தீர்ப்பின் 452 முதல் 457 வரையிலான பக்கங்களில், 1956-ஆம் வருடத்திய நதிநீர் தாவா சட்டத்தில் உள்ள "Scheme" என்பதை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், 30.9.2017 அன்று மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, இந்த ""ஸ்கீம்"" என்பதை உருவாக்குவதற்கு, மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார். ""ஸ்கீம் உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது"" என்ற மத்திய அரசின் வாதத்தை இப்போது வெளிவந்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மீண்டும் மத்திய அரசு இதே கருத்தினைச் சொல்லிக் காலம் கடத்த அனுமதித்துவிடக் கூடாது. அதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.ஆகவே, காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018ஆம் தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் "காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்" என்று வலியுறுத்த வேண்டும்.