/

அதிமுகவின் இப்போதைய ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றுவதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி்.உதயகுமார் கூறினார்.

News image
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Updated On :27 ஜனவரி 2024, 5:06 pm

DIN

மதுரை: முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றுவதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி்.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 56 சதவீதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமான நபர்கள் குணமடைந்து வருகின்றனர். கள நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப தளர்வுகள் வழங்கப்படுகிறது.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இருக்கும் வரை, மக்கள் வேறு யாரையும் முதல்வராக ஏற்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு பல சோதனைகளைக் கடந்து அதிமுகவை பெரிய இயக்கமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின்  எதிர்காலம் குறித்து பெரும் விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால் முதல்வர் பொறுப்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு வலிமையானது என்பதை நிரூபித்துக்காட்டி உள்ளார். அவருக்கு  துணையாக துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் அயராது பணியாற்றி வருகின்றனர். 

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் மினி பொதுதேர்தலைப்போல நடந்தது. அதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும்  துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்து மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது.

இந்த ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதேபோல கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி பயணம் தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதே  ஒற்றுமையோடு வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  இது தமிழக மக்களின் கருத்தாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.