3 பேர் உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை நீடித்த சோதனை, இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவம் சோதனையால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
கடத்தல் சம்பவங்களில் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா அல்லது வியாபாரிகள் சிலர் பயணிகள் போர்வையில் கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடத்தல் சம்பவங்கள் தொடர்வதால், சிபிஐ இந்த அதிரடி சோதனையை நடத்தி வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









